BREAKING NEWS

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! ~ 13 மனத்தில் நிலைத்து நிற்கும் படிமச் சிலை..!

கவியரசர் கண்ணதாசன் ஒப்பில்லாத கவியரசர். நான் பல்லாண்டுகள் அவரோடு பழகியிருக்கிறேன். எங்கள் அழைப்பை ஏற்றுப் பச்சையப்பன் கல்லூரி விழாவில் மூன்று நான்கு முறை பேச வந்திருக்கிறார்.

தனிப்பாடல்களை எடுத்துச் சொல்லி, அதன் நலங்களை நகைச்சுவையோடு பேசி, நம்மை மகிழ வைப்பார். எந்தவிதமான ஆரவாரமில்லாமல் கொஞ்சம் ஓசை நயம் தெரிந்தால் போதும், நீங்கள் எல்லாம் திரைப்படத்திற்குப் பாடல் எழுதலாம் என்று மாணவர்களின் ஆரவாரத்திற்கு ஊக்கம் ஊட்டுவார்.

பச்சையப்பன் கல்லூரியில் அனைத்துக் கல்லூரி மாணவர் தலைவனாக நான் இருந்தபோது, நிதி திரட்டுவதற்காக அன்னையார் சௌந்தரம் கைலாசம் அவர்களை அணுகி, இல்லற ஜோதி படத்தை வாங்கித் தந்தார்கள். அந்த நிகழ்ச்சியில், கவியரசர் கண்ணதாசன் அவர்களை அழைத்திருந்தோம். மன மகிழ்ச்சியோடு வந்திருந்த கவியரசருக்குப் பக்கத்தில் நானும், இடது பக்கத்தில் திருமதி சௌந்தரா கைலாசம் அம்மையாரும் அமர்ந்திருந்தோம்.

‘இல்லற ஜோதி’, 1954-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ஜி.ஆர்.ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, கே.ஏ.தங்கவேலு, எஸ்.ஏ.அசோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். கவிஞர் கண்ணதாசன் பாடல்கள், வசனம் எழுதியிருக்கிறார்.

படத்தின் நிறைவு நெருங்கும்போது, “உனக்கும் எனக்கும் உறவு காட்டி இந்த உலகம் சொன்னது கதையா” என்று ஒரு பாடல் வரும். அந்தப் பாடல், பத்மினி பாடுவார்கள். இது என் உள்ளத்தை உருக்குகிறது அண்ணா என்று நான் சொன்னபோது, திரும்பிப் பார்த்தேன், கவியரசர் கண்ணதாசன் கண்களில் கலங்கிய நீர் அவர் கன்னத்தில் வழிந்தது. இந்தப் பாடல், ‘‘எவருக்கும் ஏதேனும் ஒரு நேரத்தில் பொருத்தமாக இருக்கும். எனக்கு எத்தனையோ நினைவுகளை இந்தப் பாடல் கூறுகிறது’’ என்று கூறினார்.

அப்போது, ‘மதுரை வீரன்’ படத்தில் கவியரசர் எழுதிய பாடல்தான் என் நினைவுக்கு வந்தது…

‘‘அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி

அருள் புரிந்ததும் கதையா

அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி

அருள் புரிந்ததும் கதையா

நினைத்து நினைத்து மகிழ்ந்து நாங்கள்

நேசம் கொண்டதுவும் கனவா

அவர்க்கும் எனக்கும்…’’

புரட்சித்தலைவர் தன் மனம் போன போக்கில், சில நேரங்களில் பிறர் பேச்சைக் கேட்டுக்கொண்டு மனம் கசந்து போவார். அப்படி பல நிகழ்வுகள் திரையுலகிலும் அரசியலிலும் நேர்ந்ததுண்டு.

கவியரசர் கண்ணதாசனோடு அப்படி கசந்த நிகழ்வுகள் பல என்றாலும், ஒருமுறை ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்கு கடலில் கப்பலில் இருந்தபடி ஓர் இனிமையான பாடல் அமைய வேண்டும் என்று எவர் எவரையோ எழுத வைத்து முயன்று, ‘‘கவியரசர்தான் இந்தக் காட்சிக்குப் பாடல் எழுத முடியும்’’ என்று சொல்லி, ‘‘நானே அவரை அழைக்கிறேன்’’ என்று அழைத்து எழுத வைத்து வெற்றி மணக்க விளங்கிய அந்தப் பாடல்தான்…

‘‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்

இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே

ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்….’’ என்ற பாடல்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசர் கண்ணதாசன், புலவர் புலமைப்பித்தன், கவிஞர் வாலி முதலியோர் தாமாகவே பாடல்களை அந்தந்த சூழலுக்கு ஏற்ப சுயமரியாதைக் கருத்துகளை சுடர்விட எழுதினார்கள் என்றாலும், கவியரசர் கண்ணதாசன் பாடல்கள்தான் புரட்சித்தலைவருடைய உருவக் குறியையும் வலுவையும் உணர்வையும் எல்லோருடைய மனத்திலும் நிலைத்து நிற்கும் படிமச் சிலையாக படர்ந்து நின்று காட்டியது.

சான்றாக, குடும்பத்தலைவன் படத்தில் இடம்பெற்ற,

‘‘கட்டான கட்டழகுக் கண்ணா –

உன்னைக்காணாத பெண்ணும் ஒரு பெண்ணா

பட்டாடை கட்டி வந்த மைனா –

உன்னைப்பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா

நடை போடு.. நீ நடைபோடு

நடைபோடு நடைபோடு மனமென்ற தேரில்

நடமாடும் மயில் போலவே….’’

– என்ற பாடலைக் குறிப்பிடலாம். அதேபோல் மற்றொரு பாடலும் புரட்சித்தலைவரின் உருவத்தை படம்பிடித்துக் காட்டும். ‘பணத்தோட்டம்’ படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதி இடம்பெற்ற,

‘‘பேசுவது கிளியா – இல்லை பெண்ணரசி மொழியா

கோவில் கொண்ட சிலையா

கொத்து மலர்க் கொடியா

பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா

சேரனுக்கு உறவாசெந்தமிழர் நிலவா…’’ – என்ற பாடலாகும்.

பாகவதரைப் பற்றி புரட்சித்தலைவர் கூறியது…

‘‘ஒருமுறை ‘அசோக்குமார்’ படத்தில் நான் பாகவதரோடு நடிக்கப் பேயாய் அலைந்தேன். ஒருநாள் விடாமல் பாகவதர் இல்லத்தில் பித்தன்போல் சுற்றிச் சுற்றி வந்தேன். காத்திருந்த என்னைக் காண விடாமல் பாகவதரை விட அவர் மனைவிதான் தடுத்துக்கொண்டிருந்தார்.

காலம் எப்படிக் கவிழ்ந்து காட்சிகளை மாற்றிவிடுகிறது என்பதற்காகச் சொல்ல வருகிறேன்.

நானாக நினைத்துச் செய்ததில்லை. பாகவதரின் காலம் முடிந்து அவருடைய குடும்பம் நிலைகுலைந்து எல்லாம் சீரழிந்த நிலையில், பாகவதரின் துணைவியார் முதலமைச்சராக இருந்த என்னை நிதியுதவி கேட்டுக் காண வந்திருந்தார்.

வந்த அவருக்கு நான், ஏதோ ஒரு தொகை தந்தேன்’’ என்று சொன்னதும் பின்னால் அது ஒரு இலட்சம் ரூபாய் என்று நான் அறிந்து கொண்டேன்.

அவர் சொல்ல வந்தது, பாகவதரின் துணைவியார் என்னைப் பார்க்க வந்து இரண்டு நாட்களாகக் காத்திருக்கிறார் என்று சொன்ன சொல், சுருக்கென்று என்னைத் தைத்தாலும் நான் அவர் இல்லத்தில் காத்திருந்து காத்திருந்து கால் விரல்கள் தேய்ந்த நாள்கள் நினைவுக்கு வந்தன.

இந்தக் கருத்தைக் கவியரசர் கண்ணதாசன் பாகவதர் இல்லத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது இதைக் குறிப்பிட்டார்.

புரட்சித்தலைவர் மக்கள் மனத்தில் தன்னைப் பற்றி பதிந்திருந்த தோற்றப் பெருமிதத்தை ஒரு துளிகூட கலைத்துக் கொள்ள விரும்பியதில்லை. படத்தின் தலைப்பானாலும், பாடலானாலும், நடிக்கும் தன் கதாபாத்திர பெயரானாலும் கடுகளவும் சிதைவை ஏற்படுத்தக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இருந்தார்.

அதனால்தான், ‘தேவதாஸ்’ படத்தில் தன்னை நடிக்கக்கூடாதா என்று கேட்டதற்கு குடிக்காத தேவதாஸை வைத்து கதை எழுதச்சொல்லுங்கள் நடிக்கிறேன் என்றார்.

அதற்கு கண்ணதாசன் , தேவதாஸ் தண்ணீரே குடித்ததில்லை நீங்கள் வேண்டுமானால், அரிதாசாக நடிக்கலாம் என்று சொல்லி சிரித்தாராம்.

பாடுபட்டு தேடிப்பெற்ற பண்பாட்டு படிமத்தை பாழாக்கக்கூடாது என்பதை திட்டமிட்டு கூர்மையாக பாதுகாத்து வந்தார் புரட்சித்தலைவர்.

பாடல்களே புரட்சித்தலைவரை படம்பிடித்துக் காட்டுகின்றன என்றாலும்கூட, நறுக்குத்தெறித்தாற்போல் கவியரசர் எழுதிய நல்ல வசனங்கள் புரட்சித்தலைவரின் புகழுக்கு பொன்னொளி சேர்த்தன. சான்றாக,

நாடோடிமன்னன் படத்தில் இடம் பெற்ற,

வீராங்கன் : மாட்சிமை தாங்கிய குருநாதர் அவர்களே, பெரியோர்களே, பொது மக்களே! நமது நாட்டில் நலம் பெருக, சில புதிய சட்டங்களை அவசரமாக நிறைவேற்றி உடனடியாக அமலுக்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்தப் புதிய சட்டங்களை நமது அமைச்சரும் தளபதியும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றனர். அவைகளைப் படிக்கச் சொல்லுகிறேன். உங்கள் விருப்பையோ, வெறுப்பையோ பயமின்றித் தெரிவிக்கலாம்…. (மந்திரியிடம்)…. ம்…. படியுங்கள்.

மந்திரி : (படிக்கிறார்) உழுபவருக்கே நிலம் உரிமையாக்கப்படுகிறது. உரிமைக்காரருக்கு நஷ்ட ஈடு நிலத்தின் வருமானத்தில் கால் பங்கு.

பிங்: என்ன அநியாயம்?

மந்திரி : விளைச்சல் காலத்தில் நிலவரி ஆறில் ஒரு பங்கு. இரண்டாண்டுகள் தொடர்ந்து விளையாமல் போனால் குடும்பத்திற்கு தலைக்கு ஏற்ற மானியம் வழங்கப்படும்.

மந்திரி : பெரிய மாளிகைகளில் சிறிய எண்ணிக்கையுள்ள குடும்பங்கள் வாழ்வது கூடாது. ஒரு பகுதி அவர்களுக்குப் போக மீதி வைத்திருப்பதில் குடிசையில் வாழ்பவரைக் கொண்டு வந்து வைக்கப்படும்.

கார்மேகம் : (கிண்டலாக) குடிசைகளை என்ன செய்வது?

வீராங்கன் : தேவை இல்லாததினால் குடிசைகள் கொளுத்தப்படும். தொழிலில் முதலீடு செய்பவர்களுக்கு லாபத்தில் பத்து சதவீதமும் மற்றுள்ளதை தொழிலாளர்களுக்கும் பிரித்துத் தரப்பட வேண்டும்.

நாடோடி மன்னன் வசனம் தொடர்ச்சி….

ராஜகுரு : அப்படியென்றால் பணக்காரர்களே இருக்கமாட்டார்கள்….!

வீராங்கன் : இல்லை. பணக்காரர்கள் இருப்பார்கள், ஏழைகள் இருக்கமாட்டார்கள்.

மந்திரி : ஐந்து வயது ஆன உடனேயே குழந்தைகளைக் கட்டாயம் பள்ளியில் சேர்த்துவிட வேண்டும். தவறினால் பெற்றோர்களுக்கு தண்டனை உண்டு.

கார்: வசதி இல்லாத பெற்றோர்கள் என்ன செய்வது ?

வீராங்கன் : அவசரப்படாதீர்கள்.

மந்திரி : பள்ளிப் படிப்பு முடிந்ததும் தொழிலில் ஈடுபடும்வரை மாணவர்களின் பராமரிப்புப் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுகிறது.

– போன்ற வசனங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

கவியுலகத் தமிழ்த் தென்றலாக விளங்கிய அவர் எழுத்துலகின் எல்லாத் துறைகளிலும் தன் தனி மாட்சியைக் காட்டியவர். சின்னஞ்சிறிய கதைகளால் சிந்தனையைக் கிளறும் செவ்வி படைத்தவர்!

இலக்கிய நெடுவானில் தளர்தலும் வளர்தலும் இல்லாத தண்மதியம்! பாமரர் பாமழை – புதிய வெளியீடு – சந்தநயம், இம்மூன்றும் நம் கவியரசரின் கவிதைகளை  இலக்கிய முகட்டுக்கு ஏற்றிச் சென்றன.

கடலுக்குள் சிப்பிகளாய்க் கிடந்த தத்துவங்கள் நம் கவியரசரின் கைகளால் கண்களுக்குத் தெரியும் முத்துகளாய்க் கடைக்கு வந்தன.

ஒருமுறை காரைக்குடியிலிருந்து சென்னைக்கு அவரோடு பயணம் செய்த இனிய நினைவு என் நெஞ்சில் இன்றும் நிலைத்திருக்கின்றது.  பிறிதொரு முறை பொள்ளாச்சிக்கு அவரை அழைத்துச் சென்ற இனிய அனுபவமும் எனக்குக் கிடைத்தது.  அன்றைக்கு அவர் உதிர்த்த சரமான கதைகளையும் துணுக்குகளையும் இன்றும் நினைத்து மகிழ்கின்றேன்.

பலமுறை அவரோடு காரைக்குடி அழகப்பர் கல்லூரிக்குச் சென்று வந்தது, என் மனத்தை இறுகப் பிழிகிறது. அன்றாட வழக்கில், அவரவர்கள் பேசும் ஆயிரம் தொடர்களை அழியாத பாடல்களாக அமைத்துத் தந்த ஒப்பற்ற கவியரசர் கண்ணதாசனை இனி எவரிடத்தில் காணப்போகிறோம்.

 

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

 

 

 

 

 

 

– ஔவை நடராசன்,

மேனாள் துணைவேந்தர்,

தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை

தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *