- செய்திகள், விளையாட்டு

‘பைனலில்’ நுழைந்தது இங்கிலாந்து

புதுடெல்லி, மார்ச் 31:-

புதுடெல்லியில் பெரேஷோ கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த டி20 உலகக்கோப்பைப் போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது  மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.  முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது.

கப்தில், கேப்டன் வில்லியம்சன் ஜோடி நீண்டநேரம் நிலைக்கவில்லை. கப்தில் 15ரன்னில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு வில்லியம்சன், முன்ரோ ஜோடி சிறப்பாக பேட் செய்து 74 ரன்கள் சேர்த்தனர்.  வில்லியம்சன் 32 ரன்னில்(28பந்து, 3பவுண்டரி, ஒருசிக்சர்)வெளியேறினார். இந்த ஜோடி அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை நடுவரிசையில் களமிறங்கிய வீரர்கள் பயன்படுத்த தவறினர்.  முன்ரோ 46 ரன்னில்(32பந்து, 7பவுண்டரி, 1 சிக்சர்)பிளங்கெட் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.  இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

154 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 159 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய ஹேல்ஸ், ஜேசன் ராய் நியூசிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். குறிப்பாக முதல் ஒவரிலேயே ராய், 4 பவுண்டரி அடித்து நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தார். 26 பந்துகளில் அரைசதத்தை ராய் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்து சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்து இந்த ஜோடி பிரிந்தது. ஹேல்ஸ்(20) ரன்னில் வெளியேறினார்.

ராய் 78(44 பந்து, 11பவுண்டரி, 2சிக்சர்) ஆட்டமிழந்தார். அடுத்துவந்த மோர்கன் வந்த வேகத்தில் டக் அவுட்டாகினார். 4-வது விக்கெட்டுக்கு வந்த பட்லர் 32 ரன்களுடன்(17பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), ரூட்27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெறச் செய்தனர். நியூசிலாந்து தரப்பில் சோதி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன் விருது ஜேசன் ராய்க்கு வழங்கப்பட்டது.

டி20 உலகக்கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு 2-வது முறையாக இங்கிலாந்து தகுதிபெற்றது. இதற்கு முன் கடந்த 2010-ல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்து கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply