- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

மதுரை சாலை விபத்தில் பலியான 13 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்

சென்னை, பிப்.7-
மதுரை மாவட்டத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா  ரூ.1 லட்சமும்,  பலத்த காயமடைந்த  32 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

லாரி-பேருந்து மோதல்

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சுப்புலாபுரம் கிராமம், பாறைபட்டி சோதனைச் சாவடி அருகே நேற்று (6-ந் தேதி) பிற்பகல் திருநெல்வேலியிலிருந்து குமுளி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், கரூரிலிருந்து செங்கோட்டை சென்று கொண்டிருந்த லாரியும் மோதியதில், பேருந்தில்  பயணம் செய்த  13 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு  எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சம்பவ இடத்தில் அமைச்சர்…

இந்த விபத்து குறித்து எனக்கு செய்தி கிடைத்தவுடன் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆகியோரை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று,  காயமடைந்தவர்களை மீட்டு, அவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த சாலை விபத்தில் 32 பேர் பலத்த காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெயலலிதா உத்தரவு
இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா  ரூ.1 லட்சமும்,  பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

Leave a Reply