- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள், மாவட்டச்செய்திகள்

மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீதான வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்

சென்னை, ஏப். 4-
மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது தமிழக அரசு பதிவு செய்துள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.
குரல்வளை
இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி  இருப்பதாவது:-

மதுவிலக்குக்காக போராடி வரும் ‘மக்கள் அதிகாரம்’ என்ற அமைப்பு, திருச்சியில்  கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி  மது ஒழிப்பு  மாநாட்டை நடத்தியது.  இதில், பேசிய அந்த அமைப்பின் மாநில அமைப்பாளர் சி.ராஜு, நிர்வாகக் குழு உறுப்பினர் காளியப்பன்,  டேவிட் ராஜ்,  சென்னை ஆனந்தியம்மாள்,  மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்புக் குழு வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின்  மாநிலப் பொது செயலாளர் தனசேகரன்  ஆகிய 6 பேர் மீது,  மாநாடு  நடந்து முடிந்து ஒரு மாதத்துக்குப் பிறகு மார்ச் மாதம் 26-ந் தேதி  தமிழக அரசு தேச துரோக வழக்குப்பதிவு செய்துள்ளது. ஜனநாயக ரீதியான  கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை ஜெயலலலிதா  ஆட்சியில் எப்படியெல்லாம் நெரிக்கப்படுகிறது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை.
மது கொடுமைகள்
மதுவால் குடும்பத்திலும், சமூகத்திலும்  ஏற்படும் கடுமையான  பாதிப்புகள் பற்றி திருச்சியில்  நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில்  விரிவாகப் பேசப்பட்டுள்ளது. மேலும் மதுவால்  நேரடியாகவும், மறைமுகமாகவும்  பல கொடுமைகளை அனுபவித்தவர்களை அழைத்து வந்து, நெஞ்சை உலுக்கிடும் அவர்களுடைய  அனுபவங்களைப் பேச வைத்துள்ளனர்.

இந்தியக் குற்றவியல் நடைமுறைகளில் இருந்து, ‘தேசத்துரோகம்’ எனும் பிரிவையே நீக்க வேண்டும் என்று டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளுக்குப் பிறகு  நாட்டில் பரவலாக விவாதம்  நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் அ.தி.மு.க. தொடர்ந்து இப்படி தேசத்துரோக வழக்குகளை தங்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்போர் மீது  பதிவு செய்து வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அந்த வழக்குகளை உடனடியாக தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறி உள்ளார்.

Leave a Reply