- செய்திகள், விளையாட்டு

பெங்களூரு-புனே அணிகள் இன்று மோதல்

 

புனே, ஏப்.22:-
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இன்று மோதுகின்றன.

புனே, பெங்களூரு இரண்டு அணிகளும் தலா 3 போட்டிகளில் விளையாடி இரண்டில் தோல்வி பெற்று ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் தலா இரண்டு புள்ளிகள் பெற்று சம நிலையில்தான் உள்ளன. ஆனால் ரன் விகிதத்தில் புனே அணி 5-வது இடத்திலும் பெங்களூரு அணி 6-வது இடத்திலும் உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான புனே அணி முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியைத் தோற்கடித்தது. ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளிலும் புதிதாக களம் இறங்கியுள்ள மற்றொரு அணியான குஜராத் லயன்ஸ் அணியிடமும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடமும் தோல்வி கண்டுள்ளது. குஜராத் லயன்ஸ் அணி 3-ல் விளையாடி மூன்றிலும் வெற்றி கண்டுள்ளது. ஆக அந்த அணியிடம் தோற்றது பெரிய விஷயமில்லை. அதே சமயம் கிங்ஸ் லெவன் 4-ல் விளையாடி புனே அணியை மட்டும்தான் வென்றுள்ளது. பெங்களூரு அணி, சன் ரைசர்ஸ் அணியை வென்றுள்ளது. அதே சமயம் டெல்லி, மும்பை அணிகளிடம் தோல்வி கண்டுள்ளது.
புனே அணியில் ரஹானே, கெவின் பீட்டர்சன், ஸ்மித், தோனி ஆகிய திறமையான வீரர்கள் இடம் பெற்றிருந்தாலும் டு பிளெசிஸ் தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவுக்கு ரன்களை அடிக்கவில்லை.

அந்த அணியால் அதிக அளவில் வெற்றி பெற முடியாமல் போனதற்கு பேட்டிங் மற்றுமே காரணம் என்று கூறிவிட முடியாது.

அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசாததும் அணியின் கேப்டன் தோனிக்கு கவலை தரும் விஷயம்தான்.

வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா நன்றாக பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரால் அதை செய்து காட்டமுடியவில்லை. அதே போல் ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழற்பந்து தங்களது அணிக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்த்த புனே அணியின் கேப்டன் தோனியின் நம்பிக்கையை அவரது பந்து வீச்சு தகர்த்துவிட்டது. கடந்த சில மாதங்களாகவே அஸ்வினின் பந்து வீச்சு ஒரு தின, 20 ஓவர் போட்டிகளில் அவ்வளவு சிறப்பாக இல்லை என்றே கூறலாம். அதே சமயம் தமிழகத்தின் மற்றொரு வீரரான முருகன் அஸ்வின் முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் களம் இறங்கியுள்ள நிலையில் நன்றாகவே பந்து வீசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புனே அணியைப் போலவே பெங்களூரு அணியின் பேட்டிங்கும் அவ்வளவு நன்றாக இல்லை என்றே கூறலாம். பெங்களூரு அணியின் விராட் கோலி, டிவில்லியர்ஸ், கெயில், ஷேன் வாட்சன் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தும் அந்த அணியாலும் 3 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியைத் தான் பெற முடிந்துள்ளது.

ஆக இரு அணிகளுமே சம பலத்துடன் திகழ்வதால் இரு அணிகளுக்கும் இடையிலான வெற்றி வாய்ப்பு இன்றைய ஆட்டத் திறனை பொருத்தே அமையும்.

Leave a Reply