- செய்திகள், மாவட்டச்செய்திகள்

பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி மையங்கள் அமைக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை…

சென்னை, ஏப்.17-
பொறியியல் படிப்புக்களுக்கு மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக, உதவி மையங்கள் அமைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மாணவர் சேர்க்கை
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்க முயன்ற அனைவருக்கும் ஏமாற்றமே பரிசாக கிடைத்தது. இதற்கான இணையதளம் முதல் நாள் முடங்கி விட்டது தான் இதற்குக் காரணம் ஆகும். இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் புகார் அளித்த போதிலும் முடங்கிய இணையதளத்தை சீரமைக்க கொண்டு வர எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
வழிகாட்டிகள்…
தொழில்நுட்பம் சார்ந்த புதிய முறையை அறிமுகப்படுத்தும் போது அதற்கேற்ற கட்டமைப்பு வசதிகளை செய்திருக்க வேண்டும். மாணவர் சேர்க்கை இணையதளத்தில் ஒரே நேரத்தில் எத்தனை பேர் ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தாலும் இணையதளம் முடங்காத வகையில் அதன் சர்வர் மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதை செய்யாதது அண்ணா பல்கலைக்கழகத்தின் தவறு தான். இந்த தவறை சரி செய்து மாணவர் சேர்க்கை இணையதளம் முடங்காமல் இருப்பதை அண்ணா பல்கலை. உறுதி செய்ய வேண்டும்.
அதுமட்டுமின்றி, ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பது அனைவருக்கும் சாத்தியமானது அல்ல. ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் இதற்காக அதிக அளவில் செலவழிக்க வேண்டியிருக்கும்.
உதவி மையம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பொதுச்சேவை மையங்களின் உதவியை இதற்காக மாணவர்கள் நாடலாம்  என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. ஆனால், பொதுசேவை மையங்களில் அரசின் பிற சேவைகளை பெற மக்கள் வருவர் என்பதால் அங்கு மாணவர்களுக்கு முழுமையான வழிகாட்டுதலும், உதவியும் கிடைக்காது.
எனவே, பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் எளிதாக விண்ணப்பிப்பதற்காக தமிழகம் முழுவதும் தேவையான இடங்களில் உதவி மையங்களை அமைக்க அண்ணா பல்கலைக்கழகம் முன்வர வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply