மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 16) எம்.ஜி.ஆர் மெய்மறந்து கேட்ட இசை..!

என் வாழ்வில் நான் அரசு செயலர் பதவியில் பணியாற்றியது ஒரு பெரிய வாய்ப்பாகும்.  பதவி நிலையில் எவரும் எளிதில் பெற முடியாத பதவி என்றாலும், அந்தப் பதவி நிலையில் இருந்தபோது நான் பழகிய பெருமக்கள் சிலரை எண்ணிப் பார்க்கும்போது என் மனம் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளது. நிரம்பித் ததும்பும் அந்த நினைவலைகள் மனத்தை நெகிழ்த்தும்போது, அங்கே அரசு செயலர் வாய்ப்பை வாஞ்சையோடு  வார்த்தளித்த புரட்சித்தலைவரின் புன்னகை முகம் என் உள்ளமெல்லாம் ஒளிர்கிறது.

ஈடில்லாத இசைச் சித்தர் என்று நான் எண்ணிப் புகழ்ந்ததைவிட அண்ணா கேட்டு மகிழ விரும்பிய இசைச்சித்தர் அண்ணல் சிதம்பரம் ஜெயராமன். நான் அரசு செயலாளர் பொறுப்பில் இருந்தபோது, இசைக் கல்லூரியில் தலைமைப் பொறுப்பும் எனக்கு அமைந்திருந்தது.  அந்த நிலையில்தான் சிதம்பரம் இசைச்சித்தர் அவர்களைத் தமிழ்நாடு இசைக்கல்லூரியில் முதல்வராக அமர்த்தம் செய்து ஆணை வந்தது.

என்னை அறியாமல், அந்த ஆணையை வழங்கியபோது, என் கண்களில் நீர் மல்கின.  இசைச் சித்தரின் பெயரைக் கேட்டாலும் அவர் குரல் செவியில் விழுந்தாலும் என் நாடி நரம்பெல்லாம் துடிக்கும்.  ‘தங்கப் பதுமை’ என்ற படம் வந்த நேரமது.  தவறுக்கும் தவறான தவற்றைப் புரிந்துவிட்டுத் தனிப்பட்டுப் போனவன் நான் ஞானத்தங்கமே! என்ற தொடரையும் வீணைக்குரியோனின் மைந்தர்கள் அமர்ந்துகொண்டு வெண்பா விருத்தம் தாழிசை பாடுவது எந்தப் பண்களில் என்று கேட்டபோது இலங்கை வேந்தர் இராவணன் தன் இசைப்புலமையால் பண்களின் பெயர்களைச் சரவரிசையில் பாடிக் காட்டுவதைத் திரையுலகத்தில் ஒரு பெரிய வரலாறு என்று கூற வேண்டும்.

இசைச்சித்தர் பதவி ஏற்பதற்காகச் செயலர் அறைக்கு வந்தார்.  நான் மாலையில் வரவேற்றேன்.  என்னுடைய துறையைச் சார்ந்தவர்களும் வெவ்வேறு துறையில் பணியாற்றியவர்களும் சிதம்பரம் இசைக்கடலைக் காண்பதற்காக நிரம்பி வழிந்தார்கள்.

குரல்தான் இடிக்குரலாக இருந்தாலும் அவர் உடல் சிறிது  மெலிந்த நிலையிலும், தளர்ந்த அமைதியிலும் இருந்தது.  அரை மணி நேரம் தமது இசை வாழ்வைப் பற்றி பேசியதோடு தமக்கு இந்தப் பதவியை வழங்கிய புரட்சித்தலைவருக்குக் கர்நாடக இசைத் திறமையுண்டு, அவர் ஒருமுறை ‘அரசிளங்குமரி’ படத்தில் ஒரு பித்தனைப்போல நடித்தபோது, ‘காலைத் தூக்கி நின்றாடும்’ என்ற பதத்தைப் பாட வேண்டும் என்று சொல்லி, அதற்கு அவர் அபிநயம் பிடித்தது எவராலும் மறக்க முடியாது என்று மனம் நெகிழச் சொன்னார்கள்.

இயலிசை இலக்கணம் நன்கு தேர்ந்து தெளிந்த இசைச்சித்தர் அவர்கள், பள்ளிச் சிறுவனாக இருந்த காலத்திலேயே இசை இமயம் பாடகலிங்கப் பிள்ளை அவர்களின் கச்சேரிகளில் அவர் மடியில் கிடந்துகொண்டு அவர் பாடும்போது இராகத்தையும் சரளி வரிசையையும் சொன்ன சிங்கக்குட்டிதான் சிதம்பரம் ஜெயராமன் என்று இசை சொற்பொழிவில் சிகரமாகத் திகழ்ந்த எம்பார் விஜயராகவாச்சாரியார் இசைச்சித்தரின் பாராட்டு விழாவில் பேசியது, இன்றும் என் கண்முன் நிற்கிறது.

இசைச்சித்தர் அவர்கள், இசைக்கல்லூரியில் முதல்வராக இருந்தபோது, மறக்க முடியாத சில மாற்றங்களைச் செய்தார்கள்.  தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடங்கி வகுப்புகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதையும், அகர முதலாக உயிரெழுத்துகளிலேயே இசையின் அமரோசையையும் வெள்ளோசையையும் இணைத்துப் பாடிக்காட்டலாம் என்பதற்கு ஒரு முறை மூன்று மணிநேரம் வகுப்பெடுத்தார்கள் என்பதை இந்த நேரத்தில் நான் குறிப்பிடுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

இப்படிச் சில திங்கள் கழிந்ததும், நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை என்று எல்லோரும் போற்றிய பானுமதி அம்மையார் தமக்கும் இசைப்புலமை உண்டு என்று புரட்சித்தலைவரிடம் ஒரு பதவி கேட்டிருந்தார்.

இசைக்கல்லூரியில் இயக்குநராக இசைச்சித்தரையும், கல்லூரி முதல்வராகப் பானுமதி அம்மையாரையும் அமர்த்தலாம் என்று நான் குறிப்பெழுதியிருந்தேன்.

உயர்கல்வித் துறையின் இணை இயக்குநராக இருந்த அறிஞர் கா.மீனாட்சி சுந்தரம் ஆன்றவிழ்ந்தடங்கிய பெரும் புலமை வாய்ந்தவர்.   அவர் ஒரு நாள், ‘‘என்ன ஔவை?  இசைச்சித்தர் திட்டமிட்டுத் தந்த தமிழிசைப் பாடல்கள், பாடங்கள் அனைத்தையும் மாற்றிவிட்டு அம்மையார் தெலுங்குப் பதங்களையே பாட வேண்டும் என்று மாற்றி இருக்கிறாரே?’’ என்று முறையிட்டார்.

இசைச்சித்தர், நகைத்துக் கொண்டு சொன்னார், ‘‘நடிப்புக்குத்தானே அந்த அம்மா இலக்கணம் வகுத்தார்?  இசைப் படிப்புக்கு இல்லையே!  நடப்பது நடக்கட்டும்’’ என்று சோர்ந்து கூறினார்.

இசைச்சித்தர், பெயருக்குத்தான்  இயக்குநராக இருந்தார்.  எந்த வாய்ப்பும் வசதியும் இல்லாத வாய்மூடிய பதவியாக அது அமைந்தது.  புரட்சித்தலைவரும் எங்கள் முறையீட்டைக் கேட்டு ஒருவிடையும் சொல்லாமல் பொறுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டார்.

கலை உலகத்தில் நடிகராக, பாடகராக, எவரும் எட்ட முடியாத எல்லைகளை எல்லாம் தொட்டுப் பார்த்து, பாடல் என்ற அளவில் மட்டும் பிறகு ஓய்ந்தார்கள்.  தஞ்சை  இராஜராஜனின் 1000 ஆண்டு முடிசூட்டு விழா நிகழ்ச்சியைத் தஞ்சையில் மிகப் பெரிதாக நடத்தினோம்.  இசை அரங்கத்தில்,  தொடக்கமாக இசைச்சித்தரை பாட வைக்க வேண்டும் என்று புரட்சித்தலைவர் விரும்பிச் சொன்னார்கள்.  ஓரளவு நலிந்த நிலையில் மூன்று மணி நேரம் பாடுகிறேன் என்று, இரண்டு மணி நேரத்தில் பாடுவதை நிறுத்திக் கொண்டார்.  புரட்சித்தலைவர், அந்த இரண்டு மணி நேரமும் அமர்ந்து மெய்மறந்து கேட்டார்கள்.

பிறகு நான், தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குத் துணை வேந்தராகச் சென்றேன்.  புரட்சித்தலைவரின் வாழ்வும் நிறைவடைந்தது.  இசைக் கல்லூரியின் இயக்குநர், முதல்வர் பதவி இரண்டுமே பானுமதி அம்மையாருக்குத் தரப்பட்டது. நான் சென்னையில் இருந்தபோதெல்லாம் திங்களுக்கு ஒருமுறை இசைச்சித்தரின் இல்லம் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.  அவரும் என்னைக் கண்டு அளவளாவ அண்ணா நகருக்குப் பலமுறை வந்திருக்கிறார்.

நான் தஞ்சையில் இருந்தபோது, தமிழ் பல்கலைக்கழகத்தில் அவருக்கு ஒரு பெரும்  பாராட்டு விழா நடத்திப் பரிசு வழங்க வேண்டும் என்று முயன்றேன்.   பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்குகிற மரபு தஞ்சையில் தொடங்கப்படவில்லை.  என் கனவு நிறைவேறாமல் போயிற்று.

நலிந்து மெலிந்து மறைந்தாலும் அவருடைய ஓங்கிய தீக்குரல் என்றும் ஒலிக்கும்.  இசைச்சித்தர் இசை உலகத்தில் ஒருவராகவே வாழ்ந்தார்.

“ஒருவன் என்னும் ஒருவன் காண்க”-

என்ற திருவாசகத் தொடர்தான் அவருக்குப் பொருந்தும்.

நடிகர் நம்பியார் கூறிய அரிய தகவல்…

1992-ம் ஆண்டு நான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தபோது, ஒருமுறை நடிகர் எம்.என்.நம்பியர் அவர்களை சந்தித்தேன்.

அவர் என்னிடம், புரட்சித்தலைவரைப் பற்றி ஓர் அரிய தகவலை தெரிவித்தார். அதனை உடனடியாக சாவி பத்திரிகை ஆசிரியர் அண்ணல் சாவி அவர்களிடம் சொன்னபோது, அதனை உடனடியாக அவருடைய வார இதழில் வெளியிட்டார். அது…

“எம்.ஜி.ஆர். எனக்கு செய்த துரோகம்”

‘‘1945-லிருந்து 1977 வரை தொடர்ந்து 32 ஆண்டுகள் நான் ஒரே வயதில்தான் இருந்தேன். என்ன வியப்பாக இருக்கிறதா? 20-25க்குள் எம்.ஜி.ஆர். பள்ளிக் கூட மாணவர் என்றால் அவருக்கு வயது 18. எனக்கும் 18 வயது. அவர் கல்லூரியில் மாணவர் என்றால் நானும் கல்லூரி மாணவன். இப்படி எப்போதும் நாங்கள் இருவரும் இளைஞர்களாகவே இருந்தோம்.

எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் நல்லது பண்ணினதாக சொல்வாங்க. ஆனால் அவர் எனக்கு துரோகம் பண்ணிவிட்டார். 1977-ம் ஆண்டு ஏன்தான் வந்ததோ? அவர் திடீரென்று முதலமைச்சர் ஆகிவிட்டார். அவருக்கு வயது பற்றிய கவலை இல்லாமல் போய்விட்டது. வாலிபனாகவே இருந்த எனக்கு ஒரேடியாக 30 வருடங்கள் கூடுதலாக ஆகிவிட்டது. அவர் மட்டும் முதல்வராகாமல் நடித்துக் கொண்டே இருந்திருந்தால், நானும் நடித்துக்கொண்டே இருந்திருப்பேன். இப்போது நிஜ வயது தெரிந்துவிட்டது. அதனால் எனக்கு ஏகப்பட்ட மரியாதை. ஆனால், நான் பல படங்களை இழக்க வேண்டியதாயிற்று.’’ என்றார் எம்.என்.நம்பியார்.

எம்.ஜி.ஆர் – சின்னப்பா தேவர் கூட்டணி…

எம்.ஜி.ஆரை வைத்து அதிகப் படங்களைத் தயாரித்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் சின்னப்பா தேவர். இருவர் கூட்டணியில் ‘தாய்க்குப் பின் தாரம்’ முதல் ‘நல்ல நேரம் வரை மொத்தம் 16 படங்கள் வெளியாயின.

தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த படம் ‘முகராசி’. பல படங்களின் படப்பிடிப்பு, அரசியல் என்று பரபரப்பாக இருந்த எம்.ஜி.ஆரை வைத்து 12 நாள்களில் எடுக்கப்பட்டு 100 நாள் ஓடிய வெற்றிப்படம் என்ற சாதனை படைத்தது ‘முகராசி’ திரைப்படம்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓர் அரசியல்வாதி இருக்கலாம், ஒரு நடிகன் இருக்கலாம், ஒரு வள்ளல் இருக்கலாம், ஓர் ஆளுமையாளன் இருக்கலாம். ஆனால் அரசியல்வாதியாக, நடிகனாக, வள்ளலாக, ஆளுமையாளனாக என அனைத்துமாகத் திகழ்ந்த ஒருவர் நல்ல மனிதனாகத் திகழ்ந்தார் என்றால் அது இதயக்கனி எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மட்டுமே பொருத்தமான ஒன்றாகும்.

தொண்டனுக்கும் பணி செய்த தலைவன், ஏழைகளுக்குக் கிடைத்த கலியுக வள்ளல், மும்முறை எமனை வென்ற மன்னன், மூவுலகையும் வென்ற தனிப்பிறவி அவர். வெறும் எலும்புகளால் ஆன மனிதர்களுக்கு மத்தியில் இதயங்களால் ஆனவர் எம்.ஜி.ஆர். கடிகார மனிதர்களுக்கு மத்தியில் காலகாலமாக நம் அனைவரது மனத்திலும் வாழ்ந்துவருபவர் புரட்சித்தலைவரைச் சாதனைத் தலைவர் என்பதில் ஐயமில்லை.

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

– ஔவை நடராசன்

, தொடர்புக்கு: thamizhavvai@gmail.com
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *