- செய்திகள்

மதுராந்தகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் இடையே பாகுபாடு புகுத்துவதாக புகார்…

மதுராந்தகம், ஆக.18-

பள்ளி மாணவர்கள் இடையே பாகுபாடு புகுத்துவதாக கூறி ஒரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

பள்ளி விழாவில் மோதல்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள புழுதிவாக்கம் கிராமத்தில் உள்ள அரசினர் நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தினத்தன்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அங்கு பார்வையாளராக அப்பகுதியை சேர்ந்த இருதரப்பு மக்களும் கலந்துகொண்டனர்.

இதில் ஒரு பிரிவினர், மற்றொரு பிரிவு மாணவர்களை தனியாக அமர வைக்கப்படி தலைமை ஆசியரிடம் கூறி உள்ளனர். இதனை தலைமை ஆசிரியர் ஏற்க மறுத்துள்ளார். அப்போது அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பார்வையாளர் சில பேர் விசில் அடித்து கேலி, கிண்டல் செய்ததால் இரு பிரிவினர் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. மறுநாள் இரு பிரிவினர் இடையே கை கலப்பு ஏற்பட்டுள்ளது.

திடீர் சாலை மறியல்

இதனால் ஒரு தரப்பினர் மட்டும் படாளம் காவல் நிலையத்தில் மற்றொரு தரப்பினர் மீது புகார் கொடுத்து உள்ளனர்; இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு பிரிவு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் மதுராந்தகம் – வேடந்தாங்கல் செல்லும் கூட்டு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன.

பேச்சுவார்த்தை

இதனை அறிந்து வந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், படாளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறுகையில் பள்ளியில் இரு பிரிவினர் இடையே பாகுபாடு பார்ப்பதாகவும், தங்கள் குழந்தைகளை சிலபேர் திட்டுவதாகவும், தனித்தனியே உட்கார வைப்பதாக ஆசிரியர்களுக்கு நிர்ப்பந்தம் செய்வதாகவும், 100-நாள் வேலை போன்ற இடத்தில் சாதியின் பெயரில் பிரிக்கப்படுகிறது எனவும் பொது மக்கள் புகார் கூறினர்.

இவைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் தெரிவித்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் வட்டாசியர் கற்பகம், பள்ளியில் ஆய்வு செய்து உரிய நடைவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த சாலை மறியலால் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

படம் உள்ளது
மதுராந்தகம் – வேடந்தாங்கல் செல்லும் கூட்டு சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

Leave a Reply