- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

மக்கள் நலக்கூட்டணி-தே.மு.தி.க.வுக்கு இடையே எந்த பாதிப்பும் இல்லை

சென்னை, ஏப்.7-
மக்கள் நலக்கூட்டணி-தே.மு.தி.க.வுக்கு இடையே எந்த பாதிப்பும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார்.
கையெழுத்து இயக்கம்
நீதிபதிகள் நியமனத்தில் "கொலிஜியம்" முறையில் தலித்துக்களுக்கு இட ஒதுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு முதல் கையெழுத்தை போட்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
"கொலிஜியம்" முறை
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னும் 30 நீதிபதி பதவிகள் காலியாகவே உள்ளது. இதில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் "கொலிஜியம்" முறையை மத்திய அரசு கடைப்பிடிக்க வேண்டும். தலித் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு பதவிகள் வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உள்ள தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட வழக்கறிஞர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கையெழுத்து பிரதிகள் அனுப்பிவைக்கப்படும்.
எந்த பாதிப்பும் இல்லை
பின்னர் தே.மு.தி.க. உட்கட்சி பூசல் குறித்து நிருபர்கள் கேட்டபோது, தே.தி.மு.க.வில் இருந்து சந்திரகுமார் தலைமையில் சில மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து, வெளியேறி இருப்பது வருத்தம் அளிக்கிறது. சந்திரகுமார் நல்ல மனிதர். தே.மு.தி.க.வுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பவர். கூட்டங்கள், மாநாடுகளில் பேசும்போது கூட விஜயகாந்த் மற்றும் கட்சிக்கு விசுவாசமாக பேசுவார். அண்மையில் கூட ஈரோடு மாநாட்டில் விஜயகாந்த், பிரமேலதாவுடன் கலந்துகொண்டு, தமிழகத்தில் மாற்று ஆட்சி கிடைக்க வேண்டும். எனவே விஜயகாந்தை முதல்-அமைச்சராக மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என பேசினார்.
தற்போது தே.மு.தி.க.வில் இருந்து அதிருப்தி நிர்வாகிகள் வெளியேறி இருப்பதால் மக்கள் நலக்கூட்டணிக்கும், தே.மு.தி.க.விற்கும் இடையே எந்தவித பாதிப்பும் ஏற்படாது. வருகிற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி மற்றும் தே.மு.தி.க. தலைமையிலாக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply