- செய்திகள், தேசியச்செய்திகள்

மசூத் அசார் விவகாரம் ‘தீவிரவாதிகளுக்கு மத்தியில் எந்த வேறுபாடும் இல்லை’

புதுடெல்லி, ஏப். 22:- மசூத் அசார் விவகாரம் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று அளித்த பேட்டியில், ‘தீவிரவாதிகளுக்கு மத்தியில் எந்தவித வேறுபாடும் இல்லை’ என்று கூறினார்.

சர்வதேச தீவிரவாதி?

பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நா. சபை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு, சீனா ஒத்துழைப்பு தராததால், இந்த விவகாரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடு சீனா என்பதால், அதற்கு ஆதரவாக சீனா இருந்து வருகிறது. இந்நிலையில், சீனாவுக்கு சென்ற பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தயக்கம் இல்லை

இந்நிலையில், தனது சீன பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று நாடு திரும்பிய பாரிக்கர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
எனது சீன பயணத்தின்போது மசூத் அசார் விவகாரம் குறித்து பேசினேன். தீவிரவாதிகளுக்கு மத்தியில் எந்தவித வேறுபாடும் கிடையாது என்பதை சீன அதிகாரிகளிடம் நான் தெளிவுபடுத்தினேன். தீவிரவாதிகள் அனைவரையும் ஒரே விதமாகத்தான் நடத்த வேண்டும். இதில், ஐ.நா.சபை சரியான நடவடிக்கை எடுத்து வருகிறது. இருதரப்பு பிரச்சினைகளை சீனாவிடம் வெளிப்படுத்த இந்தியா ஒருபோதும் தயங்கியது கிடையாது.

அதிகாரிகள்

மசூத் அசார் விவகாரத்தை, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியிடம் பேசினார். அமெரிக்காவுடன் இந்தியா ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்கள் குறித்து, சீன அதிகாரிகள் என்னிடம் கேட்டனர். அவர்களிடம், பல்வேறு நாடுகள் உடன் இந்தியா தெளிவான வெளியுறவுக் கொள்கையை வகுத்துக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில்தான், அமெரிக்காவுடன் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன என்று தெளிவுபடுத்தினேன். இந்தியா – சீனா ராணுவ உயர் அதிகாரிகளின் கூட்டம் வெகு விரைவில் நடைபெறும்.

ஊடுருவல் அல்ல

எனது பேச்சுவார்த்தைகள் அனைத்தும், வெளிப்படையானதாக, ஆக்கப்பூர்வமாக இருந்தது. எல்லைப் பிரச்சினை குறித்தும், பாதுகாப்பு தொடர்பாகவும் சீன அதிகாரிகளுடன் பேசினேன். எல்லையில் சீன ராணுவத்தினர் ஊடுருவதாக நாம் நினைக்கிறோம். அவர்கள் எல்லைப்பகுதியில் ரோந்து மட்டுமே மேற்கொள்கிறார்கள். அவர்கள் வருவார்கள்; பின்னர் சென்று விடுவார்கள். சீன ராணுவத்தின் இந்த நடவடிக்கையும், குறைந்து விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply