- செய்திகள்

மதுரை எம்.எல்.ஏ. ஆங்கிலத்தில் பேசலாமா? நடிகர் கருணாஸ் விமர்சனம்- தி.மு.க. கடும் எதிர்ப்பு…

சென்னை, ஜூலை.28-
சங்கம் வளர்த்த மதுரையில் பிறந்த தி.மு.க. உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் ஆங்கிலத்தில் பேசியதை நடிகர் கருணாஸ் (அ.தி.மு.க.) சுட்டிக்காட்டியதால் தி.மு.க.வினர் பெரும் அமளியில் ஈடுப்பட்டனர்.
பட்ஜெட் விவாதம்
சட்டசபையில் பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்று திருவாடணை தொகுதி உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் (அ.தி.மு-க.) பங்கேற்று பேசினார். அப்போது அவர், ‘மதுரை மத்திய தொகுதியை சேர்ந்த திமுக உறுப்பினர் தியாகராஜன் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் ஆங்கிலத்தில் பேசியதால் எதிர்முனையில் இருப்பவர்களுக்கு எதுவும் தெரியாது அதனால் ஆங்கிலத்தில் பேசினால் குறுக்கீடு இருக்காது என்று தி.மு.க. கருதுகிறார்கள்' என்று கருணாஸ் குறிப்பிட்டார்.
தி.மு.க. எதிர்ப்பு
இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் கடும் எதிர்ப்புத்தெரிவித்தனர். இதனால் சபையில் அமளி நிலவியது.
இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, ‘கருணாஸ் தானாக கற்பனை செய்து கொண்டு பேசியிருக்கிறார். அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்’ என்றார்.
சபாநாயகர் நிராகரிப்பு
அப்போது  சபாநாயகர் தனபால், ‘கருணாஸ் கருத்துக்கு எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலினின் கருத்தை பதிவு செய்கிறேன், ஆனால் அவரது பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்று கூறி விட்டு தி.மு.க.வின் கோரிக்கையை நிராகரித்து, உறுப்பினர் கருணாஸ் பேச்சை தொடரும்படி அழைத்தார்.
கோபம்
மீண்டும் கருணாஸ் பேசும்போது, ‘சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை நகரில் இருந்து பேசியவர், தாய்மொழியில் பேசாமல் வேற்று மொழியில் பேசியிருக்கிறார் என்று சுட்டிக்காட்டினார். இதனால் தி.மு.க.வினர் மேலும் கோபமடைந்து எழுந்தனர்.
ஸ்டாலின் குறிக்கீடு
இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், ‘சபையில் ஆங்கிலத்திலும் பேசலாம் என்ற மரபு இருக்கிறது. தாங்கள் அனுமதித்தால் தெலுங்கில் கூட பேசலாம். உறுப்பினர் கருணாஸ் குறிப்பிட்டதை நீக்க வேண்டும்’ என்றார்.
இதையடுத்து சபாநாயகர் தனபால் கூறுகையில், ‘நடிகர் கருணாஸ் பேசியதற்கு எதிர்க்கட்சித்தலைவர் மு..க.ஸ்டாலின், துணைத்தலைவர் துரைமுருகன் ஆகியோரின் கருத்துகள் பதிவாகியிருக்கிறது. கருணாஸ் கூறியது ஒன்றும் சபையில் பயன்படுத்த கூடாத வார்த்தைகள்  ஒன்றும் இல்லை. அப்படியிருந்தால் நீக்கலாம்’ என்றார்.
பேரவை விதி
இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு,  ‘உறுப்பினர் பெயரை குறிப்பிட்டு சொன்னதால் சொல்கிறேன். உறுப்பினர் தியாகராஜன் தமிழில் சரளமாக பேச இயலாது என்பதால் உங்கள் அனுமதி பெற்று ஆங்கிலத்தில் பேசினார். இதே அவையில் உறுப்பினர் கோபிநாத், தெலுங்கில் பேசியபோது முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெலுங்கில் பதிலளித்தார். தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் பேசலாம் என்று பேரவை விதியே இருக்கிறது’ என்றார்.
சமாதானம்
பின்னர் சபாநாயகர் தனபால் சம்பந்தப்பட்ட உறுப்பினர் தியாகராஜன் விளக்கமளிக்க அனுமதித்தார். அவர் பேசும்போது, ‘தமிழில் சில வார்த்தைகள் பயன்படுத்துவதில் தொழில்நுட்ப ரீதியிலான தவறுகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்பதால் தான் ஆங்கிலத்தில் பேசினேன்’ என்றார்.
இதனால் தி.மு.க.வினரின் அரை மணிநேர அமளியில் இருந்து சட்டசபை அமைதிக்கு திரும்பியது.

Leave a Reply