- செய்திகள்

புதிய கல்விக்கொள்கை: சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டுவரவேண்டும் ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு…

சென்னை, ஆக.9 –
புதிய கல்வி கொள்கையை எதிர்த்து, சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று, சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கி.வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம்
புதிய கல்விக்கொள்கை திட்டத்தின் மூலம் மத்திய அரசு சமஸ்கிருதத்தைத் திணிக்க முயற்சிப்பதாக கூறி, அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், புதிய கல்விக்கொள்கையை ரத்து செய்யக்கோரியும், புதிய கல்விக்கொள்கையைக் கண்டித்தும் திராவிடர் கழகம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமைதாங்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க.பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
பாதிப்புகள்
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அக்கொள்கை ஏற்கபட்டால், 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படும். 14 வயது வரை இலவச கல்வி என்ற சட்டத்தின் நோக்கம் பறிக்கப்படும். சத்துணவு திட்டம் நீக்கப்படும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமை பறிக்கப்படும், ஆசிரியர்கள் நியமன அதிகாரத்தை மத்திய அரசு அபகரிக்கும்.
எதிர்ப்பது ஏன்?

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் அரசியல் சட்டப்படி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடைபிடிக்கப்படும் உரிமைகள் பறிக்கப்படும். இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். இதனால்தான் இந்த திட்டத்தை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம். தமிழ்மொழியை பின்னுக்கு தள்ளி சமஸ்கிருதத்திற்கு பாராட்டு பாட மத்திய அரசு முயற்சிக்கிறது. நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றால்தான் உயர்கல்வி பெற முடியும் என்ற நிலை உருவாகும். புதிய கல்விக் கொள்கை மூலம் குலக்கல்வியை புகுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. இதனால்தான் நாம் அனைவரும் ஒன்று திரண்டு போராடிக் கொண்டிருக்கிறோம்.

கவனஈர்ப்பு

தற்போது சட்டமன்றம் நடக்கிறது. ஏற்கனவே சட்டமன்றத்தில் புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க கவனஈர்ப்பு தீர்மானம் என்ற அடிப்படையில் தி.மு.க. சார்பில் விண்ணப்பித்துள்ளோம். ஆனால், கடிதம் கொடுத்து ஒரு வார காலமாகியும் இதுவரை இந்த அரசு அந்த தீர்மானத்தை எடுக்க முன்வரவில்லை.
தனித்தீர்மானம்
சட்டமன்றத்தில் எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து இந்த புதிய கொள்கையை கண்டிக்க தயாராக இருக்கிறது. எனவே இந்த ஆளுங்கட்சி இக்கொள்கையை கண்டித்து தனி தீர்மானம் கொண்டுவர வேண்டும். அவர்களுக்கு ஒருவேளை மனமில்லை என்றால் எதிர்க்கட்சியாக இருக்கும் நாங்கள் தி.மு.க.சார்பில் தனி தீர்மானம் எடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது. எனவே ஆளும் அ.தி.மு.க.வினர் தனி தீர்மானம் எடுக்கிறார்களா? என்று பார்ப்போம். இல்லை என்றால் மீண்டும் 1938, 1939, 1965-ம்- ஆண்டுகளில் நடந்ததைப் போல் போராட்டம் நடக்க கூடும் என்பதை மத்திய அரசுக்கு எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ.,சென்னை மாவட்ட தி.மு.க.செயலாளர்கள் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ.,மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.கே.சேகர்பாபு, கு.க.செல்வம் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
படம் உண்டு

Leave a Reply