- அரசியல் செய்திகள்

பேருந்து நிலையங்களை போல துறைமுகங்கள் அமைப்பது ஏன்? மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி

பேருந்து நிலையங்களை போல் துறைமுகங்கள் அமைப்பது ஏன் என்று சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம் தொடர்பாக மாநிலங்களவையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மாநிலங்களைவையில் பெருந்துறைமுகங்கள் ஆணைய மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக எம்.பி. வில்சன் கூறுகையில், அதானியின் நலனை காப்பதற்காக மட்டுமே பெருந்துறைமுகங்கள் ஆணைய மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட அரசு சொத்துக்கள் எல்லாம் தனியாருக்கும், பெரு நிறுவனங்களுக்கும் விற்கப்படுகிறது. காட்டுப்பள்ளியில் துறைமுக விரிவாக்கத்திற்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.

தமிழகத்தில் பேருந்து நிலையங்களை போல 10 கிலோ மீட்டருக்கு ஒன்றாக துறைமுகங்கள் அமைக்கப்படுகின்றன. பேருந்து நிலையங்களை போல துறைமுகங்களை அமைப்பது ஏன்? எதற்காக தனியார் துறைமுகங்கள் மேம்படுத்தப்படுகின்றன? என கேள்வி எழுப்பினார்.

மேலும், மதுரவாயல் பறக்கும்சாலை திட்டத்தை ஏன் இன்னமும் முடிக்கவில்லை. சென்னை துறைமுகத்தை மேம்படுத்த ஏன் நடவடிக்கை இல்லை. சென்னை துறைமுகத்தை தனியாருக்கு விற்க முயற்சிக்கிறார்கள் என வில்சன் புகார் தெரிவித்தார். வில்சன் தொடர்ந்து பேச அவை துணை தலைவர் அனுமதி அளிக்கவில்லை. வில்சனை பேச அனுமதிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. திருச்சி சிவா குரலெழுப்பினார்.

முன்னதாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்படும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை என்று வில்சன் தெரிவித்திருக்கிறார். கொரோனா பெருந்தொற்றால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டருக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலையை சர்வதேச சந்தையே தீர்மானிப்பதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply