- செய்திகள், மாவட்டச்செய்திகள்

பிரஸ் கிளப்

காங்கிரஸ்-மார்க்சிஸ்ட் கூட்டணி, தமிழகத்திலும் அமையுமா?

‘‘முடிவு எடுக்குற கட்டத்துக்கு வந்திட்டாருங்கோ…’’ என்று பிரஸ் கிளப்பில் விவாதத்தை தொடங்கி வைத்தார் நிருபர் ‘ஆல் இன் ஆல்’ அழகுமணி.
‘‘யாரைப் பத்தி சொல்ற பா…?’’ என்று கேட்டார் நிருபர் ‘டெரர்’ டேவிட்.
‘‘தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியை பிரேமலதா விமர்சிச்சதால, விஜயகாந்த் அந்தக் கூட்டணிக்கு போக மாட்டார்னு பேச்சு அடிபடுது… ஆனா, கூட்டணியைப் பத்தி யாரும் பேசக் கூடாதுன்னு விஜயகாந்த் கண்டிப்பா சொல்லிட்டாராம்…
‘‘இந்த நிலைமையில, மதுரை மாவட்டம், திருமங்கலம் பக்கம், காங்கேயநத்தம் கிராமத்துல இருக்கிற தன்னோட குலதெய்வம் வீரசின்னம்மாள் கோவிலுக்கு விஜயகாந்த், மனைவியோட போய் நேத்து தரிசனம் செஞ்சிருக்காருங்கோ…
‘‘முக்கிய முடிவுகளை எடுக்கிறதுக்கு முன்னால, குலதெய்வம் கோவில்லயும், வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில்லயும் ‘பூ’ போட்டு பார்க்கிறது, அவரோட வழக்கமாம்… முடிவு எடுத்த பிறகு, திருப்பதி கோவிலுக்கு போய் வேண்டுதல் செஞ்சுக்குவாராம்…
‘‘அதனால, ‘கூட்டணி யாரோடன்னு விஜயகாந்த் முடிவு எடுக்கிற கட்டத்துக்கு வந்திட்டார்.. 20-ந் தேதி காஞ்சிபுரம் மாநாட்டுல முடிவை அறிவிச்சிடுவார்’னு தே.மு.தி.க.வினர் உற்சாகமாகிட்டாங்கோ…’’ என்று கூறி முடித்தார் நிருபர் அழகுமணி.

‘‘திருமண விழாவுல, திருப்பம் நிகழலாம்னு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கு வே…’’ என்று அடுத்து பேச ஆரம்பித்தார் மூத்த நிருபர் இசக்கிமுத்தன்.
‘‘யாருக்கு எங்க திருமணம் நடக்குது சார்…?’’ என்று கேட்டார் நிருபர் அழகுமணி.
‘‘தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசையின் மகன் திருமணம் சென்னையில இன்று காலை நடக்க இருக்கு… தமிழகத்துல இருக்கிற முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாரையும் தமிழிசை நேர்ல போய் அழைச்சிருக்காங்க வே…
‘‘பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் காலையில நடக்குற திருமணத்துல கலந்துக்கிறது, உறுதிப்படுத்தப் பட்டிருக்காம்… மாலையில நடக்குற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வர்றதா சில தலைவர்கள் சொல்லி இருக்காங்களாம்…
‘‘தி.மு.க. பா.ஜ.க. இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடந்தபோது, இந்த திருமண விழாவுல பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவை தி.மு.க தலைவர் கருணாநிதி சந்திக்கலாம்னு நாம கூட பேசியிருந்தோம்…
‘‘அடுத்த சில நாட்கள்லயே கதை மாறி, காங்கிரஸ் கூட தி.மு.க. கை கோர்த்ததால, அ.தி.மு.க. பக்கம் பா.ஜ.க. பார்வையை திருப்பி இருக்கிறதா இப்ப பேச்சு எழுந்திருக்கு… அதனால, தமிழிசை மகன் திருமண விழாவுல, கூட்டணி விஷயத்துல திருப்புமுனை நிகழும்னு தமிழக பா.ஜ.க.வினர் ஆவலோட காத்திருக்காங்க வே…’’ என்று கூறி முடித்தார் மூத்த நிருபர் இசக்கிமுத்தன்.

‘‘தமிழகத்துலயும் கூட்டணி மாறுமான்னு கேள்வி எழுந்திருக்கு பா …’’ என்று அடுத்து பேச்சை ஆரம்பித்தார் நிருபர் ‘டெரர்’ டேவிட்.
‘‘யாரைப் பத்தி சொல்லுதீரு…?’’ என்று கேட்டார் மூத்த நிருபர் இசக்கிமுத்தன்.
‘‘தேசிய அரசியல்ல பா.ஜ.க.வையும், காங்கிரஸ் கட்சியையும் சமதூரத்துல ஒதுக்கி வைச்சு, இடதுசாரி இயக்கங்கள் அரசியல் நடத்திக்கிட்டு வர்றாங்க… இதுல தலைகீழ் திருப்பமா, வர்ற மேற்குவங்காள சட்டசபை தேர்தல்ல, காங்கிரஸ் கட்சியோட இடதுசாரி இயக்கங்கள் கை கோர்க்கப் போறாங்களாம் பா…
‘‘தேசிய தலைமை மாதிரி தமிழகத்துலயும் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத கூட்டணி என்கிற கோட்பாட்டின்படி, மக்கள் நலக் கூட்டணியில இடதுசாரி கட்சிகள் இருக்காங்க… ஆனா, தேசிய தலைமையே, கூட்டணி விஷயத்துல தலைகீழ் மாற்றத்துக்கு தயாராகிடுச்சு பா…
‘‘அதேபாணியில, காங்கிரஸ் இடம்பெற்றிருக்கிற தி.மு.க. கூட்டணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் வருமான்னு கேள்வி எழுந்திருக்கு…
‘‘காங்கிரஸ் கட்சியோட கூட்டணி சேர்றதைப் பத்தி டெல்லியில இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ‘பொலிட் பீரோ’ கூடி முடிவெடுக்க இருக்காம்… இந்த முடிவால தமிழக அரசியல் கூட்டணியிலயும் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கு.. அதனால, ‘பொலிட் பீரோ’ முடிவை, மக்கள் நலக் கூட்டணியில இருக்கிற கட்சிகள் பதைபதைப்போட எதிர்நோக்கி இருக்காங்க பா…
‘‘இன்னொரு தகவலையும் சொல்லிடுறேன்… 1996 சட்டசபை தேர்தல்ல, இரட்டை இலை, உதயசூரியனுக்குப் பிறகு த.மா.காவின் சைக்கிள் சின்னம்தான், வாக்காளர்களை கவர்ற வகையில இருந்துச்சு… தமிழக வாக்காளர்களுக்கு நன்கு பரிச்சயமான சைக்கிள் சின்னத்துல போட்டியிடுற முடிவுலதான், வாசன் இருக்காராம் பா…
‘‘ஆனா, தேசியக் கட்சியான சமாஜ்வாடி கட்சியின் தமிழக கிளை நிர்வாகிகள், சைக்கிள் சின்னத்தை தமிழகத்துலயும் எங்களுக்கு ஒதுக்கணும்னு தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருக்காங்களாம்…
‘‘தேசியக் கட்சி என்கிற முறையில அந்தக் கட்சிக்கு சின்னம் ஒதுக்குறதுல முன்னுரிமை கிடைச்சதுன்னா, த.மா.கா.வுக்கு சிக்கல் வரலாம் பா…’’ என்று கூடுதல் தகவலை கூறி விவாதத்தை நிறைவு செய்தார் நிருபர் ‘டெரர்’ டேவிட்.***

Leave a Reply