- செய்திகள், மாவட்டச்செய்திகள்

மருத்துவ நுழைவுத் தேர்வை கைவிட வேண்டும் மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை, ஏப்.12-
மருத்துவ நுழைவுத் தேர்வை கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நுழைவுத் தேர்வு
மருத்துவ கல்வியில் சேருவதற்கு அகில இந்திய அளவில் மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. கூட்டாட்சி என்று ஒருபுறம் கூறிக் கொண்டு இன்னொரு புறம் இது போன்ற மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் செயலில் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு திட்டமிட்டு ஈடுபடுவது வேதனைக்குரியது.
மத்திய அரசுக்கு கோரிக்கை
மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் இந்த அடாவடி செயலுக்கு மத்திய அரசும் கண்ணை மூடிக்கொண்டு ஒத்துழைப்பு வழங்கியது மத்திய, மாநில உறவுகளை மேம்படுத்துவதில் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசுக்கு எந்தவித ஆர்வமும் இல்லை என்பதை எடுத்துரைக்கும் விதத்தில் அமைந்தது துரதிருஷ்டமானது. அ.தி.மு.க. அரசும் இந்த விஷயத்தில் எந்த விதமான அழுத்தமும் மத்திய அரசுக்கு கொடுக்காமல் இருந்து விட்டது அதை விட கொடுமையானது.
தி.மு.க. அரசு 2007-ம் வருடமே தமிழகத்தில் இது போன்ற மருத்துவ கல்வியில் சேருவதற்கான நுழைவு தேர்வை ரத்து செய்தது என்பதை நினைவு கூறும் அதே நேரத்தில் மத்திய அரசு அகில இந்திய அளவில் மருத்துவ பொது நுழைவு தேர்வு நடத்தும் முடிவை கிராமப்புற மாணவர்களின் நலனையும், சமூகநீதிக் கொள்கை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலனையும் மனதில் கொண்டு கண்டிப்பாக கைவிட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Reply