- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

மயிலாப்பூரில் பிரசித்திப்பெற்ற கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

சென்னை, ஏப். 4-
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பழமை வாய்ந்த…
சென்னை மயிலாப்பூரில் உள்ள  கபாலீஸ்வரர் திருக்கோவில் ‘கயிலையே  மயிலை. மயிலையே கயிலை’ எனப் புகழப்படுகிறது.  இந்த ஆலயம் தேவாரப்பதிகம் பாடல் பெற்ற 274 சிவஸ்தலங்களில்  257-வது கோவிலாகும்.  2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த  இந்த கோவில், திருஞானசம்பந்தரால் பாடப் பெற்ற கோவிலாகும். பல்வேறு  சிறப்புகள் நிறைந்த இந்த கோவிலின் ‘கும்பாபிஷேகம்’ நேற்று  நடந்தது.
கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. ஆகம விதிகள் படி யாக பூஜைகளை வேத வாத்தியார் பிரம்ம னிவாச சாஸ்திரிகள் தலைமையில், 120 சிவாச்சாரியார்கள் மேற்கொண்டனர். கபாலீஸ்வரருக்கும், கற்பகம்பாளுக்கும் தனித்தனியாக பூரண  கும்பம் வைத்து தினமும் யாகம் நடத்தப்பட்டது. தினமும் சிறப்பு பூஜைகளும்  நடத்தப்பட்டன.

கும்பாபிஷேகம்
இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு 12-வது கால பூஜை நடந்தது. காலை  7-15 மணிக்கு யாகம் பூர்த்தி அடைந்தது. 7-45 மணிக்கு யாகசாலையில் இருந்து  புனித நீருடன் கலசங்கள் கும்பாபிஷேகத்துக்காக புறப்பட்டது. காலை 8-30  மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது  கலசத்தில் உள்ள புனித நீரை சிவாச்சாரியார்கள் கும்பங்களில் அபிஷேகம்  செய்தார்கள். கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்ததும்  கும்பத்திற்கு தீபாராதனை நடந்தது.

கோவிலில் உள்ள அனைத்து விமானங்கள்,  ராஜகோபுரங்கள், நர்த்தன விநாயகர், கபாலீசுவரர், கற்பகாம்பாள், சிங்காரவேலர்  மற்றும் பரிவாரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பல ஆயிரக்கணக்கான  பக்தர்கள்  ‘சிவாய நம’ என கோஷம்  முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தை பார்க்க வந்த  பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் பாதுகாப்பு தடுப்புக்கள் அமைக்கப்பட்டிருந்தன. கும்பாபிஷேகத்தை காண வந்த முதியோருக்காக, வடக்கு மாடவீதி இந்தியன் வங்கி அருகில் இருந்து, கோவிலுக்கு வர இரண்டு பேட்டரி கார்கள் இயக்கப்பட்டன.

கண்காணிப்பு கோபுரங்கள்
நான்கு மாட வீதிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணியில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். 2 ஆம்புலன்ஸ் வண்டிகளும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் விடப்பட்டிருந்தன. கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை, கோவில் தக்கார் பி.விஜயகுமார் ரெட்டி, இணை ஆணையர் மற்றும் நிர்வாக அதிகாரி த.காவேரி ஆகியோர் செய்திருந்தனர்.

Leave a Reply