BREAKING NEWS

மருத்துவத் தவறுகள் தடுக்கப்பட வேண்டும்..!

சமீபத்தில் ராமநாதபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் கவனக்குறைவினால் வயிற்றுக்குள்  ஊசியை வைத்து தைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டாக்டர் மற்றும் நர்ஸ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

நாடெங்கிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் அவ்வப்போது இம்மாதிரியான மருத்துவத் தவறுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த செய்தியையும் நாம் கடந்து செல்லாமல் இதற்கான தீர்வு என்ன என்பதை விவாதிக்க வேண்டிய பொறுப்பும் கட்டாயமும் நமக்கு இருக்கிறது. நிர்வாக சீர்கேட்டைக் களைய உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளல் வேண்டும். “வெண்ணிற இரவுகள்” என்ற உலக புகழ்ப்பெற்ற ரஷ்ய நாவலில், ஆசிரியர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தின் உறை பணி குளிரினை இவ்வாறு குறிப்பிடுவார், “அந்தக் குளிர் எலும்புகளுக்குள் ஊடுருவி சிந்தனையோட்டத்தை முழுவதுமாகக் குளிரினைப் பற்றியே இருக்கச் செய்துவிடும். குளிரைத் தவிர வேறு எதைப்பற்றியும் உங்களால் நினைத்துப்பார்க்க முடியாது.” அதுபோலத்தான் இந்தியாவின் அரசு மருத்துவமனைகளும். அந்த ஸ்பிரிட் நெடி உங்களை வேறு எதைப்பற்றியும் சிந்திக்கவிடாமல் பதற்றமுற்ற மனிதனாக நம்மை மாற்றிவிடும். எப்படியாவது இங்கிருந்து வெளியேறினால் போதும் என்று அரசு மருத்துவமனையின் அவலத்தைப் நோயாளிகள் பொறுத்துக்கொண்டிருப்பார்கள்.

 

உண்மையில் நோய்வந்தால்கூட மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே வைத்தியம் பார்த்துக்கொள்ளக் கூடியவர்கள்தான் இந்தியாவில் அதிகம். வருமானத்தைவிடவும் மருத்துவச் செலவுகள் அதிகம் என்பது ஒருபுறமும், போதிய அரசு பொது மருத்துவமனைகள் இல்லாதது மறுபுறமும் என சாமானிய மக்கள் மருத்துவமனையை நாடாததற்கு காரணமாகும். கக்கன் போன்ற அரசியல் தலைவர்கள் கூட அரசு மருத்துவமனையை நாடிய காலம் அவரோடு மறைந்துவிட்டது. இப்படியிருக்க சாமானிய மக்களுக்கு மட்டும் எப்படி அரசு மருத்துவமனைகளின் மீது நம்பிக்கையெழும்?

நாட்டு மக்கள் அனைவருக்கும் மருத்துவமும், கல்வியும் கொண்டு சேர்க்க வேண்டிய அரசு, ஒட்டு ‘மொத்த உள்நாட்டு உற்பத்தியில்’ (GDP) சுகாதாரத்திற்கு வெறும் 1.4 சதவிகிதம்தான் நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், மேற்குறிப்பிட்டவாறு நாட்டு மக்கள் அனைவருக்கும் சுகாதாராத்தை உறுதிப்படுத்த வேண்டுமெனில் மொத்த உற்பத்தியிலிருந்து 6 சதவிகிதமான நிதி தேவைப்படுகிறது. இந்நிலையில் 1.4 சதவிகித நிதியினை வைத்துக்கொண்டு எப்படி அனைவருக்குமான சுகாதாரம் என்பதை உறுதிப்படுத்த முடியும்? நிதி ஒதுக்கீடிற்கும், அனைவருக்குமான சுகாதாரத்திற்கும் இடையில் இந்த மருத்துவர்கள்தான் பெரிதும் பாதிப்படைகிறார்கள். போதிய நிதி இல்லாத காரணங்களால், போதிய மருத்துவர்கள் இருப்பதில்லை. விளைவு… “அரசு மருத்துவமனையில் கண் ஆப்ரேஷனில் பார்வை இழப்பு, தவறான சிகிச்சையால் உயிரிழப்பு” போன்ற செய்திகள்.

கடந்த 5 ஆண்டுகளாக பெரு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வாராக்கடன் தள்ளுபடி என்பது 5.56 லட்சம் கோடி என்பதாகும். இந்தத் தள்ளுபடி, உண்மையில் அரசினுடைய அக்கறை யாருடைய நலன் சார்ந்து இருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது. மத்திய அரசினுடைய அணுகுமுறை இவ்வாறாக இருக்கையில், 2009-ல் மாநில அரசால் போடப்பட்ட அரசாணை எண் 354-ல் குறிப்பிட்டுள்ள உறுதியளிப்பின்படி மாநில அரசு மருத்துவர்களுக்கான ஊதியம், மத்திய அரசு மருத்துவர்களுக்கான ஊதியத்திற்கு இணையாக வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், மாநில அரசின் அரசாணை இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை..

மருத்துவ மேற்படிப்பிற்கான இடஒதுக்கீடு:

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியக்கூடிய மருத்துவர்களுக்கு, மருத்துவ முதுநிலை படிப்பிற்கான இடஒதுக்கீடு ஏற்கெனவே நடைமுறையில் இருந்த ஒன்றாகும். நீட் தேர்வு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட பிறகு இந்திய மருத்துவக் கவுன்சிலால் அரசு மருத்துவர்களுக்ககான மருத்துவ முதுநிலைப் படிப்பிற்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இதனுடைய காரணமாக, அரசு மருத்துவமனைகளில் முதுநிலை மருத்துவம் படித்த மருத்துவர்களுடைய எண்ணிக்கை குறையும். இந்த எண்ணிக்கைக் குறைவினால் நேரடியாக  பாதிக்கப்படக்கூடியவர்கள் அரசு மருத்துவமனைகளை நாடும் சாமானிய மக்களின்றி வேரெவருமிலர். முக்கியமான அறுவைச் சிக்சைகள், புதிய வழிமுறைகளை கண்டறிதல் போன்றவற்றில் பின்னடைவுகள் மட்டுமின்றி அதற்கான வாய்ப்பும் அறவே இல்லாமல் போகும் நிலையும் ஏற்படலாம். காலப்போக்கில் அரசு பள்ளிகளை போலவே அரசு மருத்துவமனைகளும் நலிவடைந்து போவதற்கான வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தாமல் இருக்க, சட்டமன்றத்தில் புதிய சட்டத்தினை இயற்றி அதன் மூலமாக மீண்டும் அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவிகிதம் இடஒதுக்கீட்டினை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் கவுன்சிலிங் மூலமாக மருத்துவர்களுக்கான பணியிடங்களை வழங்க வேண்டும். மருத்துவர்கள் வேலை செய்வதற்கான புறவயமான சாதக சூழலை அரசு உருவாக்க வேண்டும். அதனுடைய பலன்கள் நோயாளிகளின் நலன்களில் நம்மால் அறுவடை செய்ய முடியும்.

மருத்துவர்கள் பற்றாக்குறை:

’உலக சுகாதார அமைப்பின்’ (World Health Organization) வரையறுக்கப்பட்ட விதிகளின்படி ஆயிரம் நோயாளிகளிகளுக்கு ஒரு மருத்துவர் வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், யதார்த்தத்தில் நம் தேசத்தில் 6 லட்சம் மருத்துவர்களுக்கான பற்றாக்குறையும், 20 லட்சம் செவிலியருக்கான பற்றாக்குறையும் நிலவுவதாகவும், இந்தியாவில் 10,189 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைமை இருப்பதாகவும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘நோய்கள் மற்றும் நிதிசார் நடவடிக்கைகளுக்கான தரவு மையத்தின்’ ஆய்வறிக்கை சொல்கிறது. அதுமட்டுமின்றி இந்தியாவில் 65 சதவிகிதம் மக்கள் மருத்துவத்திற்காக தங்களது சக்திக்கு மேல் பணத்தை செலவிட வேண்டியுள்ளது. இதன் காரணமாக ஆண்டுதோறும் 5 லட்சம் பேர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது.

117 நாடுகளில் இந்தியா 102 ஆவது இடத்தை பிடித்துள்ளது. 30.3 புள்ளிகளுடன் இந்தியா இந்த இடத்தை பிடித்துள்ளது. 30.3 என்பது மிக மோசமான நிலை என குறிக்கப்படுவதாகவும். பொதுவாக இந்தப் பட்டினி குறியீட்டை கண்டறிய நான்கு முக்கியக் காரணிகள் கணக்கிடப்படுகின்றன. முதலாவதாக ஒரு குழந்தைக்கு தேவையான சத்துள்ள, சரிவிகித உணவு கிடைக்கிறதா..? என்பது, இரண்டாவது, 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தங்கள் உயரத்துக்கு ஏற்ப எடை கொண்டிருக்கிறார்களா என்பது, மூன்றாவது, 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தங்கள் வயதுக்கு ஏற்ப உயரத்தைக் கொண்டிருக்கிறார்களா என்பது ஆகும். நான்காவதாக குழந்தைகள் இறப்பு விகிதம் கணக்கில் கொள்ளப்படும். இப்படி கணக்கிடப்பட்ட இந்த பட்டியலில் இந்த ஆண்டு இந்தியா 102 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டு உலக அளவில் இந்தியாவுக்கு பின்னர் 16 நாடுகள் இருந்த நிலையில், இந்த ஆண்டு இந்தியாவுக்கு பின்னால் 15 நாடுகள் மட்டுமே உள்ளன. இதில் இந்தியாவை சுற்றி உள்ள பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், மியான்மர், சீனா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை விட முன்னிலை பெற்றுள்ளது.

கியூபாவிடமிருந்து பாடம் கற்போம்:

1959-ல் கியூபா பழைமைவாத முதலாளித்துவ பாதையிலிருந்து விலகி சோசலிச மாற்று பொருளாதாரப் பாதையில் பயணிக்க தொடங்கிய காலகட்டங்களில் அந்நாட்டின் சுகாதாரம் மிக மோசமானதாக இருந்தது. ஆனால், இன்று உலகில் எங்கு மருத்துவ உதவி தேவைப்பட்டாலும் முதலில் சென்று உதவுவது கியூபா மருத்துவர்கள்தான். தற்போது உலகத்தரம் வாய்ந்த மருத்துவக் கல்வியும் மருத்துவர்களும் கியூபா நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் பல நாடுகளின் மக்களுக்கும் பயன்பட்டு வருகின்றனர். கியூபா உள்நாட்டு உற்பத்தியில் மருத்துவத்திற்காக 11.1 சதவிகித நிதியை ஒதுக்குகிறது. ஆனால், இந்தியா? கியூபாவின் இவ்வளவு பெரிய மாற்றத்திற்கு காரணம் அங்கு கடைப்பிடிக்கக்கூடிய பொருளாதாரக் கொள்கைகள்தான். தற்போது இந்தியாவில் மருத்துவத்தையும், கல்வியையும் அரசு தன்னுடைய பொறுப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்துக்கொண்டு வருகிறது. இதற்கான காரணமும் மத்திய மாநில அரசுகள் கடைபிடிக்கக்கூடிய பொருளாதாரக் கொள்கைகள்தான். சேவை துறையாக இருக்க வேண்டிய மருத்துவம் இன்று தனியார் கைகளில் சிக்கி வணிக நோக்கோடு விற்கப்படுகிறது.

இதனைத் தவிர்க்க அரசு கொள்கை ரீதியான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். ஆனால், யதார்த்தத்தில் அப்படியான நடைமுறை சாத்தியங்களுக்கு வாய்ப்பில்லை. ஏனெனில் மத்திய அரசின் உதவிகளின்றி பெரிய அளவிலான மாற்றத்தினை துறைரீதியாக மாநில அரசு மேற்கொள்ள இயலாது. தற்போதைய மத்திய அரசின் நவீன தாராளமய கொள்கைகள் இந்த மாற்ற முன்மொழிவுகளுக்கு முரணாயிருக்கின்றன. அடிப்படையில் தவறுகளை வைத்துக்கொண்டு பிரதிபலன்கள் மட்டும் சரியாய் இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?

மருத்துவத் துறையில் இவ்வளவு பிரச்சனைகளை வைத்துக்கொண்டு சிறப்பாக மருத்துவர்களும் செவிலியர்களும் எப்படி பணியாற்ற முடியும்? தவறு செய்த மருத்துவர்களை துறை ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்துவது சரிதான். ஆனால், இந்த தவறுகளுக்கு மூலகாரணமான, திட்டமிட்டே தனியார்மயத்தை வளர்க்க பொது மருத்துவமனைகளை சீர்குலைக்கும் அரசின் போக்கினை நாம் என்ன சொல்வது.? மேலும், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களும் செவிலியர்களும் பணியில் உரிய கவனம் செலுத்த வேண்டும். தங்களது அஜாக்கிரதை என்பது ஏழை, எளிய சாமான்யர்களின் உயிருக்குக் கேடாகும் என்பதை உணர்ந்து அர்ப்பணிப்போடு மருத்துவ சேவையை செய்ய வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.

– கார்த்தி.ரா
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *