- செய்திகள்

பிரஸ் கிளப்

காங்கிரஸ் கூட்டணி… தி.மு.க.மறுபரிசீலனை?

‘‘நிதானமாக செயல்பட்டு வராங்க வே…’’ என்று பிரஸ் கிளப்பில் விவாதத்தை தொடங்கி வைத்தார், மூத்த நிருபர் இசக்கி முத்தன்.
‘‘யாரை பத்தி சொல்றீங்கோ சார்…?’’ என்று கேட்டார், ‘ஆல் இன் ஆல்’ நிருபர் அழகுமணி.
‘‘சட்டசபை தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மத்தியில் இன்னும் கூட்டணி அமைக்கிறதில் தொடர்ந்து இழுபறியே நீடிக்குது… தேர்தலுக்கு இன்னும் 70 நாட்கள் இருக்குன்னு அரசியல் கட்சித் தலைவர்கள் சாவகாசமாக செயல்பட்டு வராங்க வே…
‘‘எல்லா தேர்தலிலும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, தேர்தல் அறிக்கை வெளியீடுன்னு முதலில் இருக்கும் அ.தி.மு.க. இந்த தேர்தலில் நிதானமாக செயல்பட்டு வருதாம்… நேத்துதான் நேர்காணலை தொடங்கி இருக்காங்க, இன்னும் ஒருவாரத்துக்கு பிறகுதான் தேர்தல் களம் சூடுபிடிக்கும்ன்னு தெரிகிறது வே…’’ என்று தனது தகவலை முடித்தார் இசக்கி முத்தன்.
‘‘சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவில் உறுதியா இருக்காங் கோ…’’ என்று அடுத்த தகவலை ஆரம்பித்தார், நிருபர் அழகுமணி.
‘‘எந்த கட்சியை பத்தி சொல்றீரு வே… ?’’ என்று ஆர்வத்துடன் கேட்டார், மூத்த நிருபர் இசக்கி முத்தன்.
‘‘கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து தர்மபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் ஜெயிச்சாரு… ஆனா வரும் சட்டசபை தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டின்னு முதல்வர் வேட்பாளரை அறிவிச்சு களத்தில் இறங்கி தீவிரமா வேலை செஞ்சிக்கிட்டு வராங்க…
‘‘இதனிடையே, நாடாளுமன்ற தேர்தல் போல சட்டமன்ற தேர்தலிலும் அதே கட்சிகளோடு கூட்டணி அமைக்க பா.ஜ.க. தீவிர முயற்சியில இறங்கி இருக்கு…  அதேநேரத்தில் நாங்கள் யாருடனும் கூட்டணி சேரமாட்டோம், எங்கள் தலைமையை ஏற்று யாரு கூட்டணிக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என பா.ம.க. சொல்லிட்டாங்க…
‘‘நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரியில் அன்புமணி எப்படி அனைத்து தரப்பு மக்களின் வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றாரோ…  அதே பார்முலாவை இந்த சட்டமன்ற தேர்தலிலும் செயல்படுத்த இருக்காங்களாம்…
‘‘எல்லா கட்சிலையும் இருக்கின்ற தங்கள் சமுதாயத்தின் ஒட்டுமொத்த வாக்கையும் பெறுவதோடு, அனைத்து தரப்பிரின் வாக்கையும் பெறவேண்டும் என்பதுக்காகவே இந்த முடிவை பா.ம.க. எடுத்து இருக்குன்னும் அரசியல் விமர்சகர்கள் பேசிக்கிறாங்கோ…’’ என்று தனது தகவலை நிறைவு செய்தார் நிருபர் அழகுமணி.
‘‘கூட்டணி வேண்டுமான்னு ஆலோசிக்கிறாங்களாம் பா…’’ என்று அடுத்த தகவலை ஆரம்பித்தார் போலீஸ் நிருபர் ‘டெரர்’ டேவிட்.
‘‘அது எந்த கட்சியில் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கோ…?’’ என்று கேட்டார், நிருபர் அழகுமணி.
‘‘சட்டசபை தேர்தலுக்காக கூட்டணி அமைக்கிறதுல அரசியல் கட்சிகள் தீவிரமா ஈடுபட்டு வராங்க… கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்துக்கொண்ட தி.மு.க.- காங்கிரஸ், அதன்பின்பு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லைன்னு சொன்னவுங்க இப்ப மீண்டும் சேர்ந்துட்டாங்க பா…
‘‘இந்த கூட்டணியை மற்ற அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருது… இதனிடையே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்ன்னு அ.தி.மு.க. அரசு கோரிக்கை வச்சி இருக்கு பா…
‘‘இதனால் அதிர்ச்சி அடைந்த கருணாநிதி 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்ன்னு குரல் கொடுத்து வருகிறார்… கருணாநிதியின் இந்த திடீர் கோரிக்கையை எப்படி எதிர்ப்பதுன்னு காங்கிரஸ் கட்சி மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறதாம் பா…’’
‘‘இந்தநிலையில் தி.மு.க.வின் மூத்த மாவட்ட செயலாளர்கள் சிலர் ஸ்டாலினிடம் காங்கிரஸ் கூட்டணி வேண்டுமான்னு யோசனை செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லிக்கிறாங்க… தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகள் அதிகரித்து விட்டது, 4 சதவீதம் ஓட்டு இருக்குன்னு அந்தகட்சியில், அதிக ஆதரவாளர்களை கொண்டவர்ன்னு சொன்ன வாசனும் இப்ப அங்கு இல்லை அதனால் காங்கிரஸ் கூட்டணி பத்தி யோசிக்கனும்ன்னு சொன்னதாக பேச்சு அடிப்படுகிறது பா…’’
‘‘அதேநேரத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை விவகாரத்தில், அ.தி.மு.க. கொடுக்கும் அளவுக்கு நாம் குரல் கொடுத்தாலும்… காங்கிரஸ் நம்மோடு இருப்பதை காரணம் காட்டி 7 பேர் விடுதலைக்கு நாம் எதிரானவர்கள் என்று மக்களிடம் திசை திருப்புவார்கள் என்றும் அந்த மாவட்ட செயலாளர்கள் ஸ்டாலினிடம் சொன்னதாக சொல்லிகிறாங்க பா…
‘‘அதுக்கு ஸ்டாலின் கூட்டணி இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை, உங்கள் கருத்தை தலைவரிடம் சொல்கிறேன்னு சொல்லி இருப்பதாக  பேசிக்கிறாங்க… இது குறித்து கருணாநிதி என்ன முடிவு எடுப்பாருன்னு தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பா பேசிக்கிறாங்களாம் பா …’’ என்று பிரஸ் கிளப் விவாதத்தை நிறைவு செய்தார் போலீஸ் நிருபர் ‘டெரர்’ டேவிட்.

Leave a Reply