- செய்திகள், திருச்சி, மாவட்டச்செய்திகள்

மத்திய அரசு திட்டங்களை அமல்படுத்த தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை அமித்ஷா குற்றச்சாட்டு…

திருச்சி,ஏப்.14-
மத்திய அரசு திட்டங்களை அமல்படுத்த தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
ஆலோசனை
பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொள்ள தேசிய தலைவர் அமித்ஷா விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்தை வந்தார். அங்கிருந்து ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள எஸ்.ஆர்.எம். ஓட்டலுக்கு சென்ற அவர் அங்கு 234 வேட்பாளர்களுடன் கலந்துரையாடினார்.  கூட்டத்தில் வேட்பாளர்கள் பிரசாரத்தில் எவ்வாறு ஈடுபடுவது, தொண்டர்களை எப்படி வழிநடத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
யாரை தேர்ந்தெடுப்பது?
பின்னர் செய்தியாளர்களிடம் அமித்ஷா கூறியதாது. வருகின்ற தேர்தல் தமிழக மக்களுக்கு முக்கியமான தேர்தல். கடந்த தேர்தல்களில் யாரையும் தேர்ந்தெடுக்க தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை. மாறாக தங்களுக்கு பிடிக்காதவர்களை வெளியேற்றவே வாக்களித்து வந்தார்கள். ஆனால், இம்முறை மக்கள் யாரை தேர்தெடுக்க வேண்டும் என்ற வகையில் வாக்களிக்க வேண்டும். அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஊழலில் மூழ்கி திளைக்கும் கட்சிகள். மத்திய மோடி அரசு பல்வேறு சாதனை திட்டங்களை தமிழக மக்களுக்கு கொண்டு வர பெரும் சிரமப்பட்டு வருகிறது. மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் மத்திய அரசின் பல திட்டங்கள் அமல்படுத்த முடியவில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது மும்முனை போட்டியினிடையே பாரதீய ஜனதா கட்சிக்கு 19.5 சதவீதம் வாக்கு கிடைத்தது. ஆனால் தற்போது 5 முனை போட்டி நிலவுகிறது. எனவே ஊழலுக்கு எதிரான ஆட்சி உருவாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
ஊழல் ஆட்சி
தேசத்திலேயே ஊழல் மிகுந்த ஆட்சி தமிழகத்தில்தான் நடைபெறுகிறது. இந்த ஆட்சிக்கு விடை கொடுக்க பா.ஜனதாவை ஆதரவளிக்க வேண்டும். தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக தற்போது துப்பாக்கி சூடு நடைபெறுவதில்லை. கைது படலமும் இல்லை. மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். தற்போது இந்த மாற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது. தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஈடுபடுவார். பிரசாரத்திற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
பின்னர் மாலையில் திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், இரவு தனி விமானத்தின் மூலம் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக வேட்பாளர்களுடன் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் அமித்ஷாவுடன், மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் சவடேகர், பியூஸ்  கோயல், தமிழக மேற்பார்வையாளர் முரளிதரராவ், தேசிய செயலாளர் எச்.ராஜா,  தமிழ் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இல.கணேசன், ஐ.ஜே.கே. நிறுவன தலைவர்  பாரிவேந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply