- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

மக்களின் குறைகளை களைந்திட புதிய வசதி அம்மா அழைப்பு மையத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சென்னை, ஜன.20-
பொது மக்களின் குறைகளை விரைவில் களைந்திட அமைக்கப்பட்டுள்ள அம்மா அழைப்பு மையத்தை (அம்மா கால் சென்டர்)  முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் நேற்று காணொலி காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கட்டணமில்லா தொலைபேசி
ஏழை எளிய மக்களும், சாமானியர்களும்  அரசுக்கு தங்கள் குறைகளைத் தெரிவித்து உரிய தீர்வு பெறும் நோக்கத்துடன் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது. இந்த பிரிவின் மூலம் நேரடியாகவும்,  அஞ்சல் வழியாகவும்,  முதல்-அமைச்சரின் தனிப்பிரிவின் வலைதளம் மூலமாகவும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் குறைகளை விரைந்து பெற்று, அதனைக் களைந்திடும் நோக்கில், கணினிவழி தொலைபேசி அழைப்பு ஒருங்கிணைத்தல், குரல் பதிவு மற்றும் பிரித்தறிதல் போன்ற புதிய தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன், தினமும் 24 மணிநேரமும் செயல்படும், கட்டணமில்லா  தொலைபேசி(டோல் ப்ரீ) எண் 1100 மூலம் எங்கிருந்தும்,  எப்போதும் பொது மக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் "அம்மா அழைப்பு மையம்" அமைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15 ஆயிரம் அழைப்புகளை ஏற்கும் வகையில், 138 அழைப்பு ஏற்பாளர்களுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும், தேவைக்கேற்ப அழைப்பு ஏற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இந்த அம்மா அழைப்பு மையத்தை (அம்மா கால் சென்டர்)  முதல்-அமைச்சர் ஜெயலலிதா  தலைமைச் செயலகத்தில் நேற்று காணொலி காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார்.

எஸ்.எம்.எஸ். மூலம் விவரம்
இந்த மையத்தின் மூலம், பொது மக்களிடமிருந்து அழைப்பு பெறப்பட்டு, அழைப்பவர் விவரம், குறைகள் ஆகியவை கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு இ-மெயில், தொலைபேசி மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பி வைக்கப்படும். அதுமட்டுமின்றி, எந்த துறையின், எந்த அதிகாரிக்கு அவரது குறைகள் குறித்த விவரம் அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரம்,  அழைத்தவருக்கு, எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும்.  மேலும், அவரது குறை குறித்து சம்பந்தப்பட்ட துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விவரமும் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுத் துறை முதன்மைச் செயலாளர் யத்தீந்திர நாத்ஸ்வேன், தகவல் தொழில் நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் ராமச்சந்திரன், முதல்-அமைச்சரின் தனிப் பிரிவின் சிறப்பு பணி அலுவலர் டாக்டர் சந்தோஷ் பாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply