மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 17) பேராற்றல் மிக்க மாபெரும் சக்தி…! ஔவை நடராசன்

புரட்சித்தலைவருக்கு பார்க்கும் திசைகளில் எல்லாம் கருத்துச் சொல்லும் – எழுதிக் காட்டும் மதிவாணர்கள் பலர் இருந்தனர்.

எழுதிய பக்கங்களையோ – கட்டுரைகளையோ அவர் முறையாக எடுத்துச் சொல்வதில்லை. மனதுக்குள் நிலையாக வரைந்த ஓவியக் கோடுகளாக தம் சொற்களை அமைத்துக் கொள்வார். பலமுறை கேட்பாரே தவிர – ஒரு முறையும் எழுதிக்கொடுங்கள் என்று கேட்டதில்லை.

ஒருமுறைதான் நான் சொன்னேன், ‘‘பேரறிஞர் அண்ணாவைப் பற்றி நீங்கள் ஆற்றிய  உரை போல இன்னொருவர் பேச முடியாதபடி செய்து விட்டீர்கள். எழுத்தில் பிறந்த சொற்கள் இல்லை. அவை கழுத்தில் பிறந்த சொற்கள்’’ என்று நான் சொன்னேன். என்னை ஆரத்தழுவிக்கொண்டு தமிழே எனக்குத் தங்கப்பதக்கம் தருகிறது என்று நெகிழ்ந்து சொன்னார். அந்த உரைதான் அண்ணாவைப் போற்றிய உரை.

புரட்சித்தலைவரின் அந்த மேன்மைமிக்க உரை…

‘‘ ‘அண்ணா’ – இந்தப் பெயர் இன்று இந்தியத் துணைக் கண்டத்தில் ஒரு மகத்தான சக்தியாகத் திகழ்கிறது. இரும்புத் திரை போட்டு மாற்றார்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டு வந்த அந்தச் சக்தி, மறைக்க முடியாத ஆற்றல் மிக்க சக்தியாக உருவாகியிருக்கிறது. அரசியலின் ஆழ்ந்த ஞானம், சமூகத்தைப் பற்றிய தெளிவான அறிவு, மனித உள்ளத்தைப் புரிந்து கொள்ளும் மனத் தத்துவம், பொருளாதாரக் கூறுபாடுகள், கலாசார வரையறை, விஞ்ஞான சாதனைகள் போன்ற பல துறைகளையும் உணர்ந்துகொண்டு, அவற்றின் உண்மையான கோட்பாடுகளில் இரண்டறக் கலந்து, மறுமலர்ச்சி சக்தியாக அந்த சக்தி மலர்ந்திருக்கிறது.

பல துறைகளிலும் ஆழ்ந்த அறிவு பெற்றுள்ள இந்தக் காரணத்தாலேயே, தெளிந்த உள்ளங்களின் ஒருமித்த பாராட்டையும், பெருமதிப்பையும் அந்தச் சக்தி பெற்றிருக்கிறது. இந்திய அரசியலில் ஜனநாயகத்தை முழு அளவில் நம்பியிருந்த, வளர்க்க விரும்பிய உண்மையான ஜனநாயக அரசியல் அறிஞர் அண்ணா அவர்களே. எதிரிகள் ஆனாலும் அவர்களுடைய கருத்தையும் கேட்க வேண்டும் என்ற நெறியையும், எதிரிகளையும் தம் கருத்துக்கு இசையவைக்கும் ஆற்றலையும் படைத்துக் காட்டி, பண்புமிக்க அரசியலை இந்த நாட்டில் உருவாக்கியவர் அண்ணா அவர்கள்.

அறிஞர் அண்ணா அவர்களின் அரசியல் நுழைவுக்குப் பிறகுதான், வெவ்வேறு கருத்துடையவர்கள் ஒரே மேடையில் சந்தித்து விவாதிக்க முடியும் என்ற உயர்ந்த அரசியல் நாகரிகம் உருவாக ஆரம்பித்தது.  அரசியல் இயக்கம் என்பது உணர்ச்சிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் இடையே போடப்படுகிற ஒரு ‘கணக்கு’ என்ற நிலையை மாற்றி, ஓர் இயக்கத்தில் ஈடுபட்ட அத்தனை பேரையும் குடும்ப உணர்ச்சி கொள்ள வைக்கும் ஒரு புதிய சித்தாந்தத்தை ஏற்படுத்திய தத்துவவாதி அண்ணா அவர்களே.

விஞ்ஞானத்திலே ஈடுபட்டவர்கள் மனித வாழ்க்கை முறையைப் பற்றியோ, பண்பாட்டைப் பற்றியோ அதிகம் சிந்திப்பதில்லை ஏன், சிந்திப்பவர்களே குறைவு என்றும் கூறலாம்.

ஆனால், விஞ்ஞானம் ஏனைய துறைகளோடு கலந்து, பண்பாட்டோடு இணைந்து, மனிதனை ஆக்கும் சக்தியாக வளர்க்க வேண்டும் என்று விரும்பியவர் அண்ணா அவர்கள். மனிதர்களுடைய மனம் எதையும் சரியாக எண்ண வேண்டும் என்பதும், அந்த எண்ணத்தை வளர்ப்பதற்கு எல்லாவற்றையும் பற்றிய அறிவை அவர்கள் பெற்றே ஆக வேண்டும் என்பதும் அண்ணா அவர்களின் நோக்கம்.

பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சமூக மேம்பாட்டுக்குரிய தேவைகளைப் பற்றி சிந்திப்பது அரசியல்வாதிகளிடையே வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், மனித மனத்தையும், பொருளாதாரத்தையும், இயற்கைத் தத்துவத்தையும் ஒன்றாக இணைத்து, ஒரு புதிய சமுதாயத்தைக் காண கனவு கண்டு கொண்டிருந்தவர், அண்ணா அவர்கள்.

ஆற்றல் மிக்கவர்கள் மட்டுமே அரசியலில் தலைவராக வர வேண்டும் என்றிருந்த இலக்கணத்தை மாற்றி, ஆற்றல் மட்டும் போதாது, அன்பும், நல்ல பண்பும் வேண்டும், அப்பொழுதுதான் வளமான ஜனநாயகம் அரசியலில் வளர முடியும் என்ற புதிய அரசியல் கோட்பாட்டை உருவாக்கி, அதற்கு இலக்கியமாக ஓர் இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்தவர் அண்ணா அவர்களே!

எல்லோராலும் ‘‘தகுதியுள்ள ஓர் உயர்ந்த ஸ்தானத்தைப் பெறும் அரசியல்வாதி’’ என்று பாராட்டப்படும் நிலை யாருக்கும் எளிதில் கிடைத்து விடாது.  எந்தத் தனி மனிதரும் பிறரால் பாராட்டப்படும்போதோ, உற்சாகப்படுத்தப்படும்போதோ, பெருமைப்படுத்தப்படும்போதோ தன்னையே மறந்து விடும் நிலையை அடைவது தவிர்க்க முடியாததாகும்.

சர்வாதிகார நிலைமையில் செயல்படும் போக்கு அந்தக் குறிப்பிட்ட மனிதரிடம் உண்டாவதும் இயற்கையாகும். ஆனால், அண்ணாவைப் பொறுத்த வரையில் இது நேர்மாறானது. எவ்வளவுக்கெவ்வளவு அவர் உயர்த்தப்பட்டாரோ, தோழர்கள், தொண்டர்கள், பின்பற்றி வருபவர்கள் முதலியவர்களால் எவ்வளவுக்கெவ்வளவு பாராட்டப்பெற்றாரோ- அந்த அளவுக்கு மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு முன்னிலும் அதிக அடக்கத்தோடு, தன்னை மிக மிகச் சாதாரண குடிமகனாக்கிக் கொள்ளும் பண்பை அண்ணாவிடத்தில் நான் கண்டேன்.

உலக அனுபவமே பெறாத சிறு குழந்தைகளுக்கும் கூடப் பழி வாங்கும் நோக்கம் உண்டாவது தவிர்க்க முடியாததாயிருக்கிறது. ஆனால், அண்ணா அவர்களோ, தன்னையே இகழ்ந்து தலைகுனியச் செய்யும் அளவுக்கு ஏசிச் செயல்படும் ஒருவர், தமது கட்சிக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவராயிருந்தால் கூட, தம் கட்டளையை மீறிக் கட்சியில் இருக்கவே முடியாதவர் என்றாலும் கூட, அவர் மேல் அனுதாபத்தைச் செலுத்துவாரே தவிர – அவருக்காக மற்றவரிடம் பரிந்து வாதாடுவாரே தவிர – பழிவாங்கும் உணர்வு அவர் உள்ளத்தில் இடம் பெறாத ஒன்றாகும்.

அண்ணா அவர்கள் சொல்லியிருக்கும் ஒரு வாக்கியமே இதற்கு உதாரணமாக அமைந்திருப்பதைச் சொல்லலாம். ‘‘என்னை யார் வேண்டுமானாலும் வெறுக்கட்டும்: என்னை அழித்துவிடவே முயலட்டும். ஆனால்,  நான்மட்டும் யாரையும் இழக்க முடியாது. அதைச் செய்ய வேண்டுமென்றால் அதற்கு வேறு ஆளைப் பாருங்கள்’’ என்பார். – அவர்தான் அண்ணா! தமிழ் மக்களின் தனித் தலைவர். ஆனால், சில சமயம், இவருடைய நல்ல பண்பைச் சிலர் தங்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்தும்கூட அவர்களும் ஒரு காலத்தில் திருந்தி நல்வழிக்கு வந்து விடுவார்கள் என்று நம்பிக் காத்திருந்தவர் நம் அண்ணா.  பலமுறை அப்படி நிறைவேறியும் இருக்கிறது. தம்முடைய கட்சி வெற்றிபெற வேண்டும் என்பதற்காகச் சமுதாய நலனையோ, தனிமனிதர்களின் வளர்ச்சியையோ, சிந்திக்காமல் செயல்படுவதை அறவே வெறுத்தவர் அண்ணா. அவருக்குத் தனி மனிதர்களின் வளர்ச்சியும், அதன் மூலம் சமுதாய வளர்ச்சியுமே முக்கியம்.

கட்சி என்பது என்ன? பல மனிதர்களின் சேர்க்கைதானே? சமூகமும் அப்படித்தானே! தனி மனிதர்களை வளர்க்க முடியாத கட்சி, சமுதாயத்தை எப்படி வளர்க்க முடியும்? அதனால் தமது கட்சியில் உள்ள எல்லோருமே அறிவிலோ, அனுபவத்திலோ, திறமையிலோ, தியாக உணர்விலோ, தகுதியிலோ குறைந்தவர்களாக இருக்கக் கூடாது என்று அவர் கருதினார். பொதுவாகவே அரசியல் கட்சிகளில் உள்ள தலைவர்கள் திறமை மிகுந்த பிறர் தங்கள் கட்சிக்குள் வந்தால், எங்கே தங்களுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சுவதைக் காண்கிறோம்.

இதற்கு மாறாக அண்ணா அவர்கள், அறிவும், திறமையும் மிகுந்தவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகக் கட்சியில் இருக்கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு கட்சிக்கு நல்லது என்று கருதியவர். அவர்களை வரவேற்கவும் செய்தார்; வளர்க்கவும் செய்தார். வளர்ந்த கடாவே மார்பில் பாய்வது அரசியல் இயக்க வரலாறுகளிலே வழக்கமாக நடைபெற்று வருகிற சம்பவம் என்றாலும் கூட, அப்படிப்பட்ட தீய சக்திகளால் தம்மை அழித்துவிட முடியாது என்ற தன்னம்பிக்கையும், ஆற்றலும் படைத்திருந்தவர்.

எத்தனையோ அரசியல் கட்சிகளில் ஒவ்வொரு தகுதியில் சிறந்தவர் வளர்வதைக் கண்டிருக்கிறோம்.  ஆனால், அழகு தமிழில் எழுதக் கூடிய ஆற்றல் பெற்றோரை, உணர்ச்சி மிக்க தமிழில் உரை நிகழ்த்தும் திறன் மிக்கோரை, புதுமைக் கருத்துப்படைக்கும் சிறப்பு வாய்ந்த நாடக ஆசிரியர்களை, துள்ளும் தமிழ் நடையிலே கவிதைகள் பொழியும் நல்ல பல கவிஞர்களை, பகுத்தறிவுடன், இன்பத்தைக் கலந்து அளிக்கும் இலட்சியம் உள்ள கலைஞர்களை, பண்புமிக்க அரசியலை நடத்தக்கூடிய தகுதிமிக்க தலைவர்களை இன்னும் பலப்பல அரிய சக்திகளையெல்லாம் இந்த நாட்டில் தோற்றுவித்திருக்கும் பேராற்றல் மிக்க மாபெரும் சக்தி, அறிஞர் அண்ணா அவர்கள்தான் !

இவரால் தோற்றுவிக்கப்பட்டவர்களில் பலர் வேறு இயக்கங்களில் இருப்பார்கள். ஆனால், தோற்றுவிக்கும் சக்தியாக இருப்பவர் அவர் என்பது நான் கண்கூடாக அறிந்த உண்மை! எத்தனையோ பேர் தொண்டர்களால், தலைவர்களாக்கப்படுகின்றனர். ஆனால், அண்ணாவின் ஸ்தானம் யாராலும் அளிக்கப்பட்டதில்லை. அந்த ஸ்தானத்துக்காகவே அவர் உருவானவர்! அவருடைய செயல் அவருக்கு அந்த ஸ்தானத்தைக் கொடுத்ததே தவிர, பிறருடைய செயலால் கொடுக்கப்பட்டதுமில்லை: பிறரிடமிருந்து வாங்கிக் கொடுக்கப்பட்டதுமில்லை. அவருக்கு என்று இருந்தது அந்த ஸ்தானம். அவருக்கே சொந்தமாகிவிட்டது  அந்த ஸ்தானம்.

இந்த உயர்ந்த ஸ்தானத்தின் ஏகப் பிரதிநிதியாகத் திகழ்ந்த அவர், மக்களின் பிரதிநிதிகள் என்ற பெயரில் ஆட்சி நடத்திய ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கும், எதிர்ப்புகளுக்கும் ஈடு கொடுத்து பொது இயக்கங்கள், போராட்ட இயக்கங்கள் ஆகியவற்றை நடத்துகிற முறையில், அமைதியையும் அற வழியையும் தாம் துன்பத்தை ஏற்றுக்கொண்டு, பிறருக்குத் துன்பம் தராத உள்ள பண்பையும் மேற்கொண்டதில் காந்தியடிகளுக்கு இணையாக  விளங்கினார்!

அண்ணாவின் எழுத்து மனித உள்ளத்தைப் பண்படுத்தும்! அண்ணாவின் பேச்சு! மனிதனை மனிதனாக்கும்! அண்ணாவின் சிந்தனை! நாட்டின் நலிவைப் போக்கும்! அண்ணா சிரிப்பார், தம்மை இழிவுபடுத்துபவர்களைப் பார்த்து, அண்ணா கண்ணீர் சிந்துவார்: எதிரிகளேயானாலும்கூட அவர்களுக்கு ஏற்படும் துன்பத்தைக் காணச் சகிக்காமல் அண்ணா வெகுண்டெழுவார். பிறர் ஜாதி பேதத்தை வியாபாரமாக்கும்போது, அண்ணா தொல்லைப்படுவார்; மக்களுக்கு அரசியல் விழிப்பு ஏற்படுவதற்காக அண்ணா நடிப்பார்; சமூகத்தின் சீரழிவைப் போக்குவதற்காக உதித்த அவர் ஒரு புதிய சமுதாயத்தின் சிற்பி.

திறமை, தந்திரம், கண்டிப்பு இவற்றையெல்லாம் கடந்த பாச உணர்வுத் தீ கொழுந்து விட்டு எரிய அந்தப் பண்புச் சுடர் ஒளி வீசுகின்ற மனித குலத்தின் தத்துவவாதி! பழைமையையும் புதுமையையும் இணைத்து, பாசத்தின் அடிப்படையில் ஜாதி பேதம் போன்றவைகளை ஒழித்து,  மனித இனத்தை ஒன்றாக்கிய அரசியல் ஞானி! விஞ்ஞானத்தில் மெய்ஞ்ஞானத்தைக் கலந்து, வாழ்க்கையில் வளம் பெருகச் செய்து, ‘அன்பு’ என்னும் அகன்று விரிந்த சமதர்மக் கோட்பாட்டின் செந்நெறிகளைச் செயற்படுத்தும் இலட்சியத்தை மேற்கொண்டு, புதிய சமுதாயத்தைத் தோற்றுவித்த வழிகாட்டி! அவர்தான் அண்ணா.’’ என்று புரட்சித்தலைவர், அண்ணாவுக்கு புகழாரம் சூட்டி மகிழ்ந்தார்.

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

– ஔவை நடராசன்,

தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *