- உலகச்செய்திகள், செய்திகள்

பெல்ஜியம் மெட்ரோ ரயில் நிலையம் மீண்டும் திறப்பு ஐ,எஸ்். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய

 

பிரஸ்சல்ஸ், ஏப். 26:- பெல்ஜியத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த மாதம் தாக்குதல் நடத்திய மெட்ரோ ரயில் நிலையம் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

32 பேர் உயிரிழப்பு

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் உள்ள விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றின் மீது கடந்த மாதம் 22-ந்தேதி, ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், மொத்தம் 32 பேர் உயிரிழந்தனர். இவர்களில் சென்னையை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனரான ராகவேந்திரன் கணேசனும் ஒருவர். பெங்களுரூவில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், பிரஸ்சல்ஸ் மெட்ரோ ரயில் தாக்குதலில் உயிரிழந்தார். இவ்விரு சம்பவங்களில் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது. அதே நேரத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகளும் உயிரிழந்தார்கள். இதையடுத்து, தாக்குதல் நடத்தப்பட்ட இரண்டு இடங்களும் மூடப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

விமான நிலையம்

சுமார் 1 வார காலத்துக்கு பின்னர், பலத்த பாதுகாப்புடன் பிரஸ்சல்ஸ் விமான நிலையம் திறக்கப்பட்டது. இருப்பினும், பாதுகாப்பை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் நிலையம் திறக்கப்படவில்லை. இந்நிலையில், சுமார் 1 மாத காலத்துக்கு பின்னர், நேற்று முன்தினம் மெட்ரோ ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. முன்னதாக, இந்த தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தார், கடந்த சனிக்கிழமையன்று மெட்ரோ நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கு அவர்கள் உயிரிழந்த தங்களது குடும்பத்தினருக்கு அஞ்சலி செய்தனர்.

பயணிகள் உற்சாகம்

மெட்ரோ நிலையம் திறக்கப்பட்ட பின்னர், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலத்த சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மெட்ரோ ரயில் திறக்கப்பட்டது குறித்து, பயணிகள் கூறும்போது, நாங்கள் தீவிரவாதத்தை வெற்றி கொள்வோம். தாக்குதலுக்கு பின்னர் எங்களுக்கு சிறிதளவு பயம் இருந்தது. இங்கு நடந்தது போன்ற சம்பவம் உலகின் வேறு எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், மெட்ரோ ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என்பது, தீவிரவாதத்துக்கு எதிரான எங்களது உறுதியை அடையாளப்படுத்துகிறது என்றனர்.

Leave a Reply