- செய்திகள், தேசியச்செய்திகள்

‘போலீஸ் அத்துமீறலே இந்தியாவில் முக்கிய மனித உரிமை பிரச்சினை’ அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்

 

வாஷிங்டன், ஏப். 15:- போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரின் அத்துமீறல்தான், இந்தியாவில் மிகப்பெரிய மனித உரிமை பிரச்சினை என்று அமெரிக்க ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் வன்முறை

கடந்த 2015-ல் பல்வேறு நாடுகளில் நிலவிய மனித உரிமை பிரச்சினைகள் குறித்த ஆய்வு அறிக்கையினை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி நேற்று வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ல் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதில் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, குஜராத் அரசு தவறி விட்டது என்று, மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

சிறை மரணங்கள், சித்திரவதை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரால் செய்யப்படும் அத்துமீறல்கள்தான், இந்தியாவின் மிகப்பெரும் மனித உரிமை மீறல் பிரச்சினை.
காஷ்மீர், வடகிழக்கு

அத்துடன், ஊழல், பெண்கள், குழந்தைகள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணையில் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பது ஆகியவையும் இந்தப்  பிரச்சினைகளில் அடங்கும்.

ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதிகள், சட்டவிரோதமாக ஊடுருவுவோர், தீவிரவாதிகள் ஆகியோர் பிரச்சினையாக உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களிலும், மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு படையினர், போலீசார், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கொல்லப்படுவது இன்னொரு முக்கிய மனித உரிமை மீறல் பிரச்சினையாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply