- செய்திகள், மாநிலச்செய்திகள்

பீகாரில் முழு மதுவிலக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு

 

பாட்னா, ஏப்.7-

பீகார் மாநிலத்தில் முழு மது விலக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

தேர்தல் வாக்குறுதி

பீகார் மாநிலத்தில், கடந்த சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ‘மகா கூட்டணி’ அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

தேர்தலின்போது, தங்கள் கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏப்ரல் 1-ந்தேதி முதல் பீகார் மாநிலத்தில் படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என்று, நிதிஷ்குமார் வாக்குறுதி அளித்து இருந்தார்.

கள், சாராயக்கடைகள்

அதன்படி கடந்த 1-ந்தேதியில் இருந்து கிராமப்புறங்களில் கள், சாராயம் மற்றும் பிராந்தி-விஸ்கி (இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மது வகைகள்) போன்ற மதுக்கடைகள் மூடப்பட்டன.

நகரப்புறங்களிலும், கள் மற்றும் சாராயக்கடைகள் மூடப்பட்டு, பிராந்தி, விஸ்கி போன்ற மதுக்கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

பூரண மதுவிலக்கு

இந்த முடிவுக்கு மாநிலம் தழுவிய வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக பெண்கள் பெரிதும் வரவேற்று அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் நகரங்களிலும் மதுக்கடைகளை மூடி மாநிலம் முழுவதும் பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட்டது.

பொது நல வழக்கு

பீகார் மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதை எதிரத்து ஏ.என்.சிங் என்ற முன்னாள் ராணுவ வீரர், பாட்னா உயர் நீதிமன்றத்தில் நேற்று பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இது குறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘மாநில அரசின் முழு மதுவிலக்கு முடிவு, எதை சாப்பிட வேண்டும், எதை அருந்த வேண்டும் என்ற குடிமக்களின் உரிமையை மீறுவதாக உள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் தேதி குறித்து இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

Leave a Reply