- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் 84 படகுகளை உடனே மீட்க வேண்டும்

சென்னை, ஏப்.7-
இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 84 படகுகளையும், சிறைப்பிடிக்கப்பட்ட 4 மீனவர்களையும் விடுவிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
4 மீனவர்கள் சிறைபிடிப்பு
ராமநாதபுரம் மாவட்டதிலுள்ள ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து எந்திர படகு மூலம் 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் 4 பேரையும் இலங்கை கடற்படையினர் கடந்த 5-ந் தேதி அதிகாலை சிறைப்பிடித்து இலங்கையிலுள்ள காங்கேசன்துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு நேர்ந்த இந்த சம்பவத்தை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
நமது மீனவர்களை தொடர்ந்து சிறைபிடித்து செல்லும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுப்பட்டுவருவது துரதிர்ஷ்டவசமானது. இப்படி சிறைபிடிக்கப்படும் மீனவர்கள் இலங்கை சிறைகளில் நீண்டகாலமாக அடைக்கப்படுகிறார்கள். இதனால், அந்த மீனவர்களின் குடும்பங்கள் கடும் துயரத்திற்கும், சிரமத்திற்கு தள்ளப்படுகிறது.
மீனவர்கள் குடும்பங்கள் அவதி
நமது மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வது, நீண்டகாலமாக விடுவிக்காமல் இருக்கின்ற இலங்கை அரசின் கொடுமையான செயல்பாட்டை தங்களின் கவனத்திற்கு அவ்வப்போது கொண்டு வந்து இருக்கிறேன். இப்படி படகுகளை கொடுக்காமல் வைத்திருப்பதால் அந்த படகுகள் சேதமடைவதையும் குறிப்பிட்டு இருக்கிறேன். தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட அந்த படகுகளை இதுவரை இலங்கை அரசு விடுவிக்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தலையிட்டு உடனடியாக 4 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். தவிர பறிமுதல் செய்யப்பட்ட 84 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

Leave a Reply