- செய்திகள்

பிரஸ் கிளப் ரிப்போர்ட்

யாருடன் கூட்டணி தே.மு.தி.க. இன்று அறிவிப்பு?
‘‘ஓட்டு வங்கி கணக்குலதான், காய் நகர்த்துறதா சொல்றாங்கோ…’’ என்று பிரஸ் கிளப்பில் விவாதத்தை தொடங்கி வைத்தார் நிருபர் ‘ஆல் இன் ஆல்’ அழகுமணி.
‘‘எதைப் பத்தி சொல்ற பா…?’’ என்று கேட்டார் நிருபர் ‘டெரர்’ டேவிட்.
‘‘2003-ஆம் ஆண்டு விஜயகாந்த், தே.மு.தி.க.வை தொடங்கினார்… 2006-ல் தே.மு.தி.க. சந்திச்ச முதல் சட்டசபை தேர்தல்ல தே.மு.தி.க.வுக்கு 8.38 சதவீத வாக்குகள் கிடைச்சது… விஜயகாந்த் மட்டும்தான் ஜெயிச்சார்… 2009-நாடாளுமன்ற தேர்தல்ல 40 தொகுதிகள்ல தனித்து போட்டியிட்டு, 10.33 சதவீத ஓட்டுகளை வாங்கினாங்க…
‘‘அதனாலதான், 2011-சட்டசபை தேர்தல்ல தே.மு.தி.க.வை, அ.தி.மு.க. தங்களோட கூட்டணியில சேர்த்துக்கிடுச்சு… அந்த தேர்தல்ல தே.மு.தி.க. 7.88 சதவீத வாக்குகளை  வாங்குச்சுங்கோ…
‘‘2014-நாடாளுமன்ற தேர்தல்ல பா.ஜ.க. கூட்டணியில போட்டியிட்டதுல, தே.மு.தி.க. ஒரு தொகுதியில கூட ஜெயிக்கலை… தே.மு.தி.க.வுக்கு கிடைச்சது, 5.14 சதவீத ஓட்டுகள் மட்டுமே…
‘‘அதாவது, ஒவ்வொரு தேர்தல்லயும் தே.மு.தி.க.வின் ஓட்டு வங்கி சரிஞ்சுக்கிட்டே வந்திருக்கு… அதோட, கடந்த 2 ஆண்டுகள்ல, விஜயகாந்தோட பல நடவடிக்கைகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளானதால, தே.மு.தி.க. ஓட்டு வங்கியில சரிவு இருக்குமோன்னு தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் சந்தேகம் இருக்காம்…
‘‘இருந்தாலும், குறைஞ்சபட்சம் 5 சதவீத ஓட்டு வங்கியை வைச்சிருக்கிற ஒரே கட்சி தே.மு.தி.க. மட்டும்தான் என்கிற உத்தேச கணக்குலதான், அந்தக் கட்சியை கூட்டணியில சேர்க்க பா.ஜ.க.வும், தி.மு.க.வும் துடியாய் துடிக்கிறதா சொல்றாங்கோ…
‘‘குறிப்பா, தே.மு.தி.கவை நம்பி தி.மு.க. தரப்புல பல கணக்கு போட்டிருக்காங்களாம்… தே.மு.தி.க.வை கூட்டணியில சேர்த்துட்டா, அதை வைச்சு மக்கள் நலக் கூட்டணியில இருந்து சில கட்சிகளை இழுத்திடலாம்னு தி.மு.க. தரப்புல அடுத்த கட்ட திட்டமும் இருக்காங்கோ… ’’ என்று பேச்சை முடித்தார் நிருபர் ‘ஆல் இன் ஆல்’ அழகுமணி.

‘‘தே.மு.தி.க. ஓட்டு வங்கி கூடுமா, மேலும் குறையுமான்னு மே 19ந் தேதி ஓட்டு எண்ணிக்கையில தெரிஞ்சுடும்… அதுக்கு முன்னால, அவங்க யாரோட கூட்டணி சேருவாங்கங்குறதை தெரிஞ்சுக்க, ‘அப்டேட்’ தகவல்களை சொல்றேன்…’’ என்று முன்னுரை கூறிவிட்டு, பேச்சை ஆரம்பித்தார் மூத்த நிருபர் இசக்கிமுத்தன்.
‘‘தே.மு.தி.க. கூட்டணிக்கு வரும்னு தி.மு.க. தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவிச்சு முந்தாநாள் பேட்டி கொடுத்தார்… இதுக்கு, தே.மு.தி.க. தரப்புல இருந்து எதிர்ப்பும் இல்லை…  வரவேற்பும் இல்லை… தே.மு.தி.க. மவுனத்தை, சம்மதமா நினைச்சு, தி.மு.க. தரப்பு ‘குஷி’ ஆகியிருக்கு வே…
‘‘ஆனா, ‘தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்திட்டு வர்றோம்னு’ன்னு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில நேத்து பேட்டி கொடுத்து, தி.மு.க.வின் சந்தோஷத்தை தற்காலிகமானதா ஆக்கிட்டாரு வே…’’ என்று கூறி நிறுத்தினார் மூத்த நிருபர் இசக்கிமுத்தன்.
‘‘அப்படியா சார்… தனித்துப் போட்டியிடவும் தயார் என்கிற ரீதியில தமிழக பா.ஜ.க.வினர் பேசிட்டு இருக்காங்களே…?’’ என்று சந்தேகம் எழுப்பினார் நிருபர் ‘டெரர்’ டேவிட்.
அந்த இடைவெளியில் சூடான ஏலக்காய் டீயை  பருகி முடித்த மூத்த நிருபர் இசக்கிமுத்தன், தனது பேச்சை மீண்டும் ஆரம்பித்தார்.
‘‘பேச்சுவார்த்தையில தமிழக பா.ஜ.க.வினரே இல்லையாம்… பிரகாஷ் ஜவடேகர் மூலமா பா.ஜ.க. தலைமையோட பிரேமலதாவும், சுதீஷூம் பேசிக்கிட்டு இருக்காங்களாம்… இதுல முன்னேற்றம் ஏற்பட்டு, தே.மு.தி.க. வின் எல்லா கோரிக்கைகளையும் ஏத்துக்கிடுற கட்டத்துக்கு வந்திட்டதா சொல்றாங்க வே…
‘‘தே.மு.தி.க.வின் ‘டிமாண்ட்’களை தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி இவங்களிடம் பேசி ஒப்புதல் பெற வேண்டியதுதான் பாக்கின்னு டெல்லியில இருந்து தகவல் பரவிக்கிட்டு இருக்கு…
‘‘யாரோட கூட்டணி என்கிற நாடகத்துக்கு ‘க்ளைமாக்ஸ்’ வந்திடுச்சு… தே.மு.தி.க. மகளிரணி மாநாடு சென்னையில இன்றைக்கு நடக்க இருக்கு… இதுல தி.மு.க.வோடு கூட்டணி உண்டா இல்லையா என்கிறதுக்கான சமிக்ஞைகளை விஜயகாந்த் பேச்சுல இருந்தே தெரிஞ்சுக்கலாம்னு தே.மு.தி.க.வினர் எதிர்பார்ப்போடு இருக்காங்க வே…’’ என்று பிரஸ் கிளப்பில் விவாதத்தை நிறைவு செய்தார் மூத்த நிருபர் இசக்கிமுத்தன்.*

Leave a Reply