- செய்திகள், விளையாட்டு

பிறந்த நாள் கொண்டாடிய சச்சின் டெண்டுல்கர் சிறுவர்களுக்கு கிரிக்கெட் பயிற்றுவித்து

மும்பை, ஏப்.25:-

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் மாஸ்டர் பேட்ஸ்மேனுமான சச்சின் டெண்டுல்கர் சிறுவர்களுக்கு கிரிக்கெட் கற்றுக் கொடுத்து தனது 43-வது பிறந்தநாளை நேற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.

டெண்டுல்கருக்கு நேற்றோடு 43 வயது நிரம்பியது. இதையெட்டி `மேக்-எ-விஷ்' என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்சியில் பங்கேற்ற டெண்டுல்கர், எம்ஐஜி கிளப்பில் சிறுவர்களுக்கு பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகியவற்றைப் பயிற்றுவித்து பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தார்.

டெண்டுல்கர் 2013-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெண்டுல்கரின் பிறந்த நாளையொட்டி கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

மீண்டும் மீண்டும் இந்த நாள் திரும்ப வாழ்த்துகள், சாம்பியன் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த ஆண்டு சிறப்பாக அமைய வேண்டும் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளதோடு இன்னொரு சச்சின் டெண்டுல்கர் இனி பிறக்க முடியாது என்று பாராட்டியுள்ளார்.

மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும் தொடர வாழ்த்துவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் அனுராக் தாகுர் வாழ்த்தியுள்ளார்.

கிரிக்கெட்டிலும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலும் சிறப்பாக செயலாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் என்று ஐபிஎல் தலைவர் ராஜில் சுக்லா வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.

ஆடுகளத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தனக்கு தெரிந்த மிகச் சிறந்தவர்களில் டெண்டுல்கரும் ஒருவர் என்று பாராட்டியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா, ஆரோக்கியத்தோடு வாழ வாழ்த்தியுள்ளதோடு வெற்றிகளும் குவியட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் ஆகியோரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் பிரபலங்கள் மட்டும் அல்ல, பிரபல குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங், இந்திய கால்பந்து சம்மேளத் தலைவர் பிரபுல் படேல் ஆகியோரும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

2014-ம் டெண்டுல்கர் பாரத ரத்னா விருது பெற்றுள்ளார். விளையாட்டுத் துறையில் இந்த விருதைப் பெற்றுள்ளவர் இவர் ஒருவரே. அத்தோடு மிக இளம் வயதில் இந்த விருதைப் பெற்றுள்ளவரும் இவரே ஆவார்.

Leave a Reply