BREAKING NEWS

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! 20 ~ ‘‘உங்களோடு இணைந்து இருப்பேன்!’’

தொழிலாளர்களின் தோழன்… ஏழைகளின் ஏந்தல் என்றெல்லாம் புரட்சித்தலைவரைக் குறிப்பிட்டுப் போற்றுவதில் வியப்பொன்றும் இல்லை. ஏனெனில் அவர், தான் நடித்த திரைப்படங்களில் அற்புதமான… மக்களின் மனத்துக்கு நெருக்கமான கதாபாத்திரங்களை எவ்வாறு ஏற்று நடித்தாரோ, அவ்வண்ணமே, நிகழ்விலும் மெச்சத்தக்க வகையில் மேன்மை பொருந்தியவராக வாழ்ந்து காட்டினார். இதற்குப் பல சான்றுகள் பகரலாம்.

 

அவற்றின் வெளிப்பாடாகத்தான், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ‘‘தொண்டனாக… தோழனாக… தோளோடு தோள் நின்று உங்களோடு இணைந்து இருப்பேன்!’’ என்று 30.06.1977-ம் ஆண்டு தமிழ்நாடு தலைமைச் செயலக அலுவலர் சங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலக அலுவலர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பாக தலைமைச் செயலகத் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் குறிப்பிட்டு உரையாற்றியது இன்றும் நினைத்துப் பார்த்து நெகிழத்தக்கது. அவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி நினைத்துப் பார்க்கத்தக்கது …

 

 

‘‘நாட்டிலே உள்ள பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது என்பதை, ஐந்தாண்டுகள் அல்லது ஆறு ஆண்டுகள் இடையே பதவிக்கு வந்து செல்லுகிறவர்கள், ஒரு முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று கற்பனை செய்வதை விட அறியாமை வேறு இருக்காது என்பதை நீங்கள் நிச்சயமாக ஒப்புக்கொள்வீர்கள். இருபது, முப்பது ஆண்டுகளாக அனுபவம் பெற்ற நீங்கள், இந்நாட்டுக்கு என்ன செய்ய வேண்டும்  என்பதைச் சிந்தித்து, இன்னமும் உழைக்கின்றீர்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் போதே, மக்களால் அவ்வப்போது ஏற்படுகின்ற சூழ்நிலைக்கேற்ப நம்பிக்கைக்கு ஏற்பத் தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஒரு அமைச்சு, ஐந்தாண்டு அல்லது ஆறு ஆண்டுக் காலத்தில் எதைத்தான் தீவிரமாக – திட்டவட்டமாக – தீர்த்து வைத்து நிறைவேற்ற முடியும் என்பதை உங்கள் சிந்தனைக்குக் கேள்வியாக வைத்து, உங்களுக்குத் தெரியாத ஒன்றை உங்களுக்குப் புரிய வைக்க முற்படுவதான ஒரு நிலையை உருவாக்க நான் விரும்பவில்லை.

 

‘எந்த அமைச்சர்களானாலும், எப்படிப்பட்ட திறமை படைத்த அமைச்சர்களானாலும், பதவியிலே வந்து உட்காரும்பொழுது அவர்கள் பதவியைப் பற்றி எண்ணுவார்களேயானால், எவ்வளவு உயர்ந்த பதவி என்று நினைப்பார்களேயானால், மற்ற எல்லோரையும் விட மக்கள் நம்மைத்தான் அறிவாளி, விஷயம் தெரிந்தவர், உண்மையானவர் என்று நம்பியிருக்கிறார்கள் என்று நினைத்து ஒரு கண நேரம் தம்மை மறந்து அகந்தையிலே மூழ்கிவிட்டார்களேயானால் அதன் விளைவு எவ்வளவு பயங்கரமாக ஒரு நாட்டைத் தாக்கும் என்பதை வரலாறு நமக்கு எடுத்துக்காட்டியிருக்கிறது .

 

ஒரு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கின்றவர்கள் மக்களேதான் என்பது மக்களாட்சித் தத்துவத்திலே ஒரு முடிவான உண்மைதான் என்றபோதிலும், நடத்தித் தருபவர்கள் மக்களின் தேவையை நிறைவேற்றுவதற்கு உதவி செய்பவர்கள் உங்களைப் போன்ற பொறுப்புமிக்கவர்கள்தான் என்பதை இந்த நாடு என்றும் மறக்கக்கூடாது என்பதை நான் பல்வேறு நேரங்களில் கூறியிருக்கிறேன்.

 

இங்கு உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுவதெல்லாம், இங்கே நண்பர்கள் பேசும் போதும் சொன்னார்கள். இங்கே இருக்கின்ற உங்களுக்குத் தெரிய ஒன்றைச் சொல்லுவதற்கு நான் இங்கே வந்திருப்பது போல, அவர்கள் நமக்கு சொல்ல இருக்கின்றார்கள் என்ற கருத்தை வெளியிட்டார்கள். நாங்கள் இங்கே சொல்ல வரவில்லை, தெரிந்து கொள்ள வந்திருக்கின்றோம். உங்களைப் புரிந்து கொள்ள வரவில்லை. உங்களின் நிலைமைகளைப் புரிந்து கொள்ள வந்திருக்கின்றோம். ஊழியர்கள் என்ற பெயரையே நான் வெறுக்கிறேன் என்பதை இங்கே பணிவோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். யாருக்கும் யாரும் ஊழியர்களாக இருக்க வேண்டிய நிலை தமிழகத்தில் இருக்கக் கூடாது என்பதிலே எனக்கு நிச்சயமாக அக்கறை உண்டு. விரைவில் ‘ஊழியர்கள்’ என்ற பெயரையே மாற்றியமைக்க வேண்டும் என்ற ஆசையிலே நான் இருக்கின்றேன்.

 

‘இதை நான் சொல்லுவதற்குக் காரணம் இந்த நாட்டிற்காக உழைக்கின்ற நீங்கள்தான் இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர்கள் என்பது மட்டுமல்ல கோடிக்கணக்கான தமிழகத் தாய்மார்களின் மானத்தையும், தமிழகக் குழந்தைகளின் எதிர்காலத்தையும், தமிழ்நாட்டின் உயர்வையும் காப்பாற்றி, பேணி வளர்த்து, மற்ற மாநிலங்களில், இன்னும் சொல்லப்போனால் வெளிநாடுகளில், அங்கே இருக்கின்ற ஆன்றோர்கள் அனைவரும் உங்களைப் பார்த்துப் பொறாமைப்பட வேண்டிய மிகப் பெரிய பொறுப்பை நீங்கள் ஏற்றிருக்கிறீர்கள் என்பதை இங்கே நான் உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

 

இந்த நாடு யாரை நம்பியிருக்கின்றது ? 1967-ம் ஆண்டு அமரர் பேரறிஞர் அண்ணாவின் கையிலே இந்தத் தமிழகத்தை ஒப்படைத்த நேரத்தில், அண்ணா அவர்கள் சொன்ன தத்துவத்தை, கொள்கையை, இலட்சியத்தை இந்த நாட்டு மக்களின் நல்வாழ்வுக்குப் பொருத்தமானது என்ற நம்பிக்கையில், அதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில்  மக்கள் உணர்ந்து அந்த நிலைமையை உருவாக்கினார்கள் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

 

ஆனால், மீண்டும் என்னைப் போன்றவர்கள் மக்களிடத்திலே எங்கள் எண்ணங்களைச் சொல்லி, அமரர் பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகள் நாட்டில் சட்டங்களாக, திட்டங்களாக மாற்றப்பட்டு, அந்தக் கொள்கைகள் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற அமைப்புகளைச் செவ்வனே சீராக நிறுவித் தருகின்ற நிலைமையை ஏற்படுத்த வேண்டும் என்கிற நிலைமை தோற்றுவிக்கப்பட்டு, இன்றைய தினம் நாங்கள் வந்திருக்கின்றோம் என்றால் நாங்கள் அமைத்த ஒரு கட்சி தோன்றி ஏறத்தாழ ஐந்தாண்டு காலம் கூட ஆகவில்லை. இந்த இடைக்காலத்தில் நாங்கள் பட்ட துன்பங்கள் எதுவாக இருந்தாலும், தொல்லைகள் எப்படிப்பட்டவைகளாக இருந்தாலும், எத்தனையோ இளைஞர்கள் சாவுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக இருந்தாலும், நாங்கள் அதைப் பற்றி இப்போது பேச விரும்பவில்லை என்றாலும் ஐந்தாண்டு இடைக்காலத்தில் ஒரு கட்சி தோன்றி, மக்களுடைய அனுதாபத்தைப் பெற்று ஆதரவைப் பெற்று ஒரு ஆட்சியை அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

 

‘நண்பர்கள் எடுத்துக் கூறினார்கள். நண்பர் ஒருவர் ஒரு கதையையே சொன்னார்கள். என்னைச் சோழனாக்கினார். அவரைக் குந்தவையாக்கிக் கொண்டார். நல்ல வேளை ! இங்கும் அந்த வேடங்களைப் போட வேண்டிய அவசியம் எங்கள் இருவருக்கும் ஏற்படவில்லை. இங்கே ஏற்படுத்தவும் வேண்டாம் என்று நான் கருதுகிறேன். நான் இதனைச் சொல்லுவதற்குக் காரணம், கோட்டைக்குள் என்ன நடக்கின்றது என்பதைக் கவனிக்காமல் இருக்கின்ற ஆட்சி இருக்கக் கூடாது என்ற பேரார்வத்தில், எனது நண்பர் அவர்கள் அந்தக் கதையை அழகாக எடுத்துச் சொல்லும் பொழுது நான் உண்மையிலேயே பெருமைப்படுகின்றேன்;” என்று பெருமிதம் கொள்ளும் வகையில் புரட்சித் தலைவர்தம் பேச்சின் வீச்சு அமைந்தது

 

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

 

– ஔவை நடராசன்,

தொடர்புக்கு: thamizhavvai@gmail.com
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *