மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! ~ 15 வலம்புரியார் வரைந்த உரை ஓவியம்..!

 

புரட்சித் தலைவரின் புகழ் பாடிய எழுத்தாளர்கள் கவிஞர்கள் என்றொரு பட்டியலிட்டால் அப்பட்டியல் நீளும்… நீளும்… நீண்டுகொண்டே போகும். அப்படி அவரால் ஈர்க்கப்பட்டோர் ஏராளம். அவர் பார்வைப்பட்டு பவளமாய் ஒளிர்ந்தவர்கள் அவர் புகழ் பாட மறந்ததில்லை. அப்படி தனது இளம் வயதிலேயே இலக்கியத்திலும் அரசியலிலும் தனித்த புகழ் பெற்ற வலம்புரிஜான் புரட்சித் தலைவரால் பட்டொளி வீசியவர் என்பதில் மிகையில்லை.

வார்த்தைச் சித்தராக விளங்கிய வலம்புரிஜான் மனம் உருகி புரட்சித் தலைவருக்கு ஒரு புகழாரம் சூட்டினார்.   எழுதி முடித்ததும் என்னிடத்தில் கொண்டு வந்து காண்பித்தார். அந்தப் புகழாரத்தின் ஒரு சில பகுதிகளை நினைவு கூர்ந்து… அப்படியே மீளவும் வெளியிடுவது  வலம்புரிக்கும் புரட்சித்தலைவருக்கும் உகந்த பாராட்டுரையாகும்.

வலம்புரிஜான் புரட்சித் தலைவருக்கு சூட்டிய புகாழாரத்திலிருந்து…

’’இதே தமிழகத்தில் நமது கண்களுக்கும் முன்பாக வாழ்கிற போதே ஒருவர் வரலாறாகிறார்! அவர்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்!

அவர் நடிக்க ஆரம்பித்தபோது, நான் நடக்கவே ஆரம்பிக்கவில்லை. ஏன் பிறக்கவே இல்லை.

இப்போது இவைகளைப் பற்றி நான் எழுதுவது என்பது பல்லி முட்டை பறந்து போகிற வானம்பாடி பற்றி பாட்டுப் பாடுவதைப் போலிருக்கிறது.

பாரவோன் மன்னர்களை, பாபிலோனிய நாகரிகத்தைப் பற்றி இப்போது எழுதுகிறவர்கள் அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் அல்ல.

படைப்பாளி என்பவன், தான் பிறந்திராத காலத்தில் நடந்தவைகள் மீதும் கருத்துச் சொல்லுகிற உரிமை படைத்தவன். அதுவே இந்த எழுத்துக்கு அடிப்படை.

புரட்சித் தலைவர் ஒரு சகாப்தம். சினிமாவில் சகாப்தமாக இருந்தவர்; இப்போது அரசியலில் சரித்திரமாகிக் கொண்டிருக்கிறார்.

புரட்சித் தலைவரை ஒரு நடிகர் என்கிற காரணம் காட்டி அவரை வெறுக்கிறவர்கள் மன நோயாளிகளே!

இந்த வகை வேப்பங்காய் வெறுப்பு-மருந்து மாத்திரைகளிலே மடங்கிப் போகிற வெறுப்பு அல்ல.

புரட்சித் தலைவரை ஒரு நடிகராக மாத்திரம் பார்ப்பதே மன்னிக்க முடியாத குற்றம்.

காரணம் அவர் ஒரு நடிகர் மாத்திரமல்ல – அவர் சொன்னதை எழுதிக் கொண்ட வசனகர்த்தாக்களும் உண்டு – அவர் பகிர்ந்தவைகளைப் பாடலாக வடித்த பாடலாசிரியர்களும் உண்டு – அவர் குறிப்பிட்டுச் சொன்ன கோணங்களில் பதிந்து – பாய்ந்த கேமராக்களே அதிகம். அவரே ஒரு தலை சிறந்த நடிகர் – வசனகர்த்தா – பாடலாசிரியர் – இயக்குநர்.

இந்தத் திரைப்படத் தொழிலுக்கும் அப்பால் அவரிடத்தில் நீறு பூத்த நெருப்பாக ஒளிந்து கிடந்த நூறுநூறு திறமைகள் தப்பித்து வெளியே வந்து தங்களை அடையாளங் காட்டிக் கொண்ட சந்தர்ப்பங்கள் பல உண்டு.

நடிகர் என்பதற்காக அவர்மீது காரணமில்லாத – இனந் தெரியாத – வெறுப்பை வளர்த்துக் கொண்டிருக்கிறவர்கள் – நடிப்பையே வெறுத்தவர்கள் அல்லர்.  அவரை வெறுத்தவர்கள். காரணம் தமிழில் கடவுளே “கூத்தன்’ என்றுதான் வழங்கப்படுகிறான், தில்லைவெளியில் தினமும் ஆடுகிறார் என்றுதான் பேசுகிறோம். “ஆடத் தெரியாத கடவுள் என்று இயேசுநாதர் அழைக்கப்படுகிறார்.

அவரை வெறுக்கிற சிலர் இவைகளை அறிந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

ஒரு நடிகர்-அதிலும் தலைசிறந்த-ஈடு, இணையற்ற நடிகர்-நடிக்கிறார்-அவருக்குக் கை தட்டல் வருகிறது – பூமாலை விழுகிறது-ஆள் சேருகிறது-அரசியலில் செல்வாக்கு வருகிறது-என்பது இயற்கை. இதை எதிர்த்துக் கோபித்துக் கொள்ளுவது அறியாமை.

அறியாமலிருப்பதே கூடக் குற்றமில்லை. அறிந்து கொள்ள மனதில்லாதிருப்பதே மாபெரும் குற்றம்.

உண்மைகளைத் தெரிந்து கொண்ட பிறகும் சத்தியத்திற்குத் தலைவணங்காத சாதுரியம் – உண்மைகளை ஒத்துக் கொண்டால் – அந்த உண்மைகளே நம்மை விழுங்கி ஏப்பம் விட்டு விடும் என்கிற அச்ச உணர்ச்சி – இவைகளே காரணம்.

சத்தியத்திற்கு நம்மிலே சில பேர் சாட்சி சொல்லவில்லை என்பதற்காக – சத்தியம் நெருப்பிலே குதித்து – நீறாகிப் போவதில்லை.

சத்தியம் அரசியலில் சாத்தியமில்லாத ஒன்றாகவே இதுவரைக்கும் இருந்து வருகிறது.

கதை வசனம் எழுதுதல் – திரைக்குப் பின்புறம் திரைப்படத்திற்கு நடக்கிற ஒத்திகை – ஒருவர் வசனம் எழுதுகிறார் – அவர் கதை தீட்டுவதால் – திரைக்குப் பின்புறம் – புரட்சித்தலைவரோ நடிக்கிறார் – அவரோ வெள்ளித் திரையில் நட்சத்திர நடிகர்.

கதை வசனம் எழுதுவதால் – சினிமாவில் பங்கேற்கிறவர்கள், நடித்தலால் – திரையில் தோன்றுவதால் – மக்கள் மனத்திரையில் – தங்கி விடுகிற புரட்சித் தலைவரை – சினிமாக்காரர் என்று சீறுகிறார்கள்!

இது அவர்களது அறியாமை அல்ல. ஆற்றாமை! ஆற்றாமை!!

சிலர் திரைப்படத்தில் குரல் கொடுத்தல் – படத்தின் தொடக்கத்தில் தானே நின்று பேசுதல் – இவற்றிற்கு ஆழமான காரணங்களுண்டு.

இவைகள் தன்னை முன்னிறுத்திப் பார்க்கிற முயற்சிகள் மாத்திரமல்ல – மக்கள் மனத்தில் தன்னை நிறுத்த முனைகிற வேடிக்கை நிகழ்ச்சிகளும் ஆகும்.

நாம் எழுதிய – கதையால் வடித்த வசனத்தால் படம் நின்றது-வென்றது என்று நினைக்க எழுதுவோருக்கு உரிமை உண்டு. அதை நம்புவதுதான் சிலவேளைகளில் நட்டாற்றில் விட்டு விடும்.

எழுதுகிறவர்க்கும் – அதற்கு உயிர் கொடுத்து நடிக்கிற ஒருவருக்கும் வேறுபாடு உண்டுதானே!

கண்ணுக்குள் நிற்கிறவர் நடிப்பவர் – கருத்துக்குள் இனிப்பவர் எழுதுபவர்.

புரட்சித் தலைவரைப் பொறுத்தவரை – அவர் திரைக்கு அப்பாலும் – வளர்ச்சி பெற்ற – வாகான மக்கள் தலைவர் – ஆதலால் கண்ணுக்குள் நிற்பவரே கருத்திலும் இனிக்கிறார்.  அவர்களுக்கு வருகிற அடிப்படைக் கோபமே இங்கேதான் தொடங்குகிறது.

புரட்சித்தலைவர் ஒரே நாளில் வெடித்து வெளிக் கிளம்பிவிட்ட கீரைச்செடி அல்ல! மெல்ல மெல்ல – என்றாலும் இறுதியாக வேர் பரப்பி விழுது விட்டு-நிழல் தருகிற – நிம்மதி தருகிற-சூறைக்காற்றுக்கும்… பூகம்பக் குலுக்கலுக்கும்… ஈடு கொடுத்து – நிமிர்ந்து நிற்கிற ஆலமரம்.

புரட்சித் தலைவரைப் பொறுத்தவரை அவரது காதல் நிகழ்ச்சிகள்-ஆட்ட பாட்டங்கள் நிறைந்த படங்களிலே கூட-ஏழைக்கு இரங்குகிறவராக-அநியாயத்தைக் கண்டித்துச்-சீறி எழுகிற சின வேங்கையாக-நல்லொழுக்கத்திற்காக நாடே பாராட்டுகிற ஒரே உருவமாகத் திகழ்கிறார்.

எத்தனேயோ படங்களைப்பார்த்திருந்தும், அவர் கிளர்த்தெழுந்து நிமிர்ந்து நிற்கிற, ‘நாடோடி மன்னன்’ படம்-மாடிப்படிகளில் இறங்கி வருகிறபோது நளினத்தோடும்-அதே நேரம் -அநியாயத்தை எதிர்த்துச் சீறி நிற்கிறவராகவும் காணப்படுகிற எங்கள் வீட்டுப் பிள்ளை. இப்படித் தோற்றங்களிலேதான் என் நெஞ்சில் அவர் நிலைத்தார்.

 

புரட்சித் தலைவர்-என்று நான் அவரை நினைக்கிறபோது ‘மாட்டுக்கார வேலன்’ உருவம் எனக்குப் பிடித்த ஒன்றாக இருந்தாலும் கிளர்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கிற எனது மனத்தில் அவர் ‘நாடோடி மன்னனில்’ தாடி யோடும், தடியோடும், ஒரு புரட்சிக்காரனைப் போல் நிற்கிற பொன்னான உருவமே வந்து வந்து போகிறது! ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில் ஒரு பக்கம் பார்க்கிறா’ என்கிற பாட்டில் அவரது நளினம் இன்னமும் எனது மனத்தில் கோலம்போட்டுக் கொண்டிருக்கிறது.

இதிலேதான் அவரது வெற்றியின் வித்து விழுந்து கிடக்கிறது.

அவர் ஒரு வெற்றிடத்தை நிரப்ப வந்த இதமான தென்றல் காற்று என்றாலும் அதில் சூறாவளியின் சுழற்சி இருந்தது.

அவர் ஒரு தேவ வேளையின் தவ விடியல்-காலத்தின் கட்டாயம்-வசந்தத்தின் வருகை- வானத்தின் பொழிவு என்னென்னவோ சொல்லலாம்.

“ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் அவர் கப்பல் மேல் தளத்தில் நிற்கிற காட்சி-அதே போல “அடிமைப் பெண் படத்தில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு அவர் சங்கடப்படுகிற காட்சி இவைகளைப்போல ஆயிரக்கணக்கான அவரின் உருவங்கள் இலட்சக் கணக்கான மக்களின் மனத்திரைகளில் பதிந்திருக்கின்றன. புரட்சித் தலைவரின் படங்களைப் பொறுத்தவரை இருக்கிற சிறப்பெல்லாம் அவர் படங்களில் நடிக்கவில்லை வாழ்கிறார் என்பதுதான்.

இதை விரித்துப் பொருளுரைக்க வேண்டும் என்றால்-அவரது வாழ்விற்கும்-நடிப்பிற்கும் இடைவெளி இல்லை.

சமூக நியாயங்களுக்காக அவர் வாழ்விலே போராடாமல், திரைப்படத்தில் மாத்திரம் குரல் கொடுத்திருந்தால்-அவருக்கு இத்தனை செல்வாக்கு சேர்ந்திருக்காது.

ஏறத்தாழ 47 ஆண்டு காலம் தமிழ்த் திரைப்படத்தில் ஆட்சி புரிந்திருக்கிற புரட்சித் தலைவரின் சாதனை மகத்தானது. உலகில் இத்தனை ஆண்டு காலம் நடிப்புத் தொழிலில் ஈடுபட்டவர்கள் இருக்கலாம். இறுதிவரை இங்கிதமான புகழோடு வாழ்ந்தவர் புரட்சித்தலைவர் மாத்திரமே!

புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தவர்கள் புரண்டு உருண்டார்கள். மனிதர்களைப் படித்த மாவீரர் புரட்சித் தலைவரே தனித்துத் தலை சிறந்து நின்றார்.

சாதாரணமானவர்களின் அன்றாட ஆசைகளை எடைபோடத் தெரிந்தவர் அவர் ஒருவர்தான்!

ஆகவேதான் கதைகளைப் பற்றிய அவரது கணக்குகள் தப்பாமலே இருந்தன 1962-ம் ஆண்டுவெளிவந்த “பாசம்’ படத்தில் கதாநாயகன் சோக முடிவுக்கு ஆளாகிறான்.  படம் வெற்றி பெற இயலவில்லை. அந்தப் பாத்திரத்திற்கு ஏற்படுகிற அவலமான முடிவைக் கூட படம் பார்க்கிறவர்கள் ஏற்காத சூழ்நிலை!

எந்த அளவிற்கு புரட்சித்தலைவர் மக்களின் மனங்களில் வேர்விட்டிருக்கிறார் என்பதற்கு அவரது சரித்திரத்தில் இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?

அக்கிரமங்களை எதிர்க்கிறவராக-அநியாயங்களைச் சாடுகிறவராக-நியாயத்திற்காக குரல் கொடுக்கிறவராக-நீதியை நிலைநாட்டியே தீருகிறவராக அவர் நடித்த, ‘மலைக்கள்ளன்’, ‘மதுரைவீரன்’ ‘குலேபகாவலி’  ‘தாய்க்குப் பின் தாரம்’ ஆகிய படங்கள் மக்களின் மகத்தான வரவேற்பை அப்போதே பெற்றன.

ஏழைக்கு இரங்குகிறவராக- அவர்கள் கண்ணீரைத் துடைக்கிறவராக-கவலைகளை மாற்றுகிறவராக – வாழ்விலே நடை போடாவிட்டால் – திரைப்படத்தில் மாத்திரம் அந்த நடிப்பு எடுபட்டிருக்காது.

‘உண்மை’ இல்லாவிட்டால் ஒராயிரம் சரிகை வேலைகள் எடுபடாது என்று நான் அடிக்கடிச் சொல்லுவது இதைத்தான்.

வாழ்க்கைக்கும், நடிப்பிற்கும் இடைவெளி இல்லாத ஒரு தலைவர்-“சினிமா மாயையில் நிற்கிறார்” என்று சொல்லுவது சிறு பிள்ளைத்தனம். புகைப்பிடிக்காதவராக – குடிக்காதவராக நடிக்கிறார். இந்த உருவம் (Image) மக்கள் மனத்தில் பதிந்து விட்டது – அதுவே வெற்றிக்கு ஆதாரம் என்று பேசுகிறார்கள்.

உங்களின் நேசிப்பிற்குரிய – நினைவில் பதிந்திருக்கிற – “நான்” புகை பிடிக்கவில்லை – குடிக்கவில்லை – என் வாழ்விலும் நான் இவைகளைத் தொடுவதில்லை – வாழ்விற்கும் நடிப்பிற்கும் இடைவெளி இல்லை – என்று படம் பார்க்கிற இலட்சக்கணக்கானவர்கள் திருந்திட அவர் வழி சொல்வது எப்படித் தவறாகும்?

பல வேதப் புத்தகங்கள் செய்திருக்காத வேலையை – அவரது திரைப்படங்கள் செய்திருக்கிறது என்றே வாதாடுவேன்! பொழுது போக்கிற்கான ஒரு சாதனத்தை, சமுதாயத்தை மாற்றுகிற புரட்சிகரமான கருவியாக முற்றிலும் மாற்றி வைத்தபெருமை அவருக்கே உண்டு.’’

 

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

 

 

 

 

 

 

 

ஔவை நடராசன்,

மேனாள் துணைவேந்தர்,

தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை

தொடர்புக்கு: thamizhavvai@gmail.com
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *