- மாநிலச்செய்திகள்

மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் நிதி அயோக் கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு இந்தியாவில்தான் குறைந்த வரி விதிக்கப்படுகிறது:

மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து செயல்படவேண்டும்., விவசாயிகள் நலனுக்காக பாடுபட வேண்டும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத், நிடி ஆயோக் அதிகாரிகள், மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்கள் கலந்து கொண்டனர். விவசாயம் உற்பத்தி மனித வள மேம்பாடு தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

ஒருங்கிணைந்த செயல்பாடு ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை. நமது நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். பல மாநிலங்களின் கோரிக்கைகளை நமது கொள்கைகள் நிறைவேற்றியுள்ளன. ஏழைகளுக்கு வீடு கிடைக்க செய்வதே நமது இலக்கு. தற்போது நாடு முழுவதும் 2 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. புதிய வீடு கட்டுவதில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்க செய்வதற்காக உழைத்து வருகிறோம்.

ஜல்ஜீவன் திட்டங்கள் மூலம் கிராமங்களில் பைப் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்படும். இதன் மூலம் கூட்டாட்சி தத்துவம் இன்னும் அர்த்தமுள்ளதாக மாறும். கொரோனா காலத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றின. இதன் மூலம் உலகளவில் இந்தியாவிற்கு நற்பெயர் உருவாகியுள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்த கூட்டம் இன்னும் ஆக்கப்பூர்வமானதாக அமைய வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக, ஏழைகள் முன்னேறுவதற்காக வழங்கப்படும் இலவச காஸ் இணைப்பு, இலவச மின்சார இணைப்பு, சுகாதார வசதிகள், தடுப்பூசி போடுவது அதிகரிப்பு, வங்கிக்கணக்கு திறப்பது ஆகியவை அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதை நாம்மால் பார்க்க முடியும்.

2021 மத்திய பட்ஜெட் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் தனியார் நிறுவனங்கள், தங்களின் பங்களிப்பை அளித்துவருகிறது. தன்னிறைவு இந்தியா திட்டத்திலும் தனியார் நிறுவனங்கள் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். சுயசார்பு இந்திய உலகத்திற்கு உதவும்.

கண்டுபிடிப்புகளுக்கும் தொழில்நுட்பத்தையும் நாம் ஊக்கப்படுத்த வேண்டும். சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில், ஸ்டார்ட் அப்கள், சிறிய வணிகங்களை வலுப்படுத்த வேண்டும். மாநிலங்களுக்கு இடையே போட்டியை ஏற்படுத்த வேண்டும். மாநிலங்களின் வளங்களை நாம் முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

உலகத்தில் இந்தியாவில் தான் குறைந்தளவு வரி விதிக்கப்படுகிறது. மத்திய மாநில அரசுகள், தங்களது பட்ஜெட்டை சிறந்த முறையில் அமல்படுத்த ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். விவசாயிகளின் நலனுக்காக அனைத்து மாநில அரசுகளும் உழைக்க வேண்டும். கொரோனா காலத்திலும், நமது விவசாய ஏற்றுமதி அதிகரித்தது.இளைஞர்கள் நமது நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ளனர். வீட்டில் இருந்து பணி செய்வதன் மூலம் தொழிலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எளிதாக தொழில் செய்வதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply