- செய்திகள், வணிகம்

பொருளாதார நிபுணர்களை சந்திக்கும் அருண் ஜெட்லி

புதுடெல்லி, பிப்.26:-
பட்ஜெட் தாக்கல் செய்ய 2 நாட்களே உள்ள நிலையில், பொருளாதார நிபுணர்களை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாளை (சனிக்கிழமை) சந்திக்க உள்ளார். இதனால் கடைசி நேரத்தில் பட்ஜெட்டில் மாற்றங்கள் வர வாய்ப்புள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
திங்கட்கிழமை
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 2016-17-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் திங்கட்கிழமை தாக்கல் ெசய்ய உள்ளார். கிட்டத்தட்ட பட்ஜெட் தயாரிப்பு பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், நாளை பொருளாதார நிபுணர்களுடன்  சந்திப்புக்கு அருண் ஜெட்லி ஏற்பாடு செய்து உள்ளார். இதற்கு முன்பு எந்தவொரு நிதி அமைச்சரும் பட்ஜெட் தாக்கல் செய்ய குறைந்த நாட்களே உள்ள  நிலையில் இது போன்ற கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது இல்லை. இந்த சந்திப்பு நடைபெறுவதை அதிகாரி ஒருவர் உறுதி  செய்தார்.
மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் இது குறித்து கூறியதாவது:-
பொருளாதார நிபுணர்கள், அருண் ஜெட்லி சந்திப்பு நாளை 90 நிமிடங்கள் நடைபெறும். இதில் மத்திய நிதி துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவும், நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் பங்கு கொள்கின்றனர். ஏனென்றால் கடைசி நேர மாற்றங்களை தவிர்த்து, மத்திய பட்ெஜட்டை நாளைக்குள் இறுதி செய்ய வேண்டும்.
பரிசீலனை
இந்த சந்திப்பின் போது, பொருளாதாரத்தை வெளிப்படுத்தும் முக்கிய குறியீடுகள், அரசின் நிதி நிலவரம், செலவினங்களை குறைப்பது, நிதி சார்ந்த திட்டங்கள் போன்றவை குறித்து  பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அரவிந்த் சுப்பிரமணியன்
தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியனும் நாளை ஊடகத்துறையினருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார். அப்போது அவர் பொருளாதார ஆய்வறிக்கையின் நுட்பமான விஷயங்கள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளார்.

Leave a Reply