- செய்திகள்

பொங்கல் சிறப்பு பஸ்கள் 20 சதவீதம் குறைகிறது ஐ.டி. நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடல்

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களின் மொத்த எண்ணிக்கையில் இந்த ஆண்டு 20 சதவீத பஸ்களை குறைக்கலாம் என்று தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டது.

பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடந்த வருடம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 30 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அனைத்து பஸ்களிலும் இடம் பிடிக்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பாகவே முடிந்தது. பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.

இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக ஐ.டி. நிறுவனங்கள் இயங்கவில்லை. ஊழியர்கள் வீடுகளில் இருந்தே வேலை பார்க்கிறார்கள். பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்வோர் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.

சமீபத்தில் தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு சென்றோர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவாகவே இருந்தது. இதுபோல் பொங்கல் பண்டிகைக்கு ஊர் செல்வோர் எண்ணிக்கையும் கடந்த வருடத்தை விட குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வரும் பொங்கல் பண்டிகையையொட்டி எவ்வளவு சிறப்பு பஸ்களை இயக்கலாம் என்பது பற்றிய ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் போக்குவரத்து உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில், பயணிகள் எண்ணிக்கை, சிறப்பு பஸ்களின் தேவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை பொங்கல் பண்டிகைக்காக அரசு விரைவு பஸ்களில் வழக்கத்தைவிட குறைந்த பயணிகளே முன்பதிவு செய்து இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து ஆலோசனை கூட்டத்தில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களின் மொத்த எண்ணிக்கையில் இந்த ஆண்டு 20 சதவீத பஸ்களை குறைக்கலாம் என்று தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டது. இதுபற்றிய விவரங்களும் அனுப்பப்பட்டுள்ளது.

அமைச்சர் இதுகுறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசிய பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்து வரும் நாட்களில் பயணிகளின் தேவை கணக்கிடப்பட்டு இறுதிமுடிவு எடுக்கப்படும். அதிகாரப்பூர்வ அறிவிப்பை 2 நாட்களில் அமைச்சர் வெளியிடுவார் என்று போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply