- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள், மாவட்டச்செய்திகள்

பி.சுசீலாவுக்கு ஜெயலலிதா வாழ்த்து 17,695 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை

சென்னை, மார்ச் 31-
திரைப்படத் துறையில் 17,695 பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ள பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ‘பல திரைப்படங்கள் உங்களின் இனிய குரல் வளத்தினாலேயே பெருமை அடைந்தன’ என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா புகழாரம் சூட்டியுள்ளார்.
வாழ்த்து கடிதம்
முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நீங்கள் மிக அதிகமான  பாடல்களைப் பாடியதற்கென கின்னஸ் சாதனை படைத்துள்ளீர்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.   இந்த சாதனைக்கு எனது பாராட்டுதல்களை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நீங்கள் சிறிய வயதிலிருந்தே இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டு, உங்களது கடின உழைப்பால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளீர்கள்.
பெருமை

திரைப் படங்களில் எனக்கு மட்டுமின்றி எனது தாயாருக்கும் தாங்கள் பின்னணி பாடல்களைப் பாடியுள்ளீர்கள் என்பதை இந்த நேரத்தில் பெருமையுடன் நான் நினைவு கூருகிறேன்.  பல திரைப்படங்கள் உங்களின் இனிய குரல் வளத்தினாலேயே பெருமை அடைந்தன என்றால் அது மிகையில்லை.
17,695 திரைப்பட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனையாளராக புகழ் பெற்றுள்ள நீங்கள் இன்னும் பல ஆயிரம் பாடல்களைப் பாடி தமிழ் இசைக்கும், இசைத் துறைக்கும் சேவையாற்ற வேண்டுமென நான் இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு வாழ்த்துக் கடிதத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply