- செய்திகள்

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தை செப்டம்பர் 9-ந் தேதி வரை நடத்த முடிவு சபாநாயகர் வைத்திலிங்கம் தகவல்…

புதுச்சேரி,ஆக 25-
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தை செப்டம்பர் 9-ந் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.
பட்ஜெட் கூட்டம்
புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று கவர்னர் கிரண்பேடி உரையாற்றினார். அவர் தனது உரையில், தூய்மையான இந்தியா திட்டத்தின் மீது அரசு கவனம் செலுத்தவேண்டும்,  குப்பை சேகரித்தல், ஏரி, வாய்க்கால், கழிவுநீர் ஆகியவற்றை பணி முறையில் சுத்தம் செய்து மாநிலத்தின் மீது நல்லெண்ணத்தை உருவாக்க வேண்டும், குற்றமில்லாத யூனியன் பிரதேசமாக உருவாக்க சட்டம்-ஒழுங்கின் மீது கவனம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. கவர்னர் உரையாற்றி முடிந்ததும் நேற்றைய கூட்டம் நிறைவடைந்தது.
அலுவல ஆய்வுக்குழு கூட்டம்
இதையடுத்து கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்  சபாநாயகர் வைத்திலிங்கம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சபாநாயகர் கூறியதாவது:-
2 நாள் விவாதம்
பட்ஜெட் கூட்டத்தொடரை செப்டம்பர் 9-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க வசதியாக 3 நாட்கள் மதியமும் கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. 2 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறுகிறது.
29-ந்தேதி பட்ஜெட்
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் உரையாற்ற உள்ளனர். 29-ம் தேதி முதலமைச்சர் நாராயணசாமி முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.
மேற்கண்ட தகவலை சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

Leave a Reply