- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

பீப் பாடல் தொடர்பாக தொடர்ச்சியாக வழக்குப்பதிவு செய்வதை எதிர்த்து நடிகர் சிம்பு மனு

சென்னை, ஜன.8:-
பீப்பாடல் தொடர்பாக தொடர்ச்சியாக வழக்குப்பதிவு செய்வதை எதிர்த்து நடிகர் சிம்பு தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பீப்பாடல்

நடிகர் சிம்பு பாடியதாக பீப்பாடல் ஒன்று இணையதளத்தில் வெளியானது. இந்த பாடல் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் இருப்பதாக பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. பல போலீஸ் நிலையங்களில் புகார்கள் கூறியதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இந்த சூழ்நிலையில், சிம்பு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
ஒரு குற்றசாட்டுக்காக பல போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் பதிவு செய்ய கூடாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், பீப் பாடல் தொடர்பாக கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், இதே சம்பவத்துக்காக பல காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.

வழக்குப்பதிவு

ஆகவே, ஒரே சம்பவத்திற்காக என் மீது வழக்குப்பதிவு செய்யகூடாது என்று காவல் நிலையங்களுக்கு சுற்றரிக்கை அனுப்பும்படி, சென்னை போலீஸ் கமிஷனருக்கும், டி.ஜி.பி.க்கும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. சுற்றரிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி.க்கு இந்த நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

மனு தள்ளுபடி

வேண்டும் என்றால் வழக்கை ரத்து செய்ய கோரி மனுதாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார். நீதிபதியின் கருத்தை அறிந்த சிம்பு தரப்பு வக்கீல் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். வாபஸ் பெறுவதை ஏற்று சிம்பு தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Leave a Reply