- செய்திகள்

பேஸ்புக், டுவிட்டரில் வரும் புகார்களுக்கு உடனடிதீர்வு இ.பி.எப்.ஓ. அமைப்பு உத்தரவு…

புதுடெல்லி, ஆக. 18:-

பி.எப். அமைப்பில்   குறைகள், ஆலோசகனைகள் தெரிவிக்க விரும்பினால், இனி அந்த அலுவலகத்துக்கு சந்தாதாரர்கள் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மாறாக பி.எப். அமைப்பு தங்களுக்கென உருவாக்கியுள்ள பிரத்யேக பேஸ்புக், டுவிட்டர் தளங்களில் பதிவு செய்தாலே உடனடியாக குறைகள் களையப்படும் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்காக பி.எப். அமைப்பு, தங்களின் பேஸ்புக், டுவிட்டர் தளங்களை வலிமைப்படுத்தி தனி அதிகாரிகளை நியமித்துள்ளது. இந்த தளத்தில் இருந்து குறிப்பிட்ட பிரிவு அலுவலகத்துக்கு மாற்றப்படும் புகார்கள், குறைகள் மீது 24 மணிநேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், மத்திய பி.எப். அமைப்பின் கூடுதல் ஆணையர் அனிதா சின்ஹா தீக்சித் இதற்கான சுற்றறிக்கையை அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், “ பி.எப். அமைப்பின் பேஸ்புக், டுவிட்டர் குழுவிடமிருந்து அனுப்பப்படும் சந்தாதாரர்களின் குறைகள், புகார்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி 24மணிநேரத்துக்குள் அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிக்கை அளிக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், சந்தாதாரர்களிடமிருந்து பெறப்படும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளும் அமல்படுத்த பரிந்துரைக்கப்படும். பி.எப். அமைப்பின் செயல்பாடுகள் தெளிவாகவும், கூடுதல் பொறுப்புனர்வுடன் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்ட பி.எப்.அமைப்பின் பேஸ்புக் தளத்தை இதுவரை 3400 பேரும், டுவிட்டர் தளத்தை 600 பேரும் லைக் செய்துள்ளனர். இதை சந்தாதாரர்களிடம் வேகமாக கொண்டு சேர்க்க இந்த நடவடிக்கை உதவும் என நம்புகிறது.

Leave a Reply