- செய்திகள், திருச்சி, மாவட்டச்செய்திகள்

மனைவி கண்முன்னே பயங்கரம் வக்கீல் வெட்டிக் கொலை 4 பேர் கைது…

சமயபுரம்,டிச.18-
சமயபுரத்தில் மனைவி கண்முன்னே வக்கீல் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வக்கீல்
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள வி.துறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 51). வக்கீல். இவர் மாடக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தார்.
நிலம் விற்பனை தொடர்பாக வக்கீல் சேகருக்கும், ஆச்சிகுமார் மற்றும் அவரது உறவினர் அம்பிகாபதி என்பவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக கடந்த ஆண்டு அம்பிகாபதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகர் மற்றும் சிலரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில் வக்கீல் சேகர், அம்பிகாபதி கொலைக்கும் எனக்கும் எந்த தொடர்பு இல்லை என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நடந்து வருகிறது.
வெட்டிக்கொலை
நேற்று முன்தினம் இரவு வக்கீல் சேகர், தனது மனைவி லதாவுடன், காரில் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு தனக்கு தேவையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு காரில் ஏற முயன்றார்.
அப்போது, மறைந்து இருந்த ஆச்சிகுமார் உள்பட 4 பேர் சேகரை, அரிவாளால் சரமாரியாக வெட்டினர். காரில் இருந்த சேகரின் மனைவி லதா அலறி துடித்தார். அவர் அலறும் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவரவே, 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த வக்கீல் சேகர், தனது மனைவி கண்முன்னே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பலியானார்.
4 பேர் கைது
இது தொடர்பாக சமயபுரம் போலீசார் விரைந்து சென்று சேகர் பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து
வி.துறையூரைச் சேர்ந்த ஆச்சிகுமார், சமயபுரம் டோல்கேட் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த கனகராஜ் (38), கரூர் மார்கெட் பகுதியை சேர்ந்த ராஜா (23), கூடலூர் மாவட்டம், முத்திரைசோலை பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (34) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புட்நோட்

கைது செய்யப்பட்ட கனகராஜ், ேசகர், ஹரிகிருஷ்ணன்.

Leave a Reply