- செய்திகள்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

தே.மு.தி.க.- பா.ஜனதா கூட்டணிக்கு பேரம்?
‘‘ஒரு எம்.பி., சீட்டுன்னு கூட்டணியை பேசி முடிச்சி இருக்காங்களாம் வே…’’ என்று பிரஸ் கிளப்பில் விவாதத்தை தொடங்கி வைத்தார், மூத்த நிருபர் இசக்கி முத்தன்.
‘‘ எந்த கட்சியைப் பத்தி சொல்றீங்கோ சார்…?’’ என்று கேட்டார், ‘ஆல் இன் ஆல்’ நிருபர் அழகுமணி.
‘‘கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது சமத்துவ மக்கள் கட்சி… அந்த கட்சி இப்ப அ.தி.மு.க கூட்டணியில் இல்லையின்னு அதன் தலைவர் சரத்குமார் அதிகாரபூர்வமாக அறிவித்தாரு வே…
‘‘இதையடுத்து அக்கட்சியின் மகளிர் அணியின் தலைவர் ராதிகா சரத்குமார் தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாரு… அதில் எந்த உடன்பாடும் எட்டாத நிலையில் நேற்று முன்தினம் சரத்குமாரை பா.ஜ.க. மத்திய அமைச்சர் சந்தித்து பேசி இருக்காரு வே…
‘‘இந்த சந்திப்பின் பி்ன்னர் சமத்துவ மக்கள் கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவிச்சி இருக்காரு…  கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, தொகுதி உடன்பாடு ஒருபுறம் இருக்க தனது மனைவி ராதிகா சரத்குமாருக்கு எம்.பி. பதவின்னு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியினர் சொல்லிக்கிறாங்க வே…’’ என்று தனது தகவலை முடித்தார் இசக்கி முத்தன்.
‘‘5-ந் தேதி வரை கெடு கொடுத்து இருக்காங்களாம் கோ…’’ என்று அடுத்த தகவலை ஆரம்பித்தார், நிருபர் அழகுமணி.
‘‘யாரை பத்தி சொல்றீரு வே… ?’’ என்று ஆர்வத்துடன் கேட்டார், மூத்த நிருபர் இசக்கி முத்தன்.
‘‘சட்டசபை தேர்தலை ஒட்டி கூட்டணி அமைக்கிறதுல கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன… அ.தி.மு.க.வை தவிர மற்ற கட்சிகள் தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சிய எடுத்துக்கிட்டு வராங்க…
‘‘தி.மு.க., தே.மு.தி.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துகிட்டு வருதாம் ஆனா இன்னும் உடன்பாடு ஏற்பட்டதா தெரியல…  இதனிடையே தி.மு.க.வுக்கு தே.மு.தி.க. கூட்டணி தேவையில்லை, அரசியல் நேர்மையை சந்தேகிக்கும் வகையில் விஜயகாந்தின் செயல்பாடுகள் உள்ளதுன்னு கருணாநிதிக்கு நெருக்கமாக இருக்கும் சுபவீ கடுமையா தாக்கி இருக்காரு…
‘‘கருணாநிதிக்கு தெரியாமல் இந்த தாக்குதலை சுபவீ நடத்தி இருக்கா மாட்டாருன்னு அரசியல் நோக்கர்கள் பேசிக்கிறாங்க… இது ஒருபுறம் இருக்க கூட்டணி தொடர்பா முடிவு எடுக்க வரும் 5-ந் தேதி வரை தே.மு.தி.க.வுக்கு தி.மு.க. கெடு வைத்து இருக்காம்… ’’ என்று தனது தகவலை நிறைவு செய்தார் நிருபர் அழகுமணி.
‘‘நாங்கள் பிரியவே மாட்டோம்ன்னு சொல்கிற கூட்டணியில் 2 கட்சிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்திக்கிட்டு வராங்க பா…’’ என்று அடுத்த தகவலை ஆரம்பித்தார் போலீஸ் நிருபர் ‘டெரர்’ டேவிட்.
‘‘அது எந்த கட்சிங்கோ விளக்கமா சொல்லுங்கோ…?’’ என்று கேட்டார், நிருபர் அழகுமணி.
‘‘நான்கு கட்சிகளை கொண்ட மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள் நாங்கள் பிரிய மாட்டோம்ன்னு சொல்லிக்கிட்டு வராங்க… ஆனா அந்த கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகள் அ.தி.மு.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்திக்கிட்டு வராங்களாம் பா…
‘‘குறிப்பா எப்போதும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவா இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும்தான் அந்த கூட்டணி பேச்சுவார்த்தையை நட்த்திக்கிட்டு வராங்களாம் பா…
‘‘அதேவேளையில் கூட்டணி பேச்சுவார்த்தை கூட்டணியில் உள்ள மற்றத் தலைவர்களுக்கு தெரிஞ்சிட கூடாதுங்கிறதால தாங்கள் மக்கள் நலக் கூட்டணியில்தான் நீடிப்போம்ன்னு சொல்லிகிட்டும் வராங்க பா…’’ என்று தனது தகவலை முடித்தார் போலீஸ் நிருபர் ‘டெரர்’ டேவிட்.
‘‘பெரிய தொகை பேரத்துடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு இருக்காம் வே…’’ என்று அடுத்த தகவலுக்கு வந்தார் மூத்த நிருபர் இசக்கி முத்தன்.
‘‘அது எந்த கட்சி பா… ?’’ என்று ஆர்வத்துடன் கேட்டார், போலீஸ் நிருபர் ‘டெரர்’ டேவிட்.
‘‘தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்க பல்வேறு கட்சிகள் போட்டா போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது… தி.மு.க.வுடன்தான் கூட்டணி சேரும்ன்னு ஒரு தரப்பு அந்த கட்சில நம்பிக்கையோடு இருக்காம், இது ஒருபுறம் இருக்க மக்கள் நலக் கூட்டணிக்குத்தான் விஜயகாந்த் வருவாருன்னு அந்த கூட்டணி தலைவர்கள் உறுதியா சொல்லிக்கிட்டு வராங் வே…
‘‘இதனிடையே, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வைத்துக்கொண்ட உறவை புதுப்பிக்க பா.ஜ.க. திட்டமிட்டு அதுக்கான பணியில் களம் இறங்கி இருக்கு… அதுக்காக மத்திய அமைச்சர் ஜவ்டேக்கர் நேத்து சென்னை வந்து கூட்டணி தலைவர்களை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தினாரு வே…
‘‘தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் மத்திய அமைச்சர் ஜவ்டேக்கர் சந்தித்து பேசினாரு… சந்திப்பு நல்லவிதமாக அமைந்துள்ளது, அடுத்தவாரம் மீண்டும் சந்தித்து பேசுவேன்னு ஜவ்டேக்கர் தெரிவித்தார் வே…
‘‘ஆனா விஜயகாந்தை அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் இரவே மத்திய அமைச்சர் ஜவடேக்கர் சந்தித்து பேசினாராம்… அப்ப விஜயகாந்த் மனைவிக்கோ (அல்லது) மைத்துனர் சுதீசுக்கோ எம்.பி. பதவியும், அமைச்சர் பதவியும் வழங்குவதாகவும், தேர்தல் செலவுக்காக ரூ.700 கோடி பேரம் பேசப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது வே…
‘‘ ஊடகங்களுக்காகவே நேற்று மாலை சந்திப்பது போல ஒரு சந்திப்பு நிகழ்சியை இரண்டு கட்சிகளும் சேர்ந்து நடத்தி இருக்குன்னு சொல்லிக்கிறாங்க… அதேநேரத்தில் மத்திய அமைச்சர் மூலம் ஏற்பட்டுள்ள கூட்டணி உடன்பாடு அறிவிப்பு தேர்தல் தேதி வெளிவந்த பின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்ன்னு பா.ஜ.க.வினர் உற்சாகமா தெரிவிக்கிறாங் வே…
‘‘விஜயகாந்துடன் பா.ஜ.க. ரகசிய உடன்பாடு செஞ்சிட்டாங்கன்னு  தகவல் தெரிஞ்சிக்கிட்டுதான் மத்திய அமைச்சர் ஜவடேக்கரை பா.ம.க. தலைவர்கள் சந்திக்கவில்லைன்னும் ஒரு தகவல் உலாவுகிறது வே… ’’ என்று பிரஸ் கிளப் விவாதத்தை முடித்து வைத்தார், மூத்த நிருபர் இசக்கி முத்தன்.

Leave a Reply