- அரசியல் செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.

இதுகுறித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கும்பலால் பாதிக்கப்பட்ட பொள்ளாச்சியை சேர்ந்த மாணவி ஒருவர் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பொள்ளாச்சி மாக்கினாம் பட்டியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இதுபோன்று பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோவாக எடுத்து பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்போது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை உள்ளூர் போலீசார் மற்றும் சி.பி.சி.ஐ.டி விசாரித்தால் உண்மையான குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து தமிழக அரசு அந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது. அதன்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை தொடங்கினர். முதலில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் பண்ணை வீடு மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட மற்றவர்களின் வீடுகளிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அங்கிருந்து லேப்-டாப், செல்போன் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

அப்போது அதில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்கள் பதிவாகி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே இந்த வழக்கில் இவர்கள் மட்டும் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தேகித்தனர்.

எனவே கைப்பற்றப்பட்ட செல்போன்களில் அவர்கள் யார்? யாருடன் பேசினர் என்ற விவரங்களை சேகரித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது சம்பவம் நடந்த அன்று மேலும் 3 பேரின் செல்போன் சிக்னல்கள் அந்த இடத்தில் இருப்பதை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

செல்போன் நம்பரை கொண்டு விசாரித்த போது அவர்கள் பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்த அ.தி.மு.க நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம்(34) மற்றும் பாபு என்கிற மைக் பாபு(27), ஆச்சிப்பட்டியை சேர்ந்த ஹெரன் பால்(29) என்பதும், இவர்கள் திருநாவுக்கரசின் நெருங்கிய நண்பர்கள் என்பதும் தெரியவந்தது.

எனவே இவர்கள் 3 பேருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

அதற்காக நேற்று மாலை பொள்ளாச்சிக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் அருளானந்தம், பாபு, ஹெரன்பால் உள்ளிட்ட 3 பேரையும் பிடித்து கோவைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முடிவில் இவர்களுக்கும், இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் அவர்கள் 3 பேரையும் இன்று காலை கைது செய்தனர்.

பின்னர் அவர்களை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் போலீசார் 3 பேரையும் கோவை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரில் பாபு, ஹெரன் பால் ஆகியோர் ஏற்கனவே அடிதடி வழக்கில் கைதானவர்கள்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply