- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள், மாவட்டச்செய்திகள்

மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்ததால் தே.மு.தி.க. உடைந்தது

சென்னை, ஏப்.6-
மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க. சேர்ந்ததற்கு 3 எம்.எல்.ஏக்கள் மற்றும் 7 மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் நேற்று தே.மு.தி.க. உடைந்தது. இந்த சூழ்நிலையில் விஜயகாந்த், மற்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சந்திரகுமார் ஆகியோர் இன்று தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த தனது சினிமா வாழ்க்கையை 1978-ம் ஆண்டு தொடங்கினார். முதன் முதலில் ‘இனிக்கும் இளமை’ படத்தில்  எம்.ஏ.காஜா நடிக்க வைத்தார். விஜயராஜ் என்று இருந்த அவரது பெயரை விஜயகாந்த் என்றும் மாற்றினர். திரை உலகில் உச்சத்தை எட்ட தொடங்கியதும் 1978ம் ஆண்டு தென்னிந்திய தலைமை ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. பின்னர், 1980ல் அகில இந்திய தலைமை ரசிகர் மன்றம் என மாற்றப்பட்டது.
2005-ல் கட்சி தொடங்கினார்
இதையடுத்து, 1982-ம் ஆண்டு தமிழ்நாடு விஜயகாந்த் ரசிகர் மன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந் தேதி தனது ரசிகர் மன்றத்திற்கு கொடியை அறிமுகம் செய்தார். இந்நிலையில், 2005-ம் ஆண்டு கட்சி தொடங்கப்போவதாக திருவண்ணாமலையில் விஜயகாந்த் அறிவித்தார்.  அதன்படி, கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந் தேதி மதுரையில் மாநாடு நடத்தினார். அந்த மாநாட்டில், ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ என்று பெயரை சூட்டி  விஜயகாந்த் புதிய கட்சியை தொடங்கினார்.
சட்டசபையில் நுழைந்தார்

இந்நிலையில், 2006-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதியிலும் விஜயகாந்த் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தினார். அனைத்து இடங்களில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கு அடுத்த நிலையில் தே.மு.தி.க.வேட்பாளர்கள் வாக்குகளை வாங்கினார்கள். இந்த தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் நின்ற விஜயகாந்த் மட்டுமே வெற்றிபெற்றார். அதன்மூலம் தே.மு.தி.க.வின் ஒரே எம்.எல்.ஏ.வாக விஜயகாந்த் தமிழக சட்டசபையில் நுழைந்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து

பின்னர், 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றது. இந்நிலையில்தான், 2011-ம் ஆண்டு கட்சி தொண்டர்களின் விருப்படி அ.தி.மு.க.வுடன் விஜயகாந்த் கூட்டணி வைத்து தமிழக சட்டசபை தேர்தலை சந்தித்தார். இந்த கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்டார். இதில் 29 இடங்களை தே.மு.தி.க. பிடித்தது.

ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க. அந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. இதனால் விஜய்காந்த் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.
கூட்டணி முறிந்தது

அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தினால், சில மாதங்களில் விஜயகாந்த் அந்த கூட்டணியில் இருந்து விலகினார். இதன் காரணமாக தே.மு.தி.க.விற்கும் – அ.தி.மு.க.விற்கும் இடையே கருத்து மோதல்களும், விமர்சனங்களும் உருவானது. இதனால் விஜயகாந்த் அ.தி.மு.க. ஆட்சியின் செயல்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்
கூட்டணியால் சிக்கல்

இந்த சூழ்லையில், தமிழக சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 16-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைப்பதில் கவனம் செலுத்தியது. தி.மு.க.வும், பா.ஜனதாவும் தங்களது அணிக்கு வரும்படி தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் தனித்து போட்டியிட போவதாக அறிவித்த விஜயகாந்த் திடீரென்று மக்கள் நலக் கூட்டணியுடன் தொகுதி உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டார். இதன்படி, 124 தொகுதிகள் தே.மு.தி.க.விற்கும் 110 தொகுதிகள் மக்கள் நலக் கூட்டணிக்கும் என ஒப்பந்தம் ஆனது. இந்த முடிவு அந்த கட்சியின் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

கருத்து வேறுபாடு

இந்த பரப்பரப்பான சூழ்நிலையில் தே.மு.தி.க.வைச் சேர்ந்த 2 மாவட்ட செயலாளர்கள், கட்சியின் நடவடிக்கை மீது வெறுப்பு தெரிவித்து தி.மு.க.வில் இணைந்தனர்.
இதைத்தொடர்ந்து தே.மு.தி.க.கொள்கை பரப்பு செயலாளரும், சட்டமன்ற கொறடாவுமான வி.சி.சந்திரகுமார், சேலம் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர்.பார்த்திபன்,  வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், .திருவள்ளூர் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சேகர்,திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் செஞ்சி சிவா,.உயர்மட்ட குழு உறுப்பினர் வீரப்பன், ஈரோடு மாவட்ட செயலாளர் இமயம் சிவக்குமார், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தே.மு.தி.க.துணை செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தேனி முருகேசன் என 10 மாவட்ட செயலாளர்களுக்கும் கட்சியின் நடவடிக்கை மற்றும் கூட்டணி தொடர்பான கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கட்சிக்கு உள்ளேயே நீருபூத்த நெருப்பாக புகைந்துகொண்டிருந்த புகைச்சல் நேற்று பூகம்பமாக வெடித்தது. நேற்று காலையில் இருந்தே அரசியல் வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நேற்று மாலை 2.30 மணிக்கு தே.மு.தி.க.கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் தலைமையில், 10 மாவட்ட செயலாளர்களும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளா் மன்றத்துக்கு வந்தனர்.

தோல்வியும்- வெற்றியும்
அங்கு வி.சி.சந்திரகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தே.மு.தி.க. தொடங்கிய நாள் முதல் நாங்கள் கட்சி தலைவர் விஜயகாந்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். முதல் முறையாக 2006-ம் ஆண்டு நடைபெற்ற  சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 8.3 சதவீத வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தோம். இதில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் இன்றும் கடன் சுமையில் வாழ்ந்து வருகின்றனர். பின்னர் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட்டு பலர் தோல்வி அடைந்தனர்.  மீண்டும் 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு தோல்வி அடைந்தோம்.
கட்சிக்கு விசுவாசம்
இதைத்தொடர்ந்து 2011-ம் ஆண்டு நடைபெற்ற  சட்டசபை தேர்தலில் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் ஆகியோரின் கருத்துக்களின் அடிப்படையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 29 சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றோம். இதன்பின்னர் 9 சட்டசபை உறுப்பினர்கள் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியை விட்டு வெளியேறினார்கள். ஆனால் அப்போதும் நாங்கள் கட்சிக்கும், தலைவருக்கும் விசுவாசமாக இருந்தோம்.
தொடர்ந்து தோல்வி
பின்னர் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என அனைத்து மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் எதிர்பார்த்த போது, அ.தி.மு.க.வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீண்டும் தனித்து போட்டியிட்டு, தோல்வி அடைந்தோம். கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது கட்சி நிர்வாகிகளின் விருப்பத்திற்கு மாறாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து மீண்டும் தோல்வி அடைந்தோம்.
கட்சி தொடங்கிய நாள் முதல் இந்த நாள் வரையிலும் தேர்தலில் தொடர்ந்து தோல்வி மட்டும் சந்தித்து வருவதால், கட்சிக்கு உண்மையாக உழைக்கும் மாவட்ட செயலாளர்களில் இருந்து அடிமட்ட உறுப்பினர்கள் வரை பலர் தொடர்ந்து கடன் அடைந்து, பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
தி.மு.க.வுடன் கூட்டணி
இந்த நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கிலும்,  தமிழகத்தில் நல்லாட்சி கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் கடந்த ஆண்டு நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களின் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என 95 சதவீத கட்சி தொண்டர்களின் விருப்பத்தை கட்சி தலைமையிடம் தொிவித்தோம். அதன் பின்பு நடைபெற்ற கூட்டங்கள், வேட்பாளர்கள் நேர்காணல் போன்றவற்றிலும் கட்சி தலைமையிடம் அனைத்து உறுப்பினர்களும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.
ஆனால் சென்னையில் கடந்த மாதம் 10-ந் தேதி நடைபெற்ற மகளிர் மாநாட்டில், யாருடனும் கூட்டணி இல்லை. இந்த முறையும் தனித்து போட்டி என அறிவித்து விட்டு, தற்போது மக்கள் நலக்கூட்டணியுடன் கைகோர்த்து தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்தது அனைத்து தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கோரிக்கை
இன்றைய சூழ்நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் கட்சி தலைமை நிர்வாகிகள் முடிவை மாற்றி, மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வெளியேறி தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
இவ்வாறு சந்திரகுமார் கூறினார்.

மாவட்ட நிர்வாகிகளின் இந்த முடிவை கடிதமாக கட்சி தலைவர் விஜயகாந்திற்கு கடந்த மாதம்24-ந் தேதி  அனுப்பியுள்ளோம், என்று நிருபர்களிடம் அந்த கடித நகலை வழங்கினார். இதுகுறித்து கட்சி தலைவர் பரிசீலனை செய்து மாற்று முடிவு எடுக்க வேண்டும் என சந்திர குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணி தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தே.மு.தி.க. உடைந்த  பிரச்சினை, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply