BREAKING NEWS

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! ~ 14 “எம்.ஜி.ஆர் ஓர் அதிசய மனிதர்..!”

நானும் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனும் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற உலகக் கவிஞர்கள் மாநாட்டுக்காக நியூயார்க் சென்று பிறகு டெட்ராய்ட்டில் இரண்டு நாள் தங்கி, பிறகுதான் சான்பிரான்சிஸ்கோ புறப்பட்டோம்.

டெட்ராய்ட்டில், நாங்கள் தங்கியிருந்தபோது, நான் இப்போது பெயர் மறந்துவிட்டேன், அவ்வளவு இனிமையான நண்பர் இல்லத்தில் தங்கியிருந்தோம்.

அங்கே இருந்த ஒரு பையனுக்குப் பெயர், சட்டக் என்றார்கள். பிறகுதான் சடகோபன் என்பதை அப்படிச் சுருக்கியிருக்கிறார்கள் என்பதைக் கண்டுகொண்டேன். அந்தப் பெரிய மாளிகையில் நாங்கள் தங்கியிருந்தபோது, ஒரு மாலை வேளையில், திடுமெனக் கவியரசர் கண்ணதாசன் லண்டனில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து சேர்ந்தார்.

எப்படி அண்ணா நீங்கள் இந்த இடத்தைக் கண்டு பிடித்தீர்கள் என்று கேட்டேன். நீ தங்குகிற இடம் என்று சொன்னால், அது ஒரு ராஜமாளிகையாக இருக்கும் என்பதை நான் அறிவேன் என்றார். என்ன நீயும் சேதுராமனும் இப்படித் தூங்கி விழித்திருக்கிறீர்கள், சரக்கு போட்டிருந்தால்தான் இப்படிப்பட்ட உறக்கம் அந்தி வேளையில் வரும் என்று கேலி பேசினார்.

ஒரு நல்ல காபியும், சூடான சிற்றுண்டியும் பொங்கல், வடையோ, பஜ்ஜியோ, இருந்தால் போதும் என்றார்.

சிறிது நேரம் கழித்து, ஔவை என்னால் இங்குத் தங்க முடியாது, உங்களுக்குத் தயிர்ச்சாதம் இருந்தால் போதும், என்னை எப்படியாவது ஆலிடே இன்னில் தங்க வையுங்கள். அது, நெடுஞ்சாலை ஓரங்களில் அழகாக இருக்கும் கிளைகளாகும் என்றார்.

நண்பர் பார்த்தசாரதி முகம் கோணாமல் கவியரசர் எங்கே தங்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அங்கே தங்க வைப்பது எங்களுக்குப் பெருமை என்றார்.

அப்போது வழியனுப்பும்போது, அண்ணா நீங்கள் கொஞ்சம் சோர்வாக இருக்கிறீர்களே என்றேன். ஔவை லண்டனிலேயே எனக்கு உடல் நலம் சரியில்லை. இங்கே நான் டாக்டர் ஜவகரை பார்க்கலாம் என்று நினைக்கிறேன் என்றார். அவருடைய நினைவு எவ்வளவு நீளமானது என்று கண்டு நெகிழ்ந்தேன்.

அன்று அவரை வழியனுப்பியது – என்றும் மீளாத விடையாகவே முடிந்தது.

நாடோடி மன்னன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த பின்னர் 1959-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட வெற்றிவிழா மலரில் புரட்சித்தலைவரைப் பற்றி கவியரசு கண்ணதாசன் ஓர் வாழ்த்துரை எழுதி இருந்தார். அந்த வாழ்த்துரை..

எம்.ஜி.ஆர் ஓர் அதிசய மனிதர்

ஒரே மனிதனுக்குப் பல குணங்கள் இருப்பது உலக இயற்கை. அந்தக் குணங்களில் எதுவுமே உறுதியில்லாமலிருப்பதும் சில மனிதர்களுக்கு இயற்கை. ஆனால், எண்ணிய எண்ணத்தைத் திண்ணமாக்கிக் கொண்டு, எந்தக் காரியத்தையும் முடித்துவிட்டே தூங்குகிற மனிதரை நான் கண்டேன். அந்த அதிசய மனிதரே ‘நாடோடி மன்னன்’ தயாரிப்பாளர், நடிகர், டைரக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன்.

இப்போது ஒன்றேகால் ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் எழுதி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்து, “மகாதேவி” என்ற பெயரில் வெளிவந்த படம்; வெளி வந்த அன்றே, மக்களோடு மக்களாகப் படத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பினேன். தயாரிப்பாளர்கள் எவ்வளவுக்கு அந்தக் கதையைச் சிதைத்திருந்தார்கள். மிகவும் புண்பட்ட மனத்தோடு எம்.ஜி.ஆரைக் கண்டேன். “இனி, நீங்களே முழுப் பொறுப்பேற்றுக் கொண்டு, தயாரிக்கும் ஒரு படம் வந்தாலொழிய, மக்கள் நம்பிக்கை நிலைக்காது” என்றேன்.

அப்பொழுது, மூவாயிரம் அடியிலேயே நின்ற “நாடோடி மன்னனை முடித்து விடுவது என்று முழுமூச்சுடன் இறங்கினார், புரட்சி நடிகர். ஒராண்டுக் காலத்திற்குமேல் இடைவிடாது உழைத்தார். “பணம் எவ்வளவு ஆகிறது” என்ற கவலையின்றி, “படம் எப்படி உருவாகிறது” என்ற கவலையுடனேயே வேலை செய்தார். வாகினி ஸ்டுடியோவில் ஒரு முழுப் படப்பிடிப்புக் கொட்டகையை வாங்கிக் கொண்டார். இரவிலே நான்கு மணி நேரம் தூக்கம், மற்றப் பெரும் பொழுதும் ஸ்டுடியோவிலேயே கழித்தார்.

சளைக்காமல் நடந்த படப்பிடிப்பு; ஓர் அற்புதமான படத்தைத் தமிழகத்துக்கு உருவாக்கித் தந்தது. நான் எழுதிக் கொடுத்த கதை வேறு பிறகு, பார்த்த படம் வேறு இடையில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதத்தில் படம் உருக்கொண்டது. கடிய சோதனைகளுக்கும் சளைக்காமல், படத்தைத் தயாரித்தார் எம்.ஜி.ஆர்.

அவருக்கு முன்பே சொந்தப் படத் தயாரிப்பில் பல நடிகர்கள் ஈடுபட்டிருந்தார்கள், அப்படி ஈடுபட்டதாலேயே பெரும்பாலோர் தொழிலிலிருந்து மறைந்தார்கள்.

இந்த உண்மை எம்.ஜி.ஆருக்கும் தெரியும். புகழிலும், மக்கள் அவருக்கு அளிக்கும் மதிப்பிலும் பொறாமை கொண்ட பேய்க் காக்கைகள் வேறு, ஓயாமல் ஓலமிட்டுக் கொண்டிருந்தன.

“நமக்கு ஐம்பது நூறு கொடுக்க மாட்டாரா’ என்று எதிர்பார்த்து ஏமாந்த சோனகிரிகள், படம் வெளி வந்ததும், எம்.ஜி.ஆர். நாடோடியாகி விடுவார் என்று கதறினர்.

‘‘கூத்துநாய் கவ்விக் கொளக்கண்டும் தம்வாயால்

பேர்த்துநாய் கவ்வினார் ஈங்கில்லை’’

என்ற வரிகளுக்கேற்ப, கடிக்க வந்த நாய்களை அடிக்கக்கூட விரும்பாமல், தலை நிமிர்ந்து நடந்த எம்.ஜி.ஆர். இன்று நாடாளும் மன்னனாக விளங்குகிறார்.

தொழிலில் ஒப்பந்தமே இல்லாமல் அவரிடம் உறவு கொண்ட ஊழியர்கள் அதிகமாகவே அவரிடமிருந்து பெற்றிருக்கிறார்களே தவிர, குறைந்து பெறவில்லை!

பணத்தை விழுந்து கவ்விக்கொள்ளும் தீக்குணம் அவரிடம் இல்லை. “பணம் இன்று வரும் நாளை பறந்து போகும்” என்ற ‘நிலையாத் தத்துவத்தில்’ அவருக்கு நம்பிக்கை உண்டு.

கலைவாணருக்குப் பிறகு நடிகர் உலகில் இவர் அதிசயமான மனிதர், மக்களை அணைத்துக் கொள்ளப் பழகிவிட்ட எவரும் தனியாகச் சாவதில்லை! கோடானுகோடி மக்கள் அவரை என்றும் பின் தொடர்வார்கள்.

இதே புகமும் பெருமையும் அவர் வாழ்நாள் முழுதும் தொடரும், பெருமூச்சு விட்டுப் பயனில்லை! இது அவர் விழித்திருந்து உழைத்துச் சம்பாதித்த புகழ்!

நாளைய உலகம், நாளைய திராவிட சமுதாயம், கடந்த காலத்திற்கோர் கலைஞன் பெயரையும், வருங்காலத்திற்கோர் கலைஞன் பெயரையுமே உச்சரிக்கும்; ஒருவர் கலைவாணர் மற்றொருவர் புரட்சி நடிகர்.’’

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கவிஞர் கண்ணதாசன் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தார். அந்த அன்பை பல்வேறு தருணங்களில் கண்ணதாசனின் வாழ்வில் மறக்க இயலாத முத்திரைகளாகப் பதித்திருக்கிறார் என்பதை அறிந்தவர் எவரும் வியக்காமலில்லை எனலாம். அப்படி ஓர் அளப்பரிய அன்பின் முத்திரைதான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கவிஞர் கண்ணதாசனை வாழ்நாள் அரசவைக் கவிஞராக்கி அழகு பார்த்த நிகழ்வு. இப்படி ஓர் எண்ணம் புரட்சித் தலைவர் மனத்தில் உதித்ததும் அவர் என்னிடம்தான் தகுதி உரை தயாரிக்கும் பணியைப் பணித்தார். கவிஞர் கண்ணதாசனை அரசவைக் கவிஞராக்கிய நிகழ்வில் நான் தயாரித்த அந்தத் தகுதி உரையை புரட்சித் தலைவர் வாசித்தளித்தார்.

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

 

 

 

 

 

 

 

 

-ஔவை நடராசன்,

மேனாள் துணைவேந்தர்,

தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *