- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள், மாவட்டச்செய்திகள்

பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

சென்னை, மார்ச் 10-
‘மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு அறிவிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்’ என்று பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு
‘மருத்துவக் கல்லூரிகளில் மாணவ-மாணவிகளை சேர்க்க, தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்துள்ள தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் மத்திய அரசின் முயற்சியை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது’ என்று, கடந்த பிப்ரவரி 2-ந் தேதி நான் தங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப்படிப்பு, முதுநிலைப் படிப்பு ஆகியவற்றுக்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்யும் வகையில், இந்திய மருத்துவக் கவுன்சிலும், இந்திய பல் மருத்துவக் கவுன்சிலும் வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்து கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ம் தேதி, உச்சநீதிமன்றம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கியதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு மாறாக, அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு ஜுலை மாதம் 28-ம் தேதி, அப்போதைய பிரதமருக்கு நான் மீண்டும் கடிதம் எழுதி, உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரும் மனுவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினேன்.
நுழைவுத்தேர்வு முறை
கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ந் தேதி, தங்களிடம் நான் அளித்த மனுவில், மருத்துவக் கல்லூரி பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த நிலைப்பாட்டை, இந்த அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தில் உள்ள மறு ஆய்வு மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன்.
தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதியாகவும், தெள்ளத்தெளிவாகவும் தாம் தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில், இந்திய மருத்துவக் கவுன்சிலின் கருத்துரு அடிப்படையில், மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், மத்திய அரசின் இதர துறைகளின் கருத்துகளை கேட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
ஒழிக்கப்பட்டது

கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களையும் சமநிலைப்படுத்துவதை உறுதிசெய்வதற்கு எண்ணற்ற நடவடிக்கைகளை தமது தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. பொது நுழைவுத்தேர்வில், நகர்ப்புற பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கு இணையாக சமூக – பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் போட்டிபோட முடியாத நிலையைக் கருத்தில் கொண்டு, நகர்ப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் பொது நுழைவுத்தேர்வு முறை அமைந்துள்ளது. இதனால், தீவிர ஆலோசனைக்குப் பின்னர், இளநிலை தொழிற் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு முறை ஒழிக்கப்பட்டது.
முற்போக்குக் கொள்கை
முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளைப் பொருத்தவரை, கிராமப்புறங்களிலும் அதிலும், குறிப்பாக மலை மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் பணியாற்றுவோருக்கு, தமிழக அரசு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறது. முதுநிலை மருத்துவக் கல்வியை நிறைவு செய்யும் மருத்துவர்கள், மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறிப்பிட்ட காலத்திற்கு பணியாற்ற வேண்டும் என்ற ஒப்பந்தத்தை தமிழக அரசு வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது.
இந்நிலையில், எந்த ஒரு பொது நுழைவுத் தேர்வையும் அறிமுகப்படுத்துவதால், தமிழக அரசின் இதுபோன்ற முற்போக்குக் கொள்கை பயனற்றுப் போவதுடன், மாநில அரசின் சமூகப் பொருளாதார நோக்கங்களையும் தடுப்பதாக அமையும்.  மேலும், தமிழக அரசின் நிர்வாகத் தேவைகளையும், சமூக-பொருளாதாரச் சூழலையும் இந்த தேசிய நுழைவுத்தேர்வு பாதிக்கும்.
இதனால், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவுக்கு தமிழகத்தின் உறுதியான எதிர்ப்பை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். பொது நுழைவுத்தேர்வு தொடர்பாக, உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு மீதான விசாரணை வரும் 15-ந் தேதி நடைபெறவுள்ளது. அப்போது, மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ததை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறைக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Leave a Reply