- செய்திகள்

மக்கள் மத்தியில் பேசப்படாத ஒரே மொழி சமஸ்கிருதம்தான்! கி.வீரமணி பேட்டி…

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது திராவிடர் கழகப் பொதுச் செயலாளரான கி.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

பேட்டியின்போது, ‘‘புதிய கல்விக்கொள்கை, இது ஓர் ஆர்.எஸ்.எஸ். கல்வித் திட்டம் ஆகும். ஆர்.எஸ்.எஸ்சினுடைய கல்வித் திட்டம் பன்மதங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள் இருக்கிற இந்த நாட்டில், என் மதம் மட்டுமே ஆளவேண்டும், என் மொழி சமஸ்கிருதம் மட்டுமே பொதுமொழியாக இருக்க வேண்டும், என் கலாசாரம் பார்ப்பனீய, சமஸ்கிருத கலாசாரமாக இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு அடையாளமாகத்தான் இங்கேயே அதிலே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்திய அரசியல் சட்டத்திலே எட்டாவது அட்டவணையிலே 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த 22 மொழிகளிலே மக்கள் மத்தியிலே பேசப் படாமல் இருக்கக்கூடிய ஒரே மொழி சமஸ்கிருதம்தான். பள்ளிக்கூடத்திலிருந்து பல்கலைக்கழகம் வரையில், அம்மொழியை கற்பிப்பதற்கு மிகவும் தாராளமான வசதிகள் செய்யப்படும். ஆகவே, மற்ற 21 மொழிகளுக்கு செம்மொழி தமிழ் உள்பட வாய்ப்புகள் கிடையாது. அவற்றுக்கு பணம் ஒதுக்கமாட்டார்கள் என்பதை தெளிவாகவே அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

எனவே, ஒட்டு மொத்தமாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல், எல்லோரும் சேர்ந்து ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தால், அது ஏக மனதாக நிறைவேற்றப்படும். எதிர்க்கட்சித் தலைவருடைய அந்தத் தீர்மானத்தை ஏற்று, கொண்டுவரலாம். இல்லையென்றால், ஆட்சியாளர்களே தீர்மானத்தைக் கொண்டு வரட்டும். எதிர்க்கட்சிகளும் ஆதரிக்கும்.

இந்த இரண்டையும் செய்யமாட்டோம் என்றால், அதை அத்தனைக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து, தமிழ்நாடு முழுக்க மக்கள் மன்றத்தில் நிறைவேற்றிக் காட்டுவோம். இந்தப் போராட்டம் ஒரு தொடக்கம்தான். இதுவே முடிவல்ல.’’ என்று காட்டமாகத் தெரிவித்தார் கி.வீரமணி.

Leave a Reply