- உலகச்செய்திகள், செய்திகள்

மருத்துவக் காப்பீடு திட்டத்தில் ரூ.20 கோடி முறைகேடு அமெரிக்க சீக்கிய டாக்டருக்கு 9 ஆண்டு சிறை

ஹாஸ்டன், ஏப். 20:-

அமெரிக்காவில் மருத்துவக்காப்பீடு திட்டத்தில் ரூ. 19.88 கோடி (30லட்சம் டாலர்) முறைகேடு செய்ததாக, 60-வயதான ் அமெரிக்க சீக்கிய டாக்டருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சீக்கியர் பரம்ஜித் சிங் அஜ்ராவத்.  இவரின் மனைவி சுக்வீன் கவுர் அஜ்ராவத்.  மேரிலான்ட் மாநிலம், கிரீன்பெல்ட் நகரில் ‘ வாஷிங்டன் பெயின் மேனேஜ்மென்ட் சென்டர் ’ எனும் மருத்துவமனையை பரம்ஜித் சிங் நடத்தி வந்தார். இவர் சீக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

இந்நிலையில், டாக்டர் பரம்ஜித் சிங்கும், அவரின் மனைவியும் அளிக்காத சிகிச்சைக்கு போலி ஆவணங்கள் தயாரித்து, கடந்த 2011 முதல் 2014 மே மாதம் வரை அரசின் நலத்திட்ட பயணாளிகள் கணக்கில் கோடிக்கணக்கான டாலர் முறைகேடு செய்ததாக தெரியவந்தது.

இதையடுத்து, பரம்ஜித் சிங், அவரின் மனைவி சுக்வீன்கவுர் மீது போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கிரீன்பெல்ட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின் போது, இருவரும் எப்படி மோசடி செய்தனர், எவ்வளவு மோசடி செய்தனர், 2011 முதல் 2014 வரை நடந்த மோசடிகள் குறித்து போலீசார் ஆதரங்களை அளித்தனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், இருவரும் குற்றவாளிகள் என நீதிபதி உறுதிசெய்தார். இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் சுக்வீன்கவுர் திடீரென இறந்ததால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.

இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த கிரீன்பெல்ட் பெடரல் நீதிமன்றம், பரம்ஜித் சிங்குக்கு 9 ஆண்டுகள் சிறைதண்டனையும், மோசடியாக சேர்த்த ரூ. 20 கோடியையும்(30லட்சம் டாலர்) திருப்பிச் செலுத்த உத்தரவிட்டார்.

Leave a Reply