- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

பொங்கல் திருநாளில் பயணிகளிடம் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்

சென்னை, ஜன.15-
பொங்கல் திருநாளை முன்னிட்டி சொந்த ஊர்களுக்கு மக்கள் அதிகளவு செல்வதால் கூட்டத்தை பயன்படுத்தி கட்டணக்கொள்ளையில் ஈடுபட்ட தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சாலை வரி செலுத்தாத 2 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தீவிர சோதனை
ஆம்னி பேருந்துளுக்கு அரசு சார்பில் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. இதனால் இஷ்டம் போல் கட்டணம் வசூலிக்கின்றனர். பண்டிகை காலங்களில் அரசு பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காத நிலையில், சாதாரண மக்கள் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் பணம் செலுத்தி பயணம் செய்யும் நிலையில் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு அதிகளவில் மக்க செல்கின்றனர். இவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் கோயம்பேடு, தாம்பரம், எழும்பூர், பெருங்களத்தூர், கிழக்கு கடற்கரை, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
2 பேருந்துகள் பறிமுதல்
நேற்று வரை நடந்த சோதனையில் 100 ஆம்னி பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பதிவு எண் கொண்ட ஒரு பேருந்தும், ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட ஒரு பேருந்தும் சாலை வரி செலுத்தாததால் பறிமுதல் செய்யப்பட்டதாக, வட்டார போக்குவரத்து அதிகாரி பழனிச்சாமி தெரிவித்தார்.
மேலும் கோயம்பேட்டில் இருந்து கோவைக்கு செல்ல இருந்த 2 ஆம்னி பேருந்துகளில் வழக்கமாக வசூலிக்கப்படும் ரூ.600-க்கு பதில் ரூ.900 வசூலிக்கப்பட்டது தெரியவந்தது. பயணிகளிடம் இதை உறுதி செய்த அதிகாரிகள் அந்த 2 ஆம்னி பேருந்து நிர்வாகிகளிடம் கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பி கொடுக்க உத்தரவிட்டனர். இதையடுத்து கூடுதலாக வசூலித்த ரூ.300 ரூபாய் 100 பயணிகளுக்கும் திருப்பி கொடுக்கப்பட்டது.

Leave a Reply