BREAKING NEWS

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி – 21) அனைவரையும் அரவணைப்பதுதான் அரசியல் வெற்றி

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக முதல் முறையாகப் பதவி ஏற்றவுடன் அந்த ஆண்டு விடுதலைத்  திருநாள் விழா(15/08/1977) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்று சென்னை கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றி வைத்து ஆற்றிய விடுதலைத்  திருநாள் உரை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

பகை பாராது அனைவரையும் அன்பால் அரவணைத்து மகிழ்வை நெகிழ்வாக்கி நெஞ்சம் தொடும் நேசத்துக்காரார் எம்.ஜி.ஆர் என்பதில் எந்த மிகையும் இல்லை என்பதற்கு எண்ணற்ற சான்றுகளைப் பகரலாம்.

அப்படித்தான், அன்றைய விடுதலைத்  திருநாள் சிறப்புரையில் எந்த ஏற்றத் தாழ்வும் இன்றி எவரது பகைமையையும் கொண்டாடாமல் அனைவரையும் தனது உரையில் குறிப்பிட்டு குளிர்வித்தார் எனலாம். அந்த உரை…

‘‘எனது வணக்கத்திற்கும், அன்பிற்கும் உரித்தான தமிழ்நாட்டுப் பெருமக்களே! தலைமைச் செயலாளர் அவர்களே! செயலாளர்களே!  முப்படைத் தளபதிகளே!  முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களே! நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே! மற்றும் இந்த சுதந்திர விழாவில், இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ள பெரியோர்களே, தாய்மார்களே! என் இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புக்களே!

உங்கள் அனைவருக்கும் விடுதலைத் திருநாள்  வாழ்த்துகளையும், என்னுடைய நன்றியையும் வணக்கத்தையும் நான் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு நாடு அடிமைப்பட்டுக் கிடக்கிற மாபெரும் கொடுமையை விட வேறு ஒரு கொடுமை உலகில் எங்கும் இருக்க முடியாது என்பதை நாம் ஒவ்வொருவரும் நன்கு உணர்ந்தவர்களாக இருக்கிறோம். இங்கே கொடியேற்றி வைக்கிற இந்த தினத்தில், இந்த நேரத்தில் – என் நினைவுகள் பல ஆண்டுகளுக்குப் பின்னாலே சென்று பல சுதந்திரப் போராட்ட நிகழ்ச்சிகள் என் கண் முன் தோன்றுகின்றன என்பதை இங்கே நான் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.

இங்கே கொடியேற்றி வைக்கிற நேரத்தில், ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது, ஆங்கிலேயர்கள் இந்தக் கோட்டையைச் சுற்றி தன் படைகளை வைத்துப் பாதுகாத்துக் கொண்டிருந்த நேரம், கோட்டையில் கொடியேற்ற முடியுமா என்ற கேள்வி தியாகத் தொண்டர்களுக்குக் கூட உயிரைப் பணயம் வைத்தவர்களுக்குக்கூட சந்தேகம் ஏற்பட்ட நேரம். ஒரு நாள் விடியற்காலையில் இங்கேயிருந்த வெள்ளையர்கள் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக இந்தக் கோட்டையைச் சுற்றி இருந்த வீரர்கள், அவர்களுடைய படையினர்கள் மேலே பார்த்தபோது தேசியக் கொடி பறந்து கொணடிருந்ததைக் கண்டு திகைத்தார்கள், யாரோ ஓர் இளைஞன் இவர்களுக்கெல்லாம் ஈடுகொடுத்து, கொஞ்சம் கூட கவலைப்படாமல் தன் உணர்வை மக்களுடைய கருத்தை உலகுக்கு எடுத்துக்காட்டி, இந்தக் கொடியை இங்கே எற்றி வைத்தார் என்பதை எண்ணி நான் திகைத்த நாள் உண்டு! இந்த நாளில் என் வணக்கத்தை அவர்களுக்கெல்லாம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த உணர்வுகள் நீடித்து நிலைக்க வேண்டுமென்பதற்காகவும், சுதந்திரம் அடைந்த ஆண்டுகளின் நினைவுகள் நம்மை எத்தனை ஆண்டுகள் முன்னுக்கு அழைத்துச் செல்கின்றன என்பதை எண்ணிப் பார்ப்பதற்கும், முன்னேற வேண்டுமென்று நினைக்கிற எல்லாரும் சமதர்ம தத்துவத்தை ஏற்று, சமத்துவ நிலையடைந்து, சாதி பேதமற்ற நிலையை ஏற்படுத்தி, மதமோ சாதியோ குறுக்கிட அனுமதிக்காமல் ‘எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓர் இனம்… என்ற நல்லுணர்வோடு இணைந்து வாழ்ந்து ஏழை-பணக்காரன் என்ற பேதம் இன்றி, இந்த நாடு வாழவேண்டுமென்ற நம்முடைய கொள்கையை நிறைவேற்றிக் கொள்ள இன்னும் நாம் செய்யவேண்டிய கடமைகள் எல்லாவற்றையும் எண்ணிப் பார்க்கிற நாளாகும் இது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தியாகம் செய்தவர்களுக்கு நன்றி கூறுவது நமக்குள்ள இயற்கையான ஒரு பண்பாடாகும். ‘நன்றி மறந்தவர்கள் அல்ல தமிழக மக்கள்… என்பதை உலகம் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறது. இந்த உலகத்தின் கண்கள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பது மட்டுமல்லாமல், 30 ஆண்டுகளுக்குள் இந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார்களே. உலகத்திலே அதிக மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கிற ஒரு குடியரசு உலகத்திலே இந்தியத் துணைக் கண்டம் ஒன்றுதான் இருக்கிறது…” என்று நினைத்துப் பார்க்கும் போது அவர்கள் திகைக்கிறார்கள்! பொறாமைப் படக்கூட சந்தர்ப்பம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

நம்முடைய கடமை மிகப்பெரியது. விவசாயிகள், தொழிலாளர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள், மலைவாழ் பெருங்குடி மக்கள், தாய்மார்கள், ஆதரவற்ற தாய்மார்கள் இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் வாழ்கிற நாள் என்றோ அந்த நாள்தான் மகாத்மா காந்தி அடிகள் எதிர்பார்த்த நாள் என்றும், நம்மை ஆளாக்கிய அமரர் பேரறிஞர் அண்ணா அவர்கள் எதிர்பார்த்த நாள் என்றும், நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஒரு தனி அரசியல் கட்சியோ எந்த ஒரு தனி மனிதனோ அந்தப் பெரும் தலைமை நினைத்ததையெல்லாம் செய்ய முடியாது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, நமக்குள் இருக்கிற கருத்து வேறுபாடுகளைக் கொள்கை வேறுபாடுகளாக ஆக்காமல், தெளிவான கருத்துகளை நேர்மையான வழியல் தெரிவித்துக் கொள்கிற பாங்கை நாம் பெற்றிருக்கிறோம் என்பதை உலகத்திற்குத் தமிழக மக்களும், தமிழகச் சட்டமன்றமும் எடுத்துக் காட்டிக் கொண்டு இருக்கின்றன. அதுமட்டுமல்ல, என் வேண்டுகோள், தமிழகத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமையை எந்தெந்த வகைகளில் செய்யவேண்டுமென்று விரும்புகிறோமோ அவைகளை நாம் சாதியைத் தூக்கியெறிந்து, மதத்தின் பெயரால் நாட்டைப் பிளவுபடுத்துகிற தேவையற்ற நம்பிக்கைகளைத் தூக்கியெறிந்து நாம் எல்லாரும் ஒன்று சேர்ந்து சிறப்பாக உழைத்து இந்த நாட்டுக்குப் புரிய வேண்டிய கடமையைச் செய்யவேண்டிய ஒரு உறுதியை எடுத்துக் கொள்கிற நாளாக இதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று தமிழக மக்களை வேண்டிக் கொள்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த சுதந்திரக் கொடி ஏற்றி வைப்பது மேதகு ஆளுநர் என்ற முறையில் இருந்தது. அந்த முறையை மாற்ற வேண்டுமென்று கோரிய-போராடிய-அந்த உரிமையைப் பெற்றுத்தந்த, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க. பிரதிநிதியான-முதலமைச்சராக இருக்கிற – நான் இந்த கொடியை ஏற்றி வைக்க, உதவி செய்த கலைஞர் கருணாநிதி அவர்களை நான் இந்த நேரத்தில் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். நல்லது செய்வதைப் பாராட்டவும், தீமையை எதிர்த்துப் போராடவும் கடமைப்பட்டிருக்கிறோம் என்பது நமக்குள்ள கடமையாகும்.

நாட்டிலே மக்கள் வாழ்வது என்றால், ஒரு சிறு மாளிகையில் வாழ்வது மட்டும் என்பது ஆகாது. அது நிறைவு பெறாது. மக்கள் மனத்திலே நல்ல மாற்றம் வேண்டும். கிராமத்தில் இருக்கிற மக்கள், இந்த நாட்டை முழுமையாகச் சுதந்திரம் பெற்ற நாடாக மனத்தில் நினைக்கிற அளவுக்கு, அவர்களுக்கு இன்னும் அத்தகைய வாய்ப்புக் கிடைக்கவில்லை. நகரத்தில் இருப்பவர்களுக்கு எந்தெந்த வாய்ப்புக்கள் கிடைக்கிறதோ, அவைகள் அத்தனையும் கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டும் – கிடைக்கச் செய்வோம் என்று, அண்ணாவின் மேல் – மகாத்மாவின் மேல் சூளுரை எடுத்துக் கொள்வோம்.

மகாத்மா காந்தியடிகள் வன்முறையைத் தூக்கியெறிந்துவிட்டு அறவழியில் – அகிம்சை வழியில் – போராடி நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்து, உலகத்திற்கு எடுத்துக்காட்டிய முன்மாதிரியானவர் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, அந்த வழியைப் பின்பற்ற வேண்டும் என்று அமரர் அண்ணா அவர்கள் எத்தனையோ முறை சொல்லியிருக்கிறார்கள் என்பதை நினைவு கூர வேண்டும்.

இந்தியச் சுதந்திரம் பெற்று 30 ஆண்டுகளுக்குள் எதிரிகளால் இது கேள்விக்குறி ஆகியிருக்கிறது ஆக்கப்பட்டிருக்கிறது -அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். காடும், மேடும், வயலும், நதியும், மக்களும் கொண்டது தான் சுதந்திர நாடு என்பது அல்ல. மக்கள் சுதந்தரமாக வாழ்ந்து, பேச்சுரிமையை, எழுத்துரிமையை, எண்ணுகிற உரிமையை நிலை நாட்டினால் தான் இந்த நாடு சுதந்திர நாடு என்று குறிப்பிட முடியும் என்று உணர்ந்திருக்கிறோம். நாம் செய்கிற செயலும் இந்த நாட்டின் வாழ்விற்காக என்றும், ஆக்க வழியில் உதவி செய்து காட்டவேண்டுமே தவிர, ஒருவரை அழித்து ஒருவர் வாழ்வதோ, ஒரு கொள்கையை அழித்து ஒரு கொள்கையை நிலை நாட்டவோ யாருக்கும் அந்த நிலை இங்கே ஏற்பட்டுவிடக்கூடாது என்று இந்தச் சுதந்திர நாளில் நான் சொல்லிக் கொள்வேன்.

தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், இதைப்போன்ற மலைவாழ் பகுதிமக்கள் இவர்களுக்கெல்லாம் இன்றைய தினம் வாழ்வில் மறுமலர்ச்சி கிடைக்கிறதோ, வாழ்வின் உறுதி தரப்படுகிறதோ, வாழ்வின் உறுதி தரப்படுகிறதோ, அன்று தான் நம்முடைய நாடு பெற்ற சுதந்திரம் முழுத் தன்மையை அடையும் நாளாக அமையும் என்பதை இங்கே சொல்லி, நாம் அனைவரும் ஜாதி பேதம் இன்றி, மத வேறுபாட்டின்றி இந்தச் சுதந்திரத்தைக் காப்பாற்ற, இந்தக்கொடிக்கு எந்த அவமானமும், தரக்குறைவும் ஏற்படாமல் காப்பதற்கு உயிரையும் ஈந்து காப்பாற்றுவோம் என்று சூளுரை ஏற்றுக்கொண்டு, அதை நீங்களும் ஏற்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு இப்போது நான் சொல்லும் ‘‘இந்திய சுதந்திரம்” என்ற வார்த்தைக்குப் பின் ‘‘வாழ்க” என்று சொல்ல வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

– ஔவை நடராசன், தொடர்புக்கு: thamizhavvai@gmail.com

 

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *