BREAKING NEWS

புறக்கணிக்கப்படும் தமிழ்ப் பல்கலைக்கழகம்..!

குளிர்கால கூட்டத்தொடராக இருந்தாலும், விவாதங்கள் என்னவோ அனல் பறக்கத்தான் செய்கின்றன. இரண்டாவது முறையாக மத்திய அரசாக பொறுப்பேற்றிருக்கக்கூடிய பா.ஜ.க தலைமையிலான அரசு, பல மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து தாக்கல் செய்து வருகிறது. அதில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீது பற்றிக் கொண்டது தீ. அடுத்த மசோதாவாக மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் மசோதா 2019-ஐ மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவின்படி நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக தற்போது இருக்கும் 4 கல்வி நிலையங்களில் 3-ஐ மத்திய பல்கலைக்கழகங்களாக மாற்றி பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வழிவகுக்கப்படுகிறது. இந்த மசோதாவை முன்மொழிகிற பொழுது அமைச்சர் முன்வைத்த கருத்து கடும் அதிர்ச்சியை உருவாக்கியது, இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக சமஸ்கிருதத்தையும் உலக அறிவினுடைய ஆதாரமாக சமஸ்கிருதத்தையும் அவர் முன்வைத்தார்.

மேலும், மற்றொரு அமைச்சர், சமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை மற்றும், கொழுப்பு நோய்கள் கட்டுக்குள் இருக்கும் என நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். சமஸ்கிருதம் உங்களுக்கு உயர்ந்த மொழியாக இருக்கலாம். ஆனால், அதை விளம்பரப்படுத்துவதற்கான தளம் நாடாளுமன்றமா என்கிற கேள்வியினை பல மொழி ஆர்வலர்கள் எழுப்புகின்றனர்.

மத்திய அரசின் கீழ் நான்கு நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள் உள்ளன. இந்த நான்கு நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களையும் மத்திய பல்கலைக் கழகங்களாக மாற்றுவோம் என்று கடந்த காலங்களில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது மூன்று நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களை மட்டும் மத்தியப் பல்கலைக் கழகங்களாக மாற்ற இந்த மசோதா வழிவகுக்கிறது. மீதமிருக்கின்ற ‘காந்திகிராம் கிராமிய’ பல்கலைக்கழகத்தினை மத்திய அரசு புறக்கணிக்கின்றது. இது குறித்து நாடாளுமன்ற விவாதத்தில் தமிழகப் பிரதிநிதியும், சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளருமான சு.வெங்கேடேசன் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

“சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் தாய் மொழி என்பதற்கு என்ன அறிவியல் ஆதாரம் இருக்கிறது’’ என்றும், ‘‘சமஸ்கிருதத்தினுடைய முதல் கல்வெட்டு ராஜஸ்தானத்தின் அத்திப்பாராவிலும், குஜராத்தில் இருக்கிற  ஜுனாகத்திலும் கிடைத்து இருக்கிறது. அந்த கல்வெட்டின் காலம் கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு’’ என்றும், ‘‘ஆனால், தமிழ் மொழியில் கிடைத்திருக்கிற முதல் கல்வெட்டு மதுரையில் மாங்குளத்திலும்  தேனியில் புள்ளிமான்கோம்பையிலும் கிடைத்திருக்கிறது. இந்தக் கல்வெட்டின் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு’’ என்றும் ஆதாரத்தை முன்வைத்திருக்கிறார். மேலும், ‘‘சமஸ்கிருதத்தில் இவ்வளவு இலக்கியங்கள் இருக்கின்றது என்றால் ஒரு பெண்ணாவது சமஸ்கிருத எழுத்தாளராக உதயமாகி இருக்கிறாரா? ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தமிழ் இலக்கியத்தில் ஒருவரல்ல இருவரல்ல, நாற்பதுக்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே உலக மொழி தமிழ்.’’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இதில் அவர் குறிப்பிட்டிருக்கக்கூடிய முக்கிய அம்சம், “சமஸ்கிருதம் எக்காலத்திலும் மக்களின் புழங்கு மொழியாக இருந்ததில்லை” என்பதுதான்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால், பட்டியலிடப்படாத பல மொழிகள் இந்தியாவில் புழங்குகின்றன. உண்மையில் இந்தியா இவ்வாறான பல மொழி, இனத்திற்கான பாதுகாப்பு அரணாக உள்ள காரணத்தினால்தான், தனித்தன்மையுடன் உலக நாடுகளில் மத்தியில் மிளிர்கிறது. ஆனால், தற்போதைய சூழலில் இந்தி மொழியானது பல மொழிகளுக்குள் ஊடுறுவி ஆக்கிரமித்துக்கொள்வது சர்வசாதாரணமாகியுள்ளது. உதாரணமாக நாம் மகதி, போஜ்புரி மொழியின் நிலையை கணக்கில் கொள்வோம். நாடாளுமன்றத்தில் பா.ஜ.க உறுப்பினர் ஒருவர் தன்னுடைய தாய்மொழியான போஜ்புரி மொழியில் பதவியேற்க முன்வந்தபோது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏனெனில், அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் போஜ்புரி மொழி இடம் பெறவில்லை என்று காரணம் கூறப்பட்டது. கடைசியில் அவர் வேறு வழியின்றி இந்தி மொழியில் பதவியேற்றார். ஆனால், உண்மையில் அவதி, போஜ்புரி, பிரஜ், பாசா, ஹரியான்வி, மகதி, மைதிலி,  பஹாரி, சாத்ரி என வட மாநிலங்களில் புழக்கத்தில் இருந்த மொழிகள் இந்தியை விட பல நூற்றாண்டுகள் பழைமையானவை. இலக்கிய வளம் கொண்டவை. ஆனால், இந்த மொழிகளையெல்லாம் இந்தி மொழி தின்று செரித்துவிட்டது.

“கி.மு 6-ம் நூற்றாண்டில் உருவான அவைதீக மதங்களான சமணமும் பௌத்தமும் பாலி, பிராகிருதம் முதலான மக்கள் மொழிகளையே தங்களின் ஆக்கங்களுக்குப் பயன்படுத்தின. எனினும் ஒரு அரசவை மொழியாகவும் தத்துவ விவாதங்களுக்கான மொழியாகவும் சமஸ்கிருதம் தொடர்ந்த போது கி.பி 3, 4 ம் நூற்றாண்டுகளில் இந்த மதங்களின் அளவை நூல்களும் சமஸ்கிருதத்தில் எழுதப்படும் நிலை உருவாகியது. எனினும் அடுத்து உருவான அரசியல் பண்பாடு பெரிய அளவில் மக்கள் தொடர்பைப் பேண வேண்டியதாக இருந்தது. கல்வெட்டுக்கள் முதலியன மக்கள் மொழிகளில் (vernacular languages) வெளியிடப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தர்க்க, அளவை விவாதங்களும்கூட உள்ளூர் மொழிகளில் செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்குரிய வகையில் வீரசோழியம் முதலிய புதிய இலக்கண நூல்களும் உருவாயின. இதுபோன்ற செயல்பாடுகளுக்கான ஒரு trans local / trans cultural மொழி என்கிற நிலையை சமஸ்கிருதம் இழந்தது. உள்ளூர் மொழிகள் ஓங்கும் நிலை ஏற்பட்டது. பாரதம், இராமாயணம் முதலியனவும் இனி உள்ளூர் மொழிகளில்தான் எழுதப்பட வேண்டும் என்கிற நிலை உருவானது. இலக்கிய உருவாக்கம் என்பதும் இனி அரசவை மற்றும் புலமையாளர்களின் குழுமம் என்பவற்றைத் தாண்டிச் செல்லும் நிலை இந்தியாவெங்கும் உருவானது.” என்று எழுத்தளர் அ.மார்க்ஸ் குறிப்பிடுகிறார். மேலும், ‘‘வரி வடிவமே இல்லாத ஒரு மொழியை ஏன் உயர்த்திப்பிடிக்க முயல்கிறீர்கள்’’ என்று, நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் கேள்ளியெழுப்பியுள்ளார். ஆக, முற்றிலும் வழக்கொழிந்த மொழியாகவும், வரி வடிவமே இல்லாதிருக்கக்கூடிய மொழியாகவும் சமஸ்கிருதம் இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. இவ்வாறான மொழியினை இந்தியாவின் ஒட்டு மொத்த அடையாளமாக முன்னிறுத்துவதற்கு ஏன் மத்திய அரசு முயல்கிறது என்பதை சிந்திக்க வேண்டிய காலக்கட்டத்தில் நாம் நின்றுகொண்டிருக்கின்றோம்’’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

– கார்த்தி.ரா
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *