- செய்திகள், விளையாட்டு

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து ஐபிஎல் போட்டிகள் மாற்றமில்லை-சுக்லா திட்டவட்டம்

மும்பை, ஏப்.6‘-
மகாராஷ்டிர மாநிலத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவுவதால் அங்கு நடைபெற இருந்த போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியின் ஸ்பான்சரான விவோ மொபைல் நிறுவனத்தின் சார்பில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சுக்லா இதைக் குறிப்பிட்டார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19 ஆட்டங்கள் மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே, நாக்பூர் ஆகிய இடங்களில் நடக்க உள்ளது. இந்த நிலையில் இந்தப் போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று மாநில பாரதி ஜனதா செயலாளர் விவேகானந்த குப்தா கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மாநில அரசுக்கு வரி செலுத்த ஐபிஎல் ஆணையருக்கு உத்தவிட வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் நேற்று பொது நல வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் `வறட்சி, தண்ணீர் பஞ்சம் கவலை தரும் விஷயங்கள்தான். இதற்காக எல்லா வழியிலும் உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். அரசு ஏதாவது திட்டத்தை வகுக்கட்டும். அதற்கு உதவத் தயாராக இருக்கிறோம்' என்று சுக்லா குறிப்பிட்டார்.

விவசாயத்துக்கு என  ஏகப்பட்ட அளவில் தண்ணீர் தேவை. இந்த நிலையில் போட்டியின் மைதானத்துக்காக தேவைப்படும் தண்ணீரில் இருந்து அதை பூர்த்தி செய்துவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

விளையாட்டுக்காக குறைந்த அளவுதான் தண்ணீர் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார். மாநிலத்தின் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஐபிஎல் போட்டிகள் வரும் 9-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது.

Leave a Reply