- செய்திகள்

புதுச்சேரிக்கு ரூ.500 கோடி மத்திய அரசு நிதி முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி…

புதுச்சேரி,ஆக 19-
புதுச்சேரி மாநிலத்தில் 7-வது ஊதிய குழுவை அமல் படுத்த மத்திய அரசிடம் ரூ.500 கோடி கேட்டு இருப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
ஆலோசனை கூட்டம்
புதுச்சேரி நிதித்துறை செயல்பாடு தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நேற்று சட்டசபையில் உள்ள கமிட்டி அறையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை செயலர் மனோஜ் பரிஜா, நிதித்துறை செயலர் கந்தவேலு உட்பட நிதித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பேட்டி
இக்கூட்டத்துக்கு பிறகு முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
வருவாயை பெருக்க
புதுச்சேரி நிதித்துறை செயல்பாடு தொடர்பாக முழுமையாக விவாதித்தோம். புதுச்சேரியில் வரிவருவாயை பெருக்க வழிமுறைகளை ஆராய்ந்தோம்.
குறிப்பாக மத்திய மாநில அரசுகள் இணைந்து  செயல்படுத்தும் திட்டங்களின் தற்போதைய நிலையை ஆராய்ந்தோம். கிடப்பில் உள்ள மத்திய அரசு திட்டங்களுக்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
நிலுவை தொகையை வசூலிக்க
பலதுறைகளில் கட்டாமல் உள்ள வரியை வசூலிக்க முடிவு எடுத்துள்ளோம். குறிப்பாக பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் ரூ.100 கோடி வரை வரி கட்டாமல் இருப்பது தொடர்பான வழக்கில் விரைந்து தீர்வு காண திட்டமிட்டுள்ளோம்.
தொழிற்சாலைகள் மின்கட்டண நிலுவைத் தொகையாக வைத்துள்ள ரூ.30 கோடியை வசூல் செய்ய முடிவு செய்துள்ளோம்.
ரூ.500 கோடி
விரைவில் பட்ஜெட்கூட்டத்தொடர் தொடங்கும். அதில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம். விரைவில் மத்திய அரசின் ஒப்புதல் வந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம்.
7-வது ஊதியக்குழுவை அமல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளது. இதை அமல்படுத்த புதுச்சேரிக்கான முழு தொகையான ரூ. 500 கோடியை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.
மேற்கண்டவாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Leave a Reply