- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

மத்திய அமைச்சர் குறை சொன்னபோதே ‘உதய்’ திட்டத்துக்கு பதில் அளிக்காதது ஏன்?

சென்னை, ஏப்.15-
மத்திய அமைச்சர் குறை சொன்னபோதே ‘உதய்’ திட்டத்துக்கு பதில் அளிக்காதது ஏன்? என்று ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
"உதய்" திட்டம்
சென்னை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்  சொன்ன பொய்களின் தொடர்ச்சியாக, விருத்தாசலம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழக்கம் போல தன்னால் முடிந்த அளவு பொய்களைச் சொல்லத் தவறவில்லை.  மத்திய அரசு கொண்டு வந்துள்ள "உதய்" திட்டத்தில் தமிழக அரசு பங்கு பெறாதது குறித்து ஒரு சில மத்திய அமைச்சர்களும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் தமிழக அரசைக் குறை கூறி வருகின்றனர் என்று ஜெயலலிதா பேசியிருக்கிறார்.
மத்திய அரசின் "உதய்" திட்டத்தில் தமிழக அரசு பங்கு பெறாதது பற்றி மத்திய அமைச்சர் கூறிய குறைகளைத்தான் நான் எடுத்துக்காட்டி, இதற்கு முதல்-அமைச்சரின் பதில் என்ன என்று கேட்டிருந்தேனே தவிர, "உதய்" திட்டத்தை ஆதரித்தோ, எதிர்த்தோ எனது  கருத்து எதையும் நான் கூறவே இல்லை.   அப்படிக் கூறாத நிலையில், ஜெயலலிதா ஏன் நிழல் யுத்தம் நடத்தியிருக்கிறார்?
12 ஆயிரம் கோடி
மத்திய அமைச்சர் ஜவடேகர் தனது பேட்டியில்   கூறும்போது,  "தமிழக மின் வாரியத்துக்கு கடந்த ஆண்டில் மட்டும் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு  இழப்பு ஏற்பட்டுள்ளது.  மின் திருட்டு அதிகரித்து வருகிறது. அப்படி இருந்தும்  தமிழகத்தில்  மின்சாரத் துறையை நட்டத்திலிருந்து  மீட்கவும்,  வருவாயை  அதிகரிக்கவும்  உதவும்  மத்திய அரசின் "உதய்" எனும் திட்டத்தைச் செயல் படுத்த மாநில அரசு முன்வரவில்லை.
இத்திட்டத்தைப் பின்பற்றும் மற்ற மாநிலங்கள் நல்ல பலனைப் பெற்றுள்ளன.  மற்ற மாநிலங்களில் செயல்படுத்தியதன் மூலம் 1.80 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்குக் கிடைத்துள்ளது. ஆனால், தமிழக அரசுக்கு  மக்கள் நலனில் அக்கறை இல்லை. நியாயமான நுகர்வோர் பயன் பெறுவதைத்  தமிழக அரசு விரும்பவில்லை" என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்திருப்பதை, நான் எடுத்துக்காட்டி, இதற்கு முதல் அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டுமென்றுதான் எழுதியிருந்தேன்.
எனது அறிக்கையில் "உதய்" திட்டத்தை தமிழக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று நான் கூறவில்லை.   மத்திய அமைச்சர்கள் அந்தத் திட்டத்தைப் பற்றி தமிழக அரசு மீது சாட்டியுள்ள குற்றச்சாட்டிற்கு என்ன விளக்கம் என்றுதான் நான் கேட்டிருக்கிறேன்.
மதுவிலக்கு
இந்தத் திட்டம் பற்றி தற்போது விளக்கம் அளித்துள்ள ஜெயலலிதா, மத்திய அமைச்சர் பேட்டியளித்தவுடன் அப்போதே பதில் கூறியிருக்கலாமே? அப்படிப் பதில் கூறியிருந்தால் பிரச்சினையே எழுந்திருக்காதே. அப்போது வாயை மூடிக் கொண்டிருந்து விட்டு, தற்போது விருத்தாசலத்தில் போய் என் மீது பாய்வானேன்? பேசுவதற்கு வேறு பொருள் இல்லை என்பதால், ஜெயலலிதா, நான் சொல்லாததைச் சொன்னதாகக் கற்பனை செய்து கொண்டு பதில் கூறியிருக்கிறார்.
மதுவிலக்கு பற்றி, அதன் வரலாற்று ரீதியான ஆதாரங்களின் அடிப்படையில், தொடர்ச்சியான  நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி  நான் விளக்கமாகக் கூறிய பிறகும், ஜெயலலிதா அவைகளைப் படிக்காமலேயோ,  அல்லது படித்ததை மறைத்து விட்டோ, திரும்பத் திரும்ப ஒவ்வொரு கூட்டத்திலும் சொன்னதைச் சொல்லும்  கிளிப்பிள்ளை என்பதைப் போல,  மதுவிலக்கை தி.மு. கழக அரசுதான் ரத்து செய்தது என்று சாதித்து வருகிறார்.
தமிழக அரசுக்கு அப்போதிருந்த நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மதுவிலக்கை கழக அரசு ஒத்திதான் வைத்தது;  அதுவும் ஒரு சில ஆண்டுகளுக்குத்தான். 1974-ம் ஆண்டு, தி.மு.க. ஆட்சியிலேயே மது விலக்கு மீண்டும் என்னாலேயே கொண்டு வரப் பட்டுவிட்டது.  இப்போது  நடைபெற்று வரும் மதுக் கடைகள் முதன் முதலாக அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டவைதான்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Leave a Reply